ஆலயம் அறிவோம் – சம்பந்தர் அவதரித்த சீர்காழி(Post.9637)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9637

Date uploaded in London – – 23 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 23-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண்மதி சூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலமான பிரமபுரம் ஆகும். சீகாழி என்று இன்று அறியப்படும் தலம் இதுவே. தமிழ்நாட்டில் உள்ள இந்தத் தலம் மாயவரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தலத்திற்கு ஏராளமான பெயர்களும் அதையொட்டிய புராண வரலாறுகளும் உண்டு. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்

அம்பிகையின் திருநாமம் : பெரியநாயகி, திருநிலை நாயகி

தல விருக்ஷம் : பவளமல்லி எனப்படும் பாரிஜாதம்

தீர்த்தங்கள்: எல்லையற்ற மஹிமை கொண்ட 22 தீர்த்தங்கள் உண்டு. பிரமதீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், ராகு தீர்த்தம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.,

பிரம்மா, திருமால், சிபி  மஹராஜன், காளி, பராசர முனிவர், குரு, ராகு உள்ளிட்ட ஏராளமானோர் வழிபட்ட தலம் இது.

சீ என்றால் சீர் என்று பொருள்,காழி என்றால் உறுதி என பொருள்.

சிவபாத ஹ்ருதயர், பகவதி அம்மையாருக்குப் புதல்வராக இங்கு தான்  திருஞானசம்பந்தர் அவதரித்தார்.வைகாசி மூலம் அவரது குருபூஜை தினமாகும். இங்குள்ள கோவிலில் உள்ள பிரமதீர்த்தத்தில் தான், சிவபிரான் அம்பிகையிடம் கூற, அம்பிகை ஞானப்பாலைப் பொற்கிண்ணத்தில் தர ஞான சம்பந்தர் அதை அருந்தி தோடுடைய செவியன் என்று சிவபிரான், அம்பிகை தரிசனத்தைக் குறித்து ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார். 16 வயது வரை வாழ்ந்த அவர் உலக நன்மைக்காக பல்லாயிரக்கணக்கான பதிகங்களைப் பாடி அருளினார். நமக்கு இன்று கிடைத்திருப்பவை 385 பதிகங்களே. அவர் பிறந்த இல்லம் இங்கு திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. காஞ்சி சங்கரமடத்தால் சிறப்புற நிர்வகிக்கப்படும் இந்த இல்லம் தேவாரப் பாடசாலையாக இப்போது இலங்குகிறது.

ஊழிக்காலத்தில் பிரளயத்தில் அனைத்தும் ஒடுங்கிய அளவில், மீண்டும் உலகைப் படைக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் பிரணவத்தைத் தோணியாக்கி உமாதேவியுடன் அதில் ஏறி வருகையில் இத்தலத்தை அடைந்தார். அப்போது அது பிரளய நீரில் மிதந்து நின்றது. இதுவே மூலாதார க்ஷேத்ரம் என நிர்ணயித்த பெருமான் இங்கு நிலையாக எழுந்தருளினார். ஆகவே இது தோணிபுரம் என்ற பெயரைப் பெற்றது. பிரமன் இங்கு சிவபிரானை வழிபட்டதால் இது பிரமபுரம் என்ற பெயரைப் பெற்றது. இறைவன் இங்கு மூங்கில் வடிவில் தோன்றியதால் வேணுபுரம் என்ற பெயரைப் பெற்றது.

சூரபன்மனுக்குப் பயந்த தேவர்கள் அனைவரும் இந்தத் தலத்தில் தஞ்சம் அடையப் புகுந்தனர். அதனால் இது புகலி என்ற பெயரைப் பெற்றது. குருபகவான வழிபட்ட தலமாதலால் இது வெங்குரு என்ற பெயரைப் பெற்றது. சிரசு அதாவது தலை கூறாக உள்ள ராகு பகவான் இங்கு பூஜித்ததால் இது சிரபுரம் என்ற பெயரைப் பெற்றது. புறா வடிவத்தில் வந்த அக்னி பகவான் சிபி சக்ரவர்த்திக்கு அருள் பாலித்த தலம் இதுவே. ஆகவே இது புறவம் என்ற பெயரைப் பெற்றது.

