சீனா, ஜப்பான், தமிழ் சிலப்பதிகாரம் அதிசய ஒற்றுமை!

waterfall clear
otowa girls

Three waterfalls at Kiyo Mizu Dera Temple in Kyoto

எழுதியவர்:—- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1318; தேதி:– 30 September 2014.

லண்டனில் எங்கள் குடும்ப நண்பர்கள் டாக்டர் ரெங்கநாதன் தம்பதியினருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். ஜப்பானில் க்யோடோ (Kyoto) என்னும் நகருக்குப் போனபோது ‘மூன்று நீர்வீழ்ச்சிக் கோவிலை’ப் பார்த்ததாகவும் மூன்றாகப் பிரிந்து விழும் நீர்த்தாரையில் ஒரு நீர்த்தாரையின் நீரைக் குடித்தால் நீண்ட காலம் வாழலாம் என்றும் இன்னொன்றின் நீர் நல்ல அறிவைக் கொடுக்கும் என்றும் மற்றொன்று ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்றும் சொன்னார். அட, இதே போல தமிழ் காப்பியம் சிலப்பதிகாரத்திலும் இருகிறதே என்று சொன்னேன். ஆக இருவரும் வியப்பான செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். இதோ அந்த விவரங்கள்:

ஜப்பானில் ஒடொவா மலை மீது கியோ மிசு டேரா (Kiyo Mizu Dera) என்ற போதிசத்வர் கோவில் இருக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் மிகப் பழமையான புத்தமதப் பிரிவு இந்தக் கோவிலைக் கட்டியது. இது கலை வேலைப்பாடு மிக்க ஒரு அற்புதமான பொக்கிஷம். இதனால் யுனெஸ்கோ நிறுவனம் இதை உலகப் பாரம்பர்ய சுற்றுலாத் தலம் என்று அறிவித்துவிட்டது.

கியோ மிசு தேரா என்றால் ‘’தூய நீர்ப்பெருக்கு’’ என்று பொருள். மலையில் இருந்து வரும் ஒரு சிற்றாற்றின் நீர் மூன்றாகப் பிரிந்து விழுகிறது. முன் சொன்னது போல ஒவ்வொன்றைக் குடித்தால் ஒரு பலன் கிட்டும். ஆயினும் மூன்றையும் ஒருவர் குடிப்பது பேராசைக்குச் சமம் என்று ஒரு ஐதீகம் இருப்பதால் எதேனும் இரண்டின் நீரை மட்டும் ஒரு கரண்டி மூலம் பிடித்து மக்கள் குடிக்கின்றனர்.

kiyomizudera_temple_kyoto

இந்தக் கோவிலின் வேறு சில சிறப்புகள்:
1).கோவிலின் முக்கிய மண்டபம் தேசிய கலைப் பொக்கிஷம். இங்கே 15 வர்ண ஓவிய அறைகள் இருக்கின்றன. 2) மூன்று பகோடாக்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன.3) நாற்பது அடி உயர மரத்தூண்கள் மீது ஒரு ஆணி கூட இல்லாமல் மண்டபம் அமைக்கப்பட்டது. இதில் 410 மரப் பலகைகளை இணைத்து மேடை போட்டுள்ளனர். 4) 11 தலைகளும் ஆயிரம் கைகளும் உடைய போதிசத்துவர் அங்கே இருக்கிறார். 5) பெரிய அலங்கார வாயில்கள் இருக்கின்றன. 6) பல முறை தீவிபத்துக்கு உள்ளான இக்கோவிலின் இப்போதைய அமைப்புகள் 400 ஆண்டுக்கு முன்னால்தான் கட்டப்பட்டன.

இந்த நீர்வீழ்ச்சி நீரைகுடித்தால் படிப்பு வரும் (அறிவு) என்பதால் நிறைய மாணவர்களும் இதை நோக்கிப் படை எடுக்கின்றனர்.

map
Kiyo Mizu Dera Temple map

சிலப்பதிகார அதிசயம்
சிலப்பதிகாரத்தில் இதே போன்ற நம்பிக்கை இருப்பதைக் காணமுடிகிறது. சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வரும் கண்ணகியும் கோவலனும் வழியில் யாக யக்ஞங்களைச் செய்யும் ஒரு பிராமண அறிஞரைச் சந்தித்தனர். அவரிடம் மதுரைக்கு வழிகேட்ட போது அவர் கோவலனிடம் கூறுவதாவது.

