மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39 (Post No.4251)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 5-18 am

 

Post No. 4251

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39

 

 

சீனி.விசுவநாதன் பதிப்பித்த காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்!

 

ச.நாகராஜன்

 

 

பாரதி இயலில் ஒரு அரிய பணியாக பாரதி அன்பர் சீனி.விசுவநாதன் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். முதலிடம் பெறும் நூலாக நாம் கருதும் ஒரு சிறந்த நூல் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற நூல்.

பாரதியாரின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கால வரிசையிலான ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருப்பதாக ‘என்னுரையில்’ கூறும் அன்பர், இந்த ஐந்தாம் தொகுதியில் 3-7-1909 முதல் 25-9-1909 முடிய உள்ள மூன்று மாதக் காலப் பகுதியில் இந்தியா பத்திரிகை இதழ்களில் பாரதி எழுதிய கருத்தோவியங்கள் இடம் பெற்றுள்ளன என்கிறார்.

 

நல்ல சீரிய முயற்சி.

 

432 பக்கங்கள். விலை ரூ 150/ 11-12-2004 வெளியீடு. மொத்தம் ̀116 கட்டுரைகள் உள்ளன.

 

பாரதி பொக்கிஷம் இது.

 

ஏனெனில் தம் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம அழகுற பாரதியார் இந்த மூன்று மாத காலத்தில் பதிவு செய்துள்ளார்.

 

பதிப்பாசிரியராக வெறும் கட்டுரைகளை வெளியிட்டதோடு தன் பணி முடிந்து விட்டது என்று கருதாமல் ஆங்காங்கு விளக்க உரையாக  அவசியமான வரலாற்றுச் செய்திகளையும் தருகிறார் சீனி.விசுவநாதன்.

 

இந்த நூலின் இன்னொரு சிறப்பு. அழகாக அமைந்துள்ள பொருள் அட்டவணை.

 

அகோரநாத ச்ட்டோபாத்தியாயர், அசுதோஷ் விச்வாஸ், அசோக் நந்தி, அசோக் நந்தி, அசோக் சந்திர நந்தி, அநாத பால மடம், அப்துல் ஹ்மீது, அப்துல் ஹமீத், அப்பர் சுவாமிகள், அமலோக்ராம், அமீர், அரவிந்த கோஷ் என்று இப்படி அகரவரிசைப் பட்டியலாக சுமார் 324 பொருள் விவரங்கள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.

ஆய்வாளர்களுக்கு கோலாகலம் தான்!

 

Bharati Statue at Setupati High School, Madurai.

 

எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் பாரதியார் என்ன எழுதியுள்ளார் என்று உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அரவிந்த மஹரிஷி பற்றியும் அவரது கருத்துக்கள் பலவற்றையும் இந்தத் தொகுதியில் நாம் காணலாம்.

 

 

லண்டனில் நடந்த கொலை, மதன்லால் திங்க்ராவின் வாக்கு மூலம், ஹிந்து முஸ்லீம்களின் ஐக்கியம், மத த்வேஷம், ஐரோப்பியனாகப் பிறந்த புண்ணியம், இந்தியனாகப் பிறந்த பாபம்,உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு வளப்பன் பாரத ஜாதி என்பன சில கட்டுரைத் தலைப்புகள்.

 

 

காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகளில் இதற்கு முந்தைய நான்கு தொகுதிகளில் 3-7-1909க்கு முற்பட்டதான பாரதியின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

இவற்றைத் தொகுப்பதே ஒரு பெரிய பணி. அதை அழகுற முடித்து அச்சிடுவது அதை விடப் பெரிய பணி.

அந்த வகையில் பாரதி அன்பர்களின் மிகப் பெரும் போற்றுதலுக்கு ஆய்வாளர் சீன் விசுவநாதன் உரியவ்ர் ஆகிறார்.

 

 

பாரதியார் பற்றிய ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவரது உண்மை சார்ந்த அணுகுமுறை போற்றப்பட வேண்டிய ஒன்று.

 

தான் எப்படி பல சூழ்ச்சியாளர்களின் வலையில் சிக்க நேர்ந்தது என்பதை வேறு ஒரு நூலில் இவர் விவரித்துள்ளார்.

இயல்பு தான்.

 

நல்லவரை எப்படி விட்டு வைப்பார்கள்?

சுயநலத்திற்காக உபயோகித்து விட்டுத் தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.

அன்பர்கள் இவரது நூல்களை வாங்கிப் படித்தால் பாரதி இயலில் தெளிவு பெறுதல் நிச்சயம்.

 

ஏராளமான முரண்பட்ட செய்திகளுக்கு இவரது ஆய்வு முத்தாய்ப்பான விடையைத் தரும்.

 

எடுத்துக் காட்டாக இன்னொரு நூலை அடுத்துப் பார்ப்போம்.

***