கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதியாக்கும் அதிசய மந்திரம்! (Post No.5283)

Written by London swaminathan

Date: 3 August 2018

 

Time uploaded in London – 6-52 AM   (British Summer Time)

 

Post No. 5283

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதியாக்கும் அதிசய மந்திரம்! (Post No.5283)

 

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

 

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

 

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

 

சிவ சிவ என்னச் சிவகதி தானே

திருமூலரின் திருமந்திரம்

 

பொருள்

 

பாவிகள், சிவன் (கடவுள்) நாமத்தை உச்சரிக்க மாட்டார்கள்; பாவம் செய்தவர்களும் சிவ, சிவ என்ற நாமத்தை உள்ளன்போடு உச்சரித்தால் பாவங்கள் போகும். சிவன் நாமத்தை உச்சரித்தால் மனிதனும் தேவர் ஆகிவிடுவான். தொடர்ந்து சிவன் நாமத்தை உச்சரிப்பவர்கள் சிவனுடன் ஒன்றிவிடுவார்கள்.

 

‘நாவுக்கு அருங்கலம் நமச்சிவாயவே’ என்று அப்பர் பெருமான் சொன்னதும் இதனால்தான்.

 

இதை விளக்க ஒரு கதை உண்டு

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சந்தித்த பெரிய பக்தர்களில் ஒருவர் கிருஷ்ண கிஷோர். அவர் ராம பிரானை வழிபடுபவர். அரியதாகா என்னுமிடத்தில் வாழ்ந்தார்.அவரைப் பற்றி ராமகிருஷ்ணர்  சொன்னதாவது:

 

“எனக்கு முதலில் தெய்வீகப் பரவச நிலை ஏற்பட்டு அதிலேயே  ஆழ்ந்து கிடந்தபோது  , என்னால் உலக ஆசை பிடித்த சாதாரண மக்களோடு இருக்கவே முடியாது. நான் கடவுள் வெறி பிடித்து , கடவுள் பற்றிய விஷயங்களையே கேட்க விரும்பினேன். மஹாபாரதம் எங்கே நடக்கும்? பாகவதம் எங்கே நடக்கும்?

அத்யாத்ம ராமாயணம் எங்கே நடக்கும்? என்று அலைந்தேன். சில நேரங்களில் கிருஷ்ண கிஷோரிடம் செல்வேன். அவருக்குக் கடவுளிடம் அற்புதமான நம்பிக்கை இருந்தது.

 

ஒருமுறை கிருஷ்ண குமார் பிருந்தாவனத்துக்குச் சென்றிருந்தார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. போகும் வழியில் இருந்த ஒரு கிணற்றடிக்குச் சென்றார். அங்கே ஒருவன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கிஷோர் அவனிடம் சென்று தமக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தரும்படி கேட்டார். அவனோ தான் மிகவும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன் என்றும் அவருக்குத் தண்ணீர் எடுத்துத் தருவது பாவம் என்றும் கூறினான்.

 

உடனே கிருஷ்ண கிஷோர் அவனிடம் ‘ சிவ, சிவா’ என்று சொல்லச் சொன்னார். அவன் சொன்னதும் நீ உயர்குலத்தவன் ஆகிவிட்டாய், உன் கையாலேயே தண்ணீர் இறைத்துக் கொடு’ என்றார். அவனும் தந்தான். கடவுளின் திருநாமத்தில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

 

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்என்று திருமூலர் சொன்னது எவ்வளவு உண்மை! நாடு முழுதும் இந்த நம்பிக்கை உண்டு!

 

அஜாமிளன் கதை புராணத்தில் வருகிறது எவ்வளவு பாபம் செய்த போதிலும் சாகும் நேரத்தில் மகன் பெயரான நாராயணன் பெயரைச் சொல்லி அழைத்த ஒரே காரணத்தினால் அவன் எல்லா பாபமும் நீங்கப் பெற்றான்.

 

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பலஸ்ருதியிலும் சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தமும் சிவன் என்ற சப்தமும் எல்லாப் பாவங்களையும் போக்கி எல்லோரையும் உயர் நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது. இதை அப்பர் சுவாமிகள் , திருமூலர், சம்பந்தர் முதலியோரும் ஆழ்வார்களும் நமக்கு பாடல்களால் உணர்த்தியுள்ளனர்.

 

சிவ, சிவ!                                          நாராயண, நாராயண!!

 

–சுபம்–

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463)

Date: 6 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-52 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4463

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சிவ நாம மகிமை

 

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!

 

ச.நாகராஜன்

 

1

சிவ நாம மகிமையை முற்றிலும் சொன்னவர் யாரும் இல்லை.

தமிழில் ஆயிரக்கணக்கான துதிப் பாடல்களால் சிவனைத் துதிக்கலாம்.

பன்னிரெண்டு திருமுறைகளும், ஏராளமான துதிப் பாடல்களும் இருக்கின்றன. இத்துணை துதிகள் இருந்தாலும் கூட, சிவ சிவ என்று சொன்னாலே அனைத்து தீவினைகளும் போகும்; நல்வினை சேரும்; அதன் விளைவாக அனைத்து நலன்களும் அடைய முடியும் என்று சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர் சிவப்பிரகாச சுவாமிகள். இவரை ‘துறைமங்கலம் சிவபிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவன் அநுபூதிச் செல்வர் என்ற பெயர்களால் பக்தர்கள் போற்றிப் புகழ்வர்.