பாதை ஓரிடத்தில் இரண்டாகக் கிளை விடும். அதில் வலப்பக்கமாகப் போனால் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே மதுரைக்குப் போகலாம். இடப் பக்கமாகப் போவீரானால் மூன்று பொய்கைகள் இருக்கும்.

விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின்
புண்ணிய சரவணம் பவகாரணியோடு
இட்டசித்தி எனும் பெரபோகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்று உள.. – காடுகாண் காதை, சிலப்பதிகாரம்.

முதலில் திருமாலிருங்குன்றத்தைக் காண்பீர்கள். பின்னர் ஒரு குகை வரும். அதுவழியாகப் போனால் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்ற மூன்று குளங்கள் இருக்கும். புண்ணிய சரவணத்தில் நீராடினால் ஐந்திரம் கற்ற பெருந்தமிழ் வல்லுனர் ஆவீர். பவகாரணியில் நீராடினால் சென்ற பிறப்பில் என்ன செய்ததால் இப்பிறப்பில் ஏன் இப்படிப் பிறந்தீர்கள் என்பதை அறியலாம். இட்ட சித்தியில் மூழ்கினாலோ நினைத்த பொருள் எல்லாம் கிட்டும். இதற்குப் பின் வரோத்தமை என்பவளைப் பார்ப்பீர்கள். அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லாவிடினும் அவள் உங்களை அக்கரையில் சேர்த்துவிடுவாள்.

இந்த மூன்று பொய்கை தரும் பலன்களும் ஓரளவு ஜப்பானிய நீர்வீழ்ச்சிப் பலன்களை ஒத்து இருக்கும். இரண்டு இடங்களிலும் புனித நீர் முன்னிலையில் தான் இப்படி அற்புதங்கள் நடகும். நாங்கள் மதுரையில் வசித்த காலத்தில் அடிக்கடி அழகர் கோவில் சென்று மலைமீதுள்ள பழமுதிர்ச் சோலைக்கும் அதையும் தாண்டி மேலேயுள்ள சிலம்பாற்று நீர்வீழ்ச்சிக்கும் செல்வோம். அங்கு சிலம்பாறு என்னும் ஆற்றின் நீர் ஜப்பானில் விழுவதுபோலவே மெல்லிசாக ‘’நூபுர கங்கை’’ என்ற பெயரில் விழும். அதில் குளிப்போம்.

Fulushouqi
Fu Lu Shou

சீனாவில் பூ– லூ – ஷூ

சீனாவிலும் கூட 800 ஆண்டுகளாக இப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது. பூ– லூ – ஷூ (Fu Lu Shou) என்ற மூன்று நட்சத்திர தேவர்கள் இருப்பதாகவும், இவர்கள் மூவரும் சந்தோஷம், சௌபாக்கியம், நீண்ட ஆயுளை வழங்குவர் என்றும் சொல்லுவர். இந்த மூன்று தேவர்களும் இந்தியக் கடவுள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் பூ என்னும் தேவன் குரு/வியாழன் (Jupiter) கிரகம் என்பர். லூ என்பவர் சப்தரிஷி மண்டலத்தில் இந்துக்கள் வணங்கும் வசிஷ்ட நடசத்திரம் (Ursa Major constellation) என்பர். வசிட்டர் மனைவி அருந்ததி பற்றி சங்கத் தமிழ் இலக்கியத்தில் பல பாடல்கள் வரும். மூன்றாவது நட்சத்திரமான சூ என்பவர் அகத்திய (Canopus) நட்சத்திரம் என்பர். தென் வானத்தில் ஜொலிக்கும் அகத்திய நட்சத்திரத்தை சீனாவின் வடகோடியில் உள்ளவர்கள் பார்க்கக்கூட முடியாது. ஆகவே இவர்கள் இந்தியரிடமிருந்தே இவற்றைக் கற்றனர்.

((அகத்திய நட்சத்திரம் வட அட்ச ரேகையில் வசிப்போருக்கு ஒரு எல்லை வரைதான் தெரியும். எடுத்துக்காட்டாக லண்டனில் வசிக்கும் நாங்கள் அகத்திய நட்சத்திரத்தைப் பார்க்கமுடியாது. இந்தியாவில் இருந்தபோது பிரகாசமான அகத்திய நட்சத்திரத்தையும் திரிசங்கு நட்சத்திரத்தையும் பார்த்து மகிழ்ந்தோம்.))

swami_48@yahoo.com