கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1416; தேதி 17 நவம்பர், 2014.
ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல். அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. மொத்தம் 1028 துதிப்பாடல்கள் இருக்கின்றன. அவைகளில் 10,552 மந்திரங்கள் உள.
பல அதிசயங்கள் நிறந்தது ரிக் வேதம். அது என்ன அதிசயம்?
உலகிலேயே முதல் முதலாகத் தொகுக்கப்பட்ட நூல் என்னும் பெருமையுடைத்து.
உலகிலேயே முதல் முதலாக ‘’இண்டெக்ஸ்’’ INDEX போட்ட நூல் இதுதான். அதாவது எல்லா ஆங்கில நூல்களிலும் கடைசி பக்கத்துக்குப் போனீர்களானால் அதிலுள்ள விஷயங்களை அகர வரிசையில் சொல் குறிப்பு அகராதி என்று கொடுத்திருப்பர். இதை ‘’அணுக்ரமணி’’ என்ற பெயரில் உலகிற்குச் சொல்லிக் கொடுத்தது நம்மவர்களே. எந்தெந்த ரிஷி எந்த மந்திரத்தைக் ‘’கண்டுபிடித்தார்’’, எந்தக் கடவுளின் பெயரில் பாடினார் என்றெல்லாம் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னர் எழுதவேண்டு மானால் அவர்களுடைய விசாலமான புத்தியை எண்ணி வியக்காமல் இருக்க முடியுமா? ( ரிஷிகள் என்போர் மந்திர த்ருஷ்டா= மந்திரங்களைக் கண்டவர்கள்; எழுதியவர்கள் அல்ல)
400—க்கு மேற்பட்ட ரிஷிகளின் பெயர்களையும் அப்படியே நமக்குக் கொடுத்துள்ளனர்.
இன்னொரு அதிசயமும் உண்டு. உலகில் எந்த நூலையும் நாலு கூறு போட்டு நாலு மாணவர்களை அழைத்து இதை ‘’எழுதக்கூடாது. ஆனால் மனப்பாடமாகப் பரப்ப வேண்டும்’’ என்று யாரும் சொன்னதில்லை. வியாசர் என்னும் மாமுனிவன் மட்டும் இப்படி உத்தரவிட்டதும் அதை அவர்கள் சிரமேல் கொண்டு இன்று வரை நமக்குக் வாய் மொழியாகக் கொடுத்து வருவதும் உலகம் காணாத புதுமை. சுமேரியாவிலோ எகிப்திலோ களிமண்ணிலும் சுவற்றிலும் எழுதாவிடில் அனைத்தும் அழிந்திருக்கும் ஆனால் நம்மவர் மனப்பாடமாக இன்று வரை அதைக் காப்பாற்றி வந்தது நம் திறமைக்கு ஒரு சான்று.
இதில் வேறு பல ரகசியங்கள் இருப்பதாலும் எதையும் நேரடியாகச் சொல்லாமல் ரகசியமாகச் சொல்வதானாலும் சங்க காலத் தமிழர்கள் இதற்கு ‘’மறை’’ என்றும், ‘’எழுதாக் கிளவி’’ என்றும் பெயர் சூட்டி அகம் மகிழ்ந்தனர், உளம் குளிர்ந்தனர்.
இதில் உள்ள கணித ரகசியங்கள் பற்றியும் மிகப் பெரிய எண்கள் பற்றியும் தனியே கொடுத்து விட்டேன். இன்று 38 பெயர்களையும் ஏழு புதிர்களையும் உள்ளடக்கிய ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம்.
ரிக்வேதத்தில் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் என்னும் ரிஷியும் அவர் வழிவந்தவர்களும் பாடிய துதிப்பாடல்கள் இடம் பெறும். இதில் 18ஆவது துதியில் 25 மந்திரங்கள் உள. தமிழில் பரணர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்று செய்தியைத் தருவார் ( எனது பழைய கட்டுரையில் மேல் விவரம் காண்க: வரலாறு எழுதிய முதல் தமிழன்).
