பகவத்கீதையின் ஒரு பதம்!

 

Written By ச. நாகராஜன்

 

பாபாவின் கேள்வி! 

ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தரான என்.ஜி.சந்தோர்கர் (நானா) ஒரு முறை பாபா மசூதியில் இருக்கையில் அவர் கால்களை அமுக்கியவாறே ஸ்லோகம் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சந்தோர்கர் சங்கராசார்யரின் கீதை பாஷ்யத்தை நன்கு பயின்றவர். சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தெரிந்து கொண்டு அதில் நல்ல புலமை பெற்றவர்.

பாபா அவரிடம் கேட்டார்: “நானா! என்ன முனகுகிறாய்?”

நானா: ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம்

பாபா: என்ன ஸ்லோகம்?

நானா: பகவத்கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம்

பாபா: தெளிவாகக் கேட்கும்படி உரக்கச் சொல்லு

 

ஒரே ஒரு ஸ்லோகமும் அதன் உண்மையான விளக்கமும்

 

நானா பகவத்கீதையில் நான்காம் அத்தியாயத்திலிருந்து 34ஆம் ஸ்லோகத்தை உரக்கக் கூறினார்.

“தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்னேன ஸேவயா I

உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந:II”

 

பாபா; நானா, இதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?

நானா: புரிகிறது

பாபா; அப்படியானால் அதன் அர்த்தத்தைச் சொல்லு.

 

“சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவை புரிந்து ஞானம் என்பதைக் கற்றுக் கொள்.பிறகு உண்மை அல்லது சத்வஸ்துவைப் பற்றித் தத்துவம் அறிந்த  ஞானிகள்  உனக்கு உபதேசம் செய்வார்கள்” என்று நானா இவ்வாறு ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கூறினார்.

பாபா: நானா! பொதுவான அர்த்தத்தை நான் கேட்கவில்லை. இலக்கணவிதிகளின் படி எச்சம்,வேற்றுமை,காலம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வார்த்தையாக விளக்கி அர்த்தத்தைக் கூறு,

பாபாவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணம் என்ன தெரியும் என்ற வியப்புடன் நானா அப்படியே விரிவாக விளக்கினார்.

 

பாபா:ப்ரணிபாதம் என்றால் என்ன?

நானா:நமஸ்காரம் செய்வது!

பாபா: பாதம் என்றால் என்ன?

நானா:அதே அர்த்தம் தான்!

பாபா; பாதத்திற்கும் ப்ரணிபாதத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்றால் வியாஸர் அனாவசியமாக  தேவையற்று (‘ப்ரணி’ என்று) இரண்டு எழுத்துக்களைச் சேர்த்திருப்பாரா?

நானா: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை!

 

பாபா:சரி,ப்ரஸ்ன என்றால் என்ன?

நானா:கேள்வி கேட்பது

பாபா: பரிப்ரஸ்ன என்றால் என்ன?

நானா: அதே அர்த்தம் தான்!

பாபா: இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தான் தருகின்றன என்றால் வியாஸருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது நீளமான வார்த்தையைப் போட?

நானா: எனக்கு என்னமோ இதற்கு மேல் என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று புரியவில்லை!

 

பாபா: சரி சேவா என்றால் என்ன?

நானா:சேவா என்றால் சேவை தான் இதோ கால் பிடிப்பதைப் போல!

பாபா:இதை விட வேறு ஒன்றும் இல்லையா?

நானா: இதற்கு மேல் இதில் என்ன அர்த்தம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை!

 

அந்த ஒரே ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலானார் –

ஞானமே ஒருவனது இயற்கை நிலை. அப்படிப்பட்ட இயற்கை நிலையான ஞானத்துடன் இருக்கும் ஜீவனான அர்ஜுனனுக்கு ஞானம் காட்டப்படும் என்று இரண்டாம் அடியில் ஏன் கிருஷ்ணர் சொல்ல வேண்டும்? என்று கேட்ட பாபா பின்னர் ஞானம் என்ற வார்த்தைக்கு முன்னால் ஒரு அவக்ரஹத்தைச்  (அதாவது ஒரு “அ” வைச்) சேர்க்கச் சொன்னார்

 

 

சங்கராசார்யர் பாஷ்யத்தில் இது இல்லையே என்றார் நானா பாபாவோ இப்போது பொருள் நன்றாகப் புரியும் பார் என்று விளக்கலானார்.அதிசயித்துப் போன சந்தோர்கர் ஒன்றும் தெரியாது என்று நினைத்த பாபாவின் விளக்கதைக் கேட்க ஆரம்பித்தார். அருகிலிருந்தோர் அனைவரும் பாபா அருகில் குழுமி விட்டனர்.

பாபா தொடர்ந்தார் :-

 

“இந்த ஸ்லோகம் எப்படி ஒரு சிஷ்யன் ‘மெய்யை” அனுபவத்தில் அறிய தன் குருவை அணுக வேண்டும் என்பதை விளக்குகிறது..ஒரு சிஷ்யன் தனது உடல்,மனம்,ஆன்மா ஆகிய மூன்றையும் முழுதுமாக அர்ப்பணித்து குருவை அணுக வேண்டும்.

இந்த முழு சமர்ப்பண நிலையுடன் நமஸ்காரம் செய்யப்பட வேண்டும். இதுவே ப்ரணிபாதம்!