பூமியைப் பிளந்து சென்று இரண்யாக்ஷனை வதம் செய்த வராஹமூர்த்தியாக அவதரித்த திருமால் வழிபட்ட தலம் இது என்பதால் பூந்தராய் என்ற பெயரைப் பெற்றது. சண்பை என்று அழைக்கப்படும் கோரைப்புல்லால் தன் குலத்தோர் அழிந்ததால் ஏற்பட்ட பழி தீர கண்ணனாக அவதரித்த திருமால் வழிபட்ட இடம் என்பதால் இது சண்பை என்ற பெயரைப் பெற்றது. சிதம்பரத்தில் காளி தேவி நடராஜரோடு வாதாடிய குற்றம் நீங்க இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இது சீ காளி என்ற பெயரைப் பெற்றது. இதுவே மருவி சீகாழி ஆயிற்று என்று சொல்வர்.

மச்சகந்தியை மணம் செய்து கொண்ட குற்றத்தால் கொச்சைச் சொல்லுக்கு உள்ளான அவலம் நீங்க. பராசரர் இங்கு வழிபட்டதால் இது கொச்சைவயம் என்ற பெயரைப் பெற்றது. மலத்தொகுதி நீங்குமாறு ரோமச முனிவர் வழிபட்ட தலம் ஆதலால் இது கழுமலம் என்ற பெயரைப் பெற்றது. ஹிரண்யாக்ஷனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலை சுவாமி சட்டையாகப் போர்த்துக் கொண்டதால் சுவாமிக்கு ஸ்ரீசட்டைநாதர் என்ற திருநாமம் உண்டு.இப்படி இன்னும் பல பெயர்களும் புராணவரலாறுகளும் உண்டு.

இந்த ஆலயம் நகரத்தில் நடுவில் நான்கு  கோபுரங்களும் சுற்று மதில்களும் கொண்டதாக விளங்குகிறது. கோவினுள்ளே ஸ்ரீ பிரமபுரீஸ்வரருக்கும், திருநிலைநாயகிக்கும், திருஞான சம்பந்தருக்கும் தனித் தனி ஆலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன.சுவாமி கோவில் மஹா மண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெற்கு உட்பிரகாரத்தில் முத்து சட்டைநாதரும் அங்குள்ள திருமாளிகை பத்தியில் 63 நாயன்மார்களும் மூலவராக உள்ளனர். இந்த பத்தியில் ஒரு பலி பீடம் உள்ளது. அங்கிருந்து மேலே பார்த்தால் சட்டைநாதர் சந்நிதி தெரியும். மேலைப் பிரகாரத்திலும் வடக்குப் பிரகாரத்திலும் மேலே மலைக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன.

இந்த ஆலயம் திருக்கயிலாய பரம்பரை தர்மபுர ஆதீனத்தால் சிறப்புற நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சீகாழியின் வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமல ஆறும் தெற்கே உப்பனாறும் அழகுறப் பாய்கின்றன. இது காவிரியின் வடகரைத் தலமாகும். இங்கு திருஞானசம்பந்தர் 67 பதிகங்கள், அப்பர் 3, சுந்தரர் 1 பதிகம் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். இன்னும் மாணிக்கவாசகர், சேக்கிழார், பட்டினத்தார்,ஒட்டக்கூத்தர், அருணாசலக்கவிராயர் உள்ளிட்டோர் இங்கு இறைவனைப்  பாடிப் பரவியுள்ளனர்.

ஊழிகாலத்திலிருந்து இன்றைய நாள் வரை லக்ஷோப லக்ஷம் மக்களுக்கு அருள்பாலித்து வரும் பீடுடைய பிரமபுரீஸ்வரரும் திருநிலைநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானைத் தத்துவனை,

கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,

முன் அடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவை வல்லார்,

பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே!

நன்றி, வணக்கம்!  

***

tags– ஆலயம் அறிவோம்  , சீர்காழி, சம்பந்தர் ,