அது போல இப்பாடலில் 38 விஷயங்களை அள்ளிக் கொடுத்து விட்டார் வசிட்டன். இதில் உள்ள பல விஷயங்கள் புதிர்களாகவே உள்ளன. ரிஷி முனிவர்கள் பயன்படுத்தும் மறை பொருளான மரபுச் சொற்றொடர்களும், நமது அறியாமையுமே இதற்குக் காரணம் என்று இப்பகுதியை மொழிபெயர்த்த கிரிப்பித் என்ற அறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
புதிர் 1
இந்தத் துதிப்பாடல் இந்திரன் மீது பாடப்பட்டது. 14ஆவது மந்திரத்தில் ஒரு எண் வருகிறது. அதைச் சில அறிஞர்கள் 66,606 என்றும் இன்னும் சிலர் 6666 என்றும் மொழி பெயர்க்கின்றனர். அதன் சம்ஸ்கிருத மொழி அமைப்பு அப்படி அமைந்துள்ளது. அது சரி! இப்படிப்பட்ட வினோத எண்ணுக்கு இந்த துதியில் அவசியமே இல்லையே! ரிஷிகள் ஏதேனும் மறை பொருளைச் சொல்ல விரும்புகின்றனரா அல்லது எதுகை, மோனை விஷயங்களுக்கா கத் தங்கள் புலமையைக் காட்டுகின்றனாரா? புதிரோ புதிர்!
புதிர் 2
தாசர்கள் என்றால் கறுப்பர்கள், அவர்கள் எல்லாம் திராவிடர்கள், ஆரியர்களால் விரட்டப்பட்டவர்கள் — என்று வெளிநாட்டார் எழுதி வைத்தனர். ஆனால் இந்தப் பாட்டு முழுதும் சு தாச என்னும் மன்னன் அடைந்த வெற்றியைப் பற்றியது. அவனுடைய அப்பா பெயர் திவோ தாச! அவன் குல குரு வசிஷ்ட மாமுனிவன். அவனுக்கு உதவியதோ இந்திரன்! புதிரோ புதிர்!
புதிர் 3
இதே பாடலில் யுத்யாமதி என்ற ஒரு பெயர் வருகிறது. அது ஒரு மன்னன் பெயராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுவர். ஆனால் அவரைப் பற்றிய எந்த விஷயமும் வேறு எங்கும் கிடைத்தில. ஒரு வேளை சிந்து சமவெளியை ஆண்ட ஒரு மன்னனோ!! ( மதி-பதி-வதி: சிந்து சமவெளி மன்னர் பெயர்கள் என்ற எனது கட்டுரையில் விவரம் காண்க). புதிரோ புதிர்!
புதிர் 4
இந்தப் பாடல் அடங்கிய ஏழாவது மண்டலம் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் ஒன்று என்று பல அறிஞர்களும் ஒப்புவர். அத்தைகயதோர் பாடலில் திடீரென யமுனை நதி பற்றி வருகிறது! ‘’கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் சிந்து நதி தீரத்தில் பாடிய துதிப்பாடலகள்’’– என்று கதைத்து வந்த வெளி நாட்டு ‘’அறிஞர்கள்’’ மீது குண்டு வீசியது போல இருக்கிறது இந்த யமுனைக் குறிப்பு! அவர்களுடைய ஆரிய—திராவிட வாதங்களை ஒரு சொல்லால் தவிடு பொடியாக்கி விடுகிறது இந்த வரி.
வேதம் பற்றியும் அதிலுள்ள வரலாறு பற்றியும் எழுதி வரும் ஸ்ரீகாந்த் தலகரி என்னும் அறிஞர், வேத கால இந்துக்கள் கிழக்கில் இருந்து மேற்கே ஈரான் வரை சென்றார்கள் என்று நிரூபித்ததை இது உறுதி செய்கிறது.
சங்கத் தமிழர்களுக்கு சிந்து நதியோ, அந்தப் பகுதியோ தெரியுமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அவை பற்றி சங்கப் பாடல்களில் இல்லை. ஆனால் யமுனை (தொழுநை) நதியும் கங்கை நதியும் இமய மலையும் சங்கத் தமிழர்களுக்கு மிகவும் தெரிந்த இடங்கள்!