 

 

அடுத்து குருவிடம் சாதாரணமாகக் கேள்வி கேட்பது மட்டும் போதாது.தேவையற்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது. வெறும் ஆர்வத்தினால் எழப்பட்ட கேள்விகளாக அவைகள் இருக்கக் கூடாது.தவறான அணுகுமுறை மூலம் அவை கேட்கப்படக் கூடாது. அவருடைய பதிலில் என்ன தவறுகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற முறையற்ற தூண்டுதல் இருக்கக் கூடாது. முன்னேற்றம் மற்றும் முக்தியை அடைவதற்காகக் கேள்வியின் நோக்கம் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும்.மேலும் கேள்விகள் மீண்டும் மீண்டும் முழுப் பொருளையும் உணரும் வரை கேட்கப்பட வேண்டும். (குடைந்து குடைந்து கேட்க வேண்டும்!) இதுவே பரிப்ரஸ்னம்!!

 

அடுத்து சேவை என்பது வெறும் தொண்டு மட்டுமல்ல. நல்ல விளைவை ஒருவன் பெற வேண்டுமானால் அவன் சேவையைச் செய்வதற்கும் அல்லது மறுப்பதற்கும் அலை பாயும் எண்ணத்துடன் இருக்கக் கூடாது.தனது உடலின் எஜமானன், தான் என்ற உணர்வு அவனுக்கு இருக்கக் கூடாது. அவனது உடல் குருவினுடையது. அவருக்குச் சேவை செய்வதற்கு மட்டுமே அது இருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு இருக்க வேண்டும்.

 

அடுத்து ஞானம் என்பது அனுபூதி பெறுதலாகும். அது சத் வஸ்து.அதை வாக்காலோ அல்லது மனதாலோ அடைய முடியாது.ஆகவே குருவின் உபதேசம் கூட அஞ்ஞானம் தான்! என்றாலும் கூட முள்ளை முள்ளால் எடுப்பது போல இந்த குருவின் உபதேசம் என்னும் அஞ்ஞானம்  மற்ற எல்லா அஞ்ஞானத்தையும் போக்கித் திரையைத் தூக்கி ஆன்மாவைக் காண்பிக்கும் இது இலேசில் நடக்கக் கூடிய காரியமல்ல. நீண்ட நெடுங்காலம் அஞ்ஞானத்தில் மூழ்கி இருந்ததால் ஜென்ம ஜென்மம் தோறும் தொடர்ந்து வந்த அது (மிக்க முயற்சியினாலேயே) நீக்கப்பட வேண்டும்.

 

நீண்ட விளக்கத்தைக் கூறிய பாபா நிறுத்தினார். நானாவும் அங்கிருந்த இதரரும் விக்கித்துப் பிரமித்தனர். இதைத் தொடர்ந்து தினம்தோறும் பாபா பகவத்கீதையை நானாவிற்கும் மற்றவருக்கும் விளக்கலானார்.

 

பாபா எப்படிப்பட்ட மகோன்னதமான ஞானஸ்தர்,சம்ஸ்கிருத பாஷா விற்பன்னர் என்பதை அனைவரும் உணரும் வாய்ப்பாக இந்த சம்பவம் அமைந்தது. அத்தோடு சுமார் இருபது லட்சம் வார்த்தைகளைக் கொண்டுள்ள மஹாபாரதத்தில் வியாஸர்  இரண்டு அட்சரங்களைக் கூட வீணாகச் சேர்க்க மாட்டார் என்ற நம்பிக்கையைக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு இந்தச் சம்பவம் விளக்கியது. கணபதியையே பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்று நிபந்தனை போட்ட வியாஸரின் சொற்கள் ஒவ்வொன்றும் ஆழமாயும் அர்த்தம் உள்ளதாயும் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள பாபா செய்த அருள் நிகழ்ச்சி இது.

 

ராமரும் கிருஷ்ணரும் உண்மையில் வாழ்ந்தவர்களா?

ஒரு சமயம் அப்பா குல்கர்ணி என்ற பக்தர் பாபாவை அணுகி புராணங்கள் உண்மை தானா என்று கேட்டார்.”ஆம்” என்றார் பாபா. ராமரும் கிருஷ்ணரும் கூட உண்மையில் வாழ்ந்தவர்களா என்று மேலும் கேட்டார் அவர். ஆமாம்.அவர்கள் பெரும் மஹாத்மாக்கள்.அவர்களே கடவுள்.!அவதாரங்கள்!” என்று பதில் கூறி பக்தர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஐயத்தையும் போக்கி அருளினார் அவர்.

 

விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமை

ஒரு முறை ஜுரத்தினால் பாபா அவஸ்தைப்படுவதைப் பார்த்த பக்தர்கள் திகைத்தனர்.விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தைக் கொண்டு வரச் சொல்லி அதைத் தன் மார்பின் மீது பாபா வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ஜூரம் போயிற்று. மஹாபாரதத்தில் இடம் பெறும் விஷ்ணுசஹஸ்ரநாம மஹிமையை உலகினருக்கு உணர்த்த அவர் செய்த அருள்விளையாடல் இது!

 

ப்ரணிபாதம், பரிப்ரஸ்னம், சேவை

ஒரே ஒரு கீதை வார்த்தைக்கே இப்படி ஆழ்ந்த பொருள் இருப்பதை மஹான்கள் விளக்கம் மூலமாக அறிய வேண்டி இருக்கிறது! முழு வேத,இதிஹாஸ புராணங்களையும் எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுவது இயல்பே!

 

இந்தக் கேள்விக்கு விடை இந்த ஸ்லோகத்திலேயே இருக்கிறது.

ப்ரணிபாதம், பரிப்ரஸ்னம், சேவை மூலமாகத் தான்!

****************

ஞான ஆலயம் மாத இதழில் வெளிவந்த கட்டுரை. Written my brother Santanam Nagarajan