 

32 வயதே வாழ்ந்தார்; 34 நூல்களுக்கும் அதிகமான நூல்களை இயற்றினார்; ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.

தமிழ் இவர் வாக்கில் விளையாடியது; அற்புதங்களை நிகழ்த்தியது.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை கண்டனம் செய்து இவர் இயற்றிய ஏசு மத நிராகரணம் அபூர்வமான ஒரு நூல். ஆனால் அதன் பிரதிகளில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை.

ராபர்ட் டி நொபிலி என்ற கபட வேஷதாரியிடம் வாதிட்டு அவரை இவர் வென்றார் என்பர். சிலரோ வீரமாமுனிவருடன் வாதிட்டு அவரை இவர் தோற்கடித்தார் என்பர்.

தமிழ் கற்க விரும்பும் அனைவரையும் முதலில் சிவப்பிரகாச சுவாமிகளின் நூலைப் படிக்குமாறு தமிழ்ப் பண்டிதர்கள் கூறுவது மரபு.

 

அப்படி ஒரு அற்புதமான கற்பனை வளமும் கருத்து வளமும் சொல் வளமும் இலக்கண நயமும் இவரது நூல்களில் மிளிரும்.

சிறந்த சிவ பக்தரான இவர் இயற்றியுள்ள நூல்களில் ஒன்று தான் சிவ நாம மகிமை என்னும் குறு நூல். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

 

2

சிவ நாம மகிமை என்ற இந்த நூல் பத்துக் கலிவிருத்தப் பாடல்களையும் இறுதியில் ஒரு அறுசீர் விருத்தத்தையும் கொண்டுள்ளது.

 

சிவ நாமம் எல்லையற்ற மகிமை கொண்டது. சாதாரணமாக சிவ சிவ என இரட்டித்து இந்த நாமத்தைக் கூறுவது வழக்கம்.

எல்லையற்ற பெருமைகளில் சிலவற்றை இந்த நூல் விளக்குகிறது.

 

வேத மாகமம் வேறும் பலப்பல

ஓதி நாளு முளந் தடு மாறன்மின்

சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்

தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே

என்பது முதல் பாடல்.

 

வேதம் ஆகமம் போன்ற அனைத்தும் கற்பதற்குக் கடினம். அதை ஓதி உளம் தடுமாற வேண்டாம். எளிமையாக சிவ சிவ என்று கூறுங்கள் தீதெலாம் தொலைந்திடும் என்று அருளுகிறார் சுவாமிகள் இதி.

 

சாந்தி ராயண மாதி தவத்தினான்

வாய்ந்த மேனி வருத்த விறந்திடாஅப்

போந்த பாதக மேனும் பொருக்கெனத்

தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே

என்பது நான்காவது பாடல்.

சாந்திராயணம் உள்ளிட்ட கடினமான விரத முதாலனவற்றை மேற்கொண்டு உடலை ஏன் வருத்துகிறீர்கள்? எந்தப் பாதகமானாலும் பொருக்கெனப் போய் விடும் சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இந்தப் பாடலில்.

தீய நாளொடு கோளின் செயிர்தபும்

நோய கன்றிடு நூறெனக் கூறிய

ஆயுள் பல்கு மறம் வளர்ந் தோங்குறுந்

தீய தீருஞ் சிவ சிவ வென்மினே

என்பது ஆறாவது பாடல்.

 

நவ கிரகங்களின் தோஷம் சிலரது ஜாதகத்தில் காணப்படும். சில நாள்கள் தீய பலனைத் தருவதாக அமையும். இந்த தீய நாளொடு, நவ கிரகங்களின் குற்றமும் தீரும் – சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இதில்.

இறுதியாக உள்ள ஆசிரிய விருத்தப் பாடல் மூலம் எப்படிப்பட்ட இழிந்தவன் ஆனாலும் கூட சிவ நாமத்தால் உய்யலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறி மனித குலத்திற்கு ஆறுதல் அளிக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

 

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்

கொலைவேட னெனினும் பொல்லாப்

பழிமருவு பதகனெனி னும் பதிக

னெனினுமிகப் பகரா நின்ற

மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்

றொரு முறைதான் மொழியில் லன்னோன்

செழியநறு மலரடியின் றுகளன்றோ

வெங்கள் குல தெய்வ மென்ப.

 

எப்படிப்பட்ட பாதகனாக இருந்தாலும், பதிதனாக – இழிந்தவனாக – இருந்தாலும் கூட சிவ சிவ என்று ஒரு முறை சொன்னாலும் கூட அவன் உய்வான் என்பதை அநுபூதி கண்ட பெரியவர் கூறுகிறார்.

 

 

சிவப்பிரகாச சுவாமிகளின் வரலாறு மிக அற்புதமானது. அவரது பாடல்களோ நம்மை மேல் நிலைக்கு உடனடியாக உயர்த்தக் கூடியது.

 

பாடலகளை ஓதுவோம். சிவ சிவ என்போம். நாளும் கோளும் நமக்குத் தீயன செய்யா; நல்லதே செய்யும் என்று நம்புவோம்.

 

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ!

***