புதிர் 5
அஜஸ், சிக்ரூஸ், யக்ஷூஸ் என்பவர்கள் பேடா என்பவர் கீழ் இருந்தது போல என்று ஒரு வரி வருகிறது யார் இந்த பேடா? என்று தெரியவில்லை! புதிரோ புதிர்!
புதிர் 6
‘’பசியுள்ள மீன்கள் போல’’ — என்று இடையில் திடீரென்று ஒரு வரி வருகிறது. சிலர் இதை மீன் பற்றிய உவமை என்கின்றனர். இன்னும் சில வெளிநாட்டார் இது ‘’மத்ஸ்ய’’ இனத்தினர் என்பர். மத்ஸ்ய என்ற வட சொல்லுக்கு மீன் என்ற பொருள் உண்டு. மச்சாவதாரம் என்ற சொல் நமக்குத் தெரிந்ததே. ஆக இந்த வரியும் புதிரோ புதிர்!
புதிர் 7
ஆறாவது மந்திரத்தில் துர்வாச புரோதாச என்ற பெயர் உள்ளது. இது ஒரே பெயரா அல்லது இரண்டு பெயர்களா என்றும் அறிஞர்கள் மோதிக் கொள்வர். புதிரோ புதிர்!
இப்படி ஒரே பாடலில் பல அறிஞர்கள் பலவாறு பேசுவதை அறிந்தே, நம் அய்யன் வள்ளுவன், “எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”– என்று செப்பினான். குறிப்பாக, வேத மந்திரங்களுக்கு ஆரிய—திராவிட விஷப் புகை தூவி மந்திரம் போடும் வெளி நாட்டாரை நம்பாது இருப்பதே நலம்!
பாடலில் என்ன சொல்கிறார் வசிட்டர்?
இந்தப் பாடல் சுதாச என்னும் மன்னன், பத்து ராஜா யுத்தத்தில் அடைந்த மாபெரும் வெற்றியைப் பாடுகிறது. எப்படி கரிகால் சோழன் ஏழு பேரை வென்று வெற்றி வாகை சூடினானோ அது போல சுதாசன் பத்து பேரை வென்று வெற்றி வாகை சூடினான். அவனுடன் போனார் வசிட்டர். அவனுக்கு உதவியது இந்திரன்!
“ஆடு சிங்கத்தை வென்றது போல வென்றான்” — என்ற உவமை இதில் இருப்பது குறித்தும் சிங்கம், பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவை அக்காலத்திலேயே இருந்தது என்றும் எனது முந்தைய கட்டுரையில் தந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
இறுதியாக, — இதில் வரும் முப்பத்தெட்டு பெயர்கள் என்ன என்ன?
1.இந்திர, 2.வசிஷ்ட, 3.சுதாஸ், 4.சிம்யு, 5.துர்வாச, 6.புரோதாச, 7.ப்ருஹு, 8.த்ருஹ்யூஸ், 9.பக்தாஸ், 10.பலனாஸ், 11.அலினாஸ், 12.சிவாஸ், 13.விசானின்ஸ், 14.த்ருஷ்டூஸ், 15.பாருஸ்னி, 16.ப்ரிஸ்னீ, 17.வைகர்ண, 18.கவச, 19.அனு, 20.புரு 21.ஆனவாஸ், 22.பேடா, 23.யமுனா, 24.அஜஸ், 25.சிக்ரூஸ், 26.யக்ஷூஸ், 27.தேவக, 28.மன்யமான, 29.சம்பர, 30.பராசர, 31.சதாயது, 32.பைஜாவன 33.அக்னி, 34.தேவவான், 35.யுத்யாமதி, 36.திவோதாச, 37.மருத், 38.மத்ஸ்ய
இதில் பல இனங்கள் (குழுக்கள்), நதிகள், மன்னர்கள், கடவுளர் பெயர்கள் இருக்கின்றன.
–சுபம்–
அமிழ்தம், அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம் — பாரதி
You must be logged in to post a comment.