காலம் என்னும் மர்மம்! – 1

apple-kitchen-wall-clocks

ஹிந்து தத்துவ விளக்கம்                                          புதிய தொடர்

காலம் என்னும் மர்மம்! – 1

Written  by S NAGARAJAN

Date: 31 October 2015.

Post No:2288

Time uploaded in London :–  7-16 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

1

வியாசர் சுகருக்கு விளக்கியது        

காலம் என்னும் மர்மத்தை இந்திய நூல்கள் விளக்கியுள்ளது போல உலகின் வேறு எந்த நூல்களும் விளக்கவில்லை.

விஞ்ஞானிகளில் கார்ல் சகன் உள்ளிட்டோர் ஹிந்து மதத்தில் காலம் விளக்கப் பட்டுள்ள விதத்தை வியந்து பாராட்டி உள்ளனர். அதன் மீதுள்ள மதிப்பின் காரணத்தால் கால நடனத்தைஆடும் நடராஜரையும் தங்கள் காஸ்மாஸ் (Cosmos) தொடரில் பயன்படுத்தி உள்ளனர்.

 

 

மஹாபாரதத்தில் காலம் பற்றிய விவரம் ஏராளமான இடங்களில் பல்வேறு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சாந்தி பர்வம் 244வது அத்தியாயத்தில் வருவது இது.

வியாச முனிவர் சுக முனிவருக்கு காலத்தைப் பற்றி இப்படி விவரிக்கிறார்:-

காலமானது நானாவிதமாக ஏற்பட்டிருக்கிறது. என்னால் உனக்கு முன்னே சொல்லப்பட்டதும், மக்களை உண்டு பண்ணுகிறதும், அழிப்பதுமான (பரமாத்ம ரூபமான) காலமானது ஆதி, அந்தம் இல்லாதது.

 

 

பூதங்களுடைய உற்பத்தியையும், பாலனத்தையும், அழிவையும் செய்யும் ஆகிய இவற்றின் விளக்கமாக அமைகிறது காலம்.

ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக படைக்கப்பட்ட பூதங்கள் தமது இயல்புடன் கூட அப்படிப்பட்ட காலத்தில் இருக்கின்றன.

காலமே சிருஷ்டி. காலமே துஷ்டி.

காலமே வேதம். காலமே கர்த்தா.

காலமே காரியம். காலமே கர்மத்தின் பலன்.

argos clock 2

 

2

இந்திரனுக்கும் பலிக்கும் நடந்த சம்வாதம்

இந்திரனுக்கும் விரோசனன் மகனான பலிக்கும் இடையில் நடந்த சம்வாதம் – (அர்த்தமுள்ள உரையாடல்) – காலத்தின் வன்மையை நன்கு விளக்குகிறது.

பாழடைந்த வீட்டில் கழுதை வேஷத்தில் இருந்த பலியைப் பார்த்த இந்திரன், “அசுர வேந்தனே! உன் பெரிய குடை எங்கே? பொன் பாத்திரம் எங்கே? பிரம்மதேவர் உனக்கு அளித்த மாலை எங்கே?” என்று கேட்டான்.

பலி இந்திரனை நோக்கி நகைத்து, “அவற்றையா கேட்கிறாய்? யாவும் காலத்தால் வரும்! .நல்ல காலத்தில் போகாது.

 

 

இவ்வுலகத்தில் யாவும் காலத்தின் மாறுதலில் எல்லாமே நிலையற்றனவாயிருப்பதைக் கண்டு நான் சோகப்படாமல் இருக்கிறேன்.

இவ்வுலகம் அனைத்தும் முடிவுள்ளதாக இருக்கிறது.

கொன்ற பின்னும் வென்ற பின்னும் புருஷ வீரம் உள்ளவன் போல் இருக்கின்ற மனிதன் உண்மையில் கர்த்தாவே அல்ல. கர்த்தாவாய் இருப்பது தான் அதைச் செய்கிறது.

மற்றும் சிலர் ஒன்றாய் இருக்கும் காலத்தை வருடங்கள் என்றும், மாதங்கள் என்றும், பட்சங்கள் என்றும், தினங்கள் என்றும், க்ஷணங்கள் என்றும், காலை என்றும், மாலை என்றும், நடுப்பகல் என்றும், முகூர்த்தம் என்றும் பல விதமாகக் கூறுகிறார்கள்.

 

 

இவ்வுலகம் யாவும் எதன் வசத்தில் இருக்கிறதோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்!

இந்திரனே! உன்னைப் போல் வன்மையும் பராக்ரமும் பொருந்திய பல்லாயிரம் இந்திரர்கள் காலம் சென்றார்கள். உனக்கு கர்வம் வேண்டாம். வருங்காலத்தில் உள்ள கதியை எவன் கண்டான்?”

 

காலத்தின் வன்மையையும், தன்மையையும் பலி, இந்திரனுக்கு இப்படி விளக்கினான். (மஹாபாரதம் சாந்தி பர்வம் 234வது அத்தியாயத்தில் ஒரு சிறு பகுதி சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது)

 

antique-kitchen-wall-clocks

3

பிருஹஸ்பதியிடம் மனு கூறியது

பிருஹஸ்பதியிடம் மனு காலத்தைப் பற்றி விவரிக்கிறார் :-

பூமியின் உருவத்தை விட ஜலத்தின் உருவம் பெரியது.                            

ஜலத்தை விட தேஜஸ் பெரியது.                                                  

தேஜஸை விட வாயு பெரியது.                                                        

வாயுவை விட ஆகாயம் பெரியது.                                                          

ஆகாயத்தை விட மனம் மிகப் பெரியது.                                      

மனத்தை விட புத்தி பெரியது.                                                          

புத்தியை விடக் காலம் பெரியது, என்று இப்படிச் சொல்லப்படுகிறது.

 

இந்த உலகமெல்லாம் எந்த விஷ்ணுவின் உருவமோ அந்த விஷ்ணு காலத்தை விடப் பெரியவர்!

மிக அழகாக ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு எது எதை விடப் பெரியது என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவது ஹிந்து இலக்கியம் ஒன்று மட்டுமே! இப்படி எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்பதே மற்ற பழைய நாகரிகத்தினர்க்குத் தெரியுமா என்பது ஐயப்பாடே! எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றைப் படிப்படியாக நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.

(சாந்தி பர்வம் 204வது அத்தியாயம்

 

மஹாபாரதம் இன்னும் பல்வேறு இடங்களில் காலம் பற்றி விரிவாக விளக்குகிறது! காலத்தைப் பற்றி மிக விளக்கமாக அறிந்து கொள்வதால் ஏற்படும் முதல் பலன் எல்லையற்ற கால வெள்ளத்தில் நாம் சிறுதுளியினும் சிறுதுளியே என்பதை அறிவதன் மூலம் நம் அகங்காரம் அகலும். அத்துடன் கூட  ‘நிலையாமைஎன்பது நன்கு புரியப் புரிய மன அமைதி தானே உருவாகும்!

***********         (தொடரும்)