Article No. 2058
Written by S NAGARAJAN
Swami_48@yahoo.com
Date : 10 August 2015
Time uploaded in London :–7-48 AM
BY ச.நாகராஜன்
பாரதியாரின் முக்கியமான கட்டுரை
‘ஶ்ரீ சிவாஜி உத்ஸவமும் ஆங்கிலோ இந்தியர்களும்’ என்ற தலைப்பிட்ட மகாகவி பாரதியாரின் கட்டுரை அருமையான ஒன்று.
பரவலாகப் படிக்கப்படாத இந்த கட்டுரை அபூர்வமான ஒன்று. 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிட்ட விஜயா இதழில் இது வெளி வந்துள்ளது.
மிக நீண்ட கட்டுரையான இதில் நல்ல பல கருத்துக்களை அள்ளித் தந்துள்ளார் மாபெரும் கவிஞர்.
ஆங்கிலேயருக்கு பதில்
ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் அராஜகம் விருத்தியாகிறதாம் என்ற ஆங்கிலேயர்களின் கூற்றைச் சொல்லி பாரதியார் தரும் மறுமொழி இது:-
“ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் நாடெங்கும் அராஜகம் எப்படிப் பரவும்? இவருடைய ஜன்ம தினத்தன்று இவருடைய ஜீவ சரித்திரம் ஒவ்வொரு கூட்டத்திலும் நன்றாக விளக்கப்படுகிறது.இவருடைய அந்தரங்கக் கருத்தை ஒரு சிறிது கூட மறைக்காமல் வெளியிடுகிறார்கள். இவர் முதல் முதலில் சிறு கூட்டம் கூட்டமாக மராட்டியர்களைச் சேர்த்துக் கொண்டு மகமதிய அதிகாரிகளைத் தாக்கினதையும், அவருடைய சேனை மெல்ல மெல்ல அதிகரித்ததையும், அவருக்கு நேர்ந்த தோல்விகளையும் கஷ்டங்களையும் வெளிப்படையாகத் தான் சொல்கிறார்கள். அவர் அப்சல்கான் என்னும் மகமதிய அதிகாரியைக் கொன்றதையும் அவர் தனித் தனி மகமதியர்களுக்குச் செய்த உதவியையும் ஒத்திட்டுப் பார்த்தால் அவருடைய செய்கை சுயநலத்தின் பொருட்டல்லவென்றும், மகமதியர்களின் பேரில் வீணான துவேஷத்தால் செய்யவில்லையென்றும் விளங்குகிறது. அவர் விடாமுயற்சியோடு போர் செய்தது கொடுங்கோன்மையோடு தான் என்பது அவர் ஆட்சிக்குள்ளிருந்த மகமதிய குடிகளின் காபந்து ஒன்றினாலேயே விளங்கும்.”
இப்படி சிவாஜி மத சமரஸத்துடன் தன் கீழ் வாழ்ந்த முஸ்லீம்களை நல்ல முறையில் நடத்தினார் என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார்.
ஆரிய பூமியாகிய இந்தியாவில் ஆரிய தர்மம் தழைக்கட்டும்!
ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் வாழ முடியாவிடில் அவர்கள் எங்கு தான் போவார்கள்? இந்தக் கவலையை அடுத்து வரும் பாராவில் அவர் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:-
“மகமதிய தர்மம் அபிவிருத்தியடைய எப்படி துருக்கி, அராபியா, பாரசீகம் முதலியவை இருக்கின்றனவோ அதே மாதிரி ஆரிய தர்மம் அபிவிருத்தியடைய உலகத்தில் ஒரு இடம் வேண்டாமா என்னும் சர்ச்சை தான் அவர் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. ஆரிய தர்மம் தழைத்தோங்க ஆரிய பூமியாகிய இந்தியாவை விட வேறு எந்த இடம் சிலாக்கியமானது?
இந்தியாவில் ஆரிய தர்மம் வளர வேண்டுமானால் ஹிந்துக்கள் சுதந்திரமடைவது முக்கியமல்லவா? இதுதான் மஹாராஜாவாகிய சத்திரபதி சிவாஜியை ஸ்வராஜ்யம் ஸ்தாபிக்க முயலும்படி செய்தது”
மிக அருமையாக சிவாஜியின் நோக்கத்தை இப்படிக் கூறும் மகாகவி சுதந்திர இந்தியா பற்றிய தன் கற்பனையையும் தெளிவாக்கி விட்டார்.
ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அவர் நியாயப் படுத்துகிறார். ஆங்கிலேயர்கள், 1) இதனால் அராஜகம் விருத்தியாகிறது 2) ஶ்ரீ சிவாஜி மஹாராஜாவின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுவதினால் தேசபக்த கட்சிக்காரர்கள் அதிகமாகிறார்கள் என்ற இரு காரணங்களை முன் வைத்ததைச் சுட்டிக் காட்டிய மகாகவி முதல் குற்றச்சாட்டை காரணம் காட்டி ஏற்க மறுத்து விட்டார்.
அடுத்ததைப் பற்றி அவர் கூறுவது இது:- “இதில் ஒன்று வாஸ்தவம் தான். ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் தேசபக்தர்கள் அதிகமாகிறார்கள். இந்த உத்ஸவமே அதற்காகத் தான் ஏற்பட்டது. நமக்குள் தேசபக்தியில்லையென்பது ஒரு குறைவாக ஆங்கிலேயர்களே சொல்லியிருக்கிறார்கள். அதை நம்மில் நிலைநாட்டுவதற்காகத் தான் நம் தேச சரித்திரங்களை நமக்குச் சொல்வதாக பெருமை சொல்லிக் கொண்டு வந்தார்கள். இந்த தேசபக்தி ஆங்கிலேயர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்ல்லை. நம் முன்னோர்களின் சரித்திரத்திலேயே இருக்கிறதை நம் ஜனங்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்ட ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் நடத்தினால் இவர்களால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் தான் தேசபக்தர்களிளினின்று அராஜகர்கள் உண்டாகிறார்கள் என்கிறார்கள்.”
இளம் வயது மேதையின் தீர்க்கதரிசனம்
1882ஆம் ஆண்டு பிறந்த மகாகவிக்கு இந்தக் கட்டுரை எழுதும் போது வயது 28 தான்!
ஆனால் தெளிவான சிந்தனையையும் தீர்க்கதரிசன நோக்கையும் அவரது கட்டுரைகள் அனைத்தும் கொண்டிருப்பது நமக்கு பிரமிப்பை ஊட்டுகிறது.
நடை, உடை, பாவனை மாறாத நிலையில இன்றும் இருக்கும் முஸ்லீம்களை பூர்வத்தில் ஹிந்துக்களாய் இருந்தவர்கள் என்பதைச் சொன்னவர் ஒரு தாய் வயிற்றினராக ஒருங்கிணைந்து வாழ்வதை வற்புறுத்துகிறார்; ஆனால் அதே சமயம் அவர்களை மதம் மாறுமாறு தூண்டவில்லை. தேசத்தை நேசி என்கிறார்.
பாரதியாரின் ஹிந்து தேசீயம் பற்றிய கட்டுரைகள் பரவலாக அறியப்படவில்லை.
இவற்றைப் படிப்பதும் பரப்புவதும் பாரதி ஆர்வலர்களின் பணியாக அமைதல் வேண்டும். வலிமை வாய்ந்த இந்தியா உருவாக வேண்டும்!
(படங்கள், பிற வெப்சைட்டுகளிலிருந்து, எடுக்கப்பட்டவை; நன்றி)
**************
You must be logged in to post a comment.