WRITTEN BY DR. A. NARAYANAN
Post No. 10,450
Date uploaded in London – – 16 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சீதையும் கோதையும்
வேள்விச்சாலையமைக்க நிலம்
வெட்டக் கருப்பையில் தோன்றுவது
கலப்பை நுணிக் களி மண்ணில்
கண்டெடுக்கப் போர் முனையறிந்த
அரசனுக்கு ஏர் முனை ஏந்தியதோ
மகள் அவதாரமான புவிமகளே
நில மகளாயினும் மிதிலை அரசுக்குக்
குல மகள் மைதிலி சனக மன்னனின்
செல்வியாகி சானகி எனும் பெயர்
சூடி ராசியத்திற்கோர் ராச இலக்குமி
குடியின் கொடி மலரெனப் பூரித்தப்
புரவலனறியா இவளே வால்மீகீ
முனிவன் படைத்த ராமாயண ஆதி
காவிய நாயகி சீதையே அவதார
ஜெயராமனின் தாரமான தாரகையே.
தோளிணைந்த பூக்குடலியோடு மலர் கொய்ய
தோட்டம் சென்ற விட்டுசித்தன் தண் துழாய்
செடியடியில் மலர் தாமரை எழில் வழிந்
தோடி மதியொளி வீசிய மதலையைக் காண
மடி தவரி மண் தவழ்ந்த இப்பூங்குழலி
மலர் கொய்யும் கைக்கு மாலனருளிய
மாலையென மார்பணைத்து கோதை எனும்
பெயர் சூட்டி அன்னையுமபிதாவும் ஆசானுமாய்
வளர்த்தவனிதை வாய் மொழிந்ததோ
வாசுதேவன் மூச்சுக் காற்றோ முகுந்தன்
பருகும் நீரும் புசியுமுணவும் கண்ணனே என
சிறையிலே பிறந்தோனை மனதிலே சிறை
வைத்துக் கவிதையே விதையாகி கண்ணனே
செடியாகக் கொடியாயவன்மீது தவழ்ந்த
கோதையே கோவிந்தனையே ஆண்டாள்
அங்கு அறியானோ அரசர்கோன் நிலமீன்ற
அணங்கு சீதை அனந்தன் மார்புறங்கும்
அலைமகளேயென இங்கு புரியானோ பெரி
ஆழ்வான் விட்டு சித்தன் தன்மண் மகளே
அச்சுதன் சித்தம் கவரும் கோதையென
–நாராயணன் (Dr A Narayanan Ph.D., London)
xxxx
நாதமா ராகமா வேதமா?
பாடலாமோ பண்ணிசைக்கு ஆடலாமோ
வீணையின் நாதத்தில் வாணியின் வாசம்
வேய்ங்குழலிசையில் வேணுகானனின் சுவாசம்
ஏழு சுவரங்களில் எண்ணற்ற ராகங்கள்
எடுத்துப் பாட ஏழு சன்மங்களும் போதாது
சுருதியும் லயமும் சுவரங்களோடிணைந்து
சுகமான ஒலியாய் எழுவதே தரமான ராகம்
சுவர்கமே கேட்கும் அந்த சுவையான வேதம்
- Dr A Narayanan, London
XXX
ஓயாத ஆசை
மண்ணிலே ஓடும் தண்ணீர்
மனதிலே ஓடும் ஆசை
எண்ணிலாப் பொருள்கள் கண்டு
எனக்கு வேண்டுமென்றேங்கும்
மனதைப் பற்றியதாசையோ
மலருக்கு மலர் தாவும் தேனீக்களாக
தேனீக்களோ தேடுவது தேனொன்றே
தேரா இம்மனிதனோ தேடுவது பலவும்
நிறை வான பின்னும் குறையாத
ஆசை அலைகள் போராது போராதென
ஓசையிட நேராத ஆசையிலும்
மாறாது ஆறாத இவனாசை
அடங்குவதோ ஆறடி மண்ணிலே
Dr .A. நாராயணன்
xxx subham xxxx
tags – Dr A நாராயணன், சீதை, கோதை, ஓயாத ஆசை, நாதமா வேதமா