பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி

bharatidasan
April 29 is the birth day of Poet Bharatidasan (1891—1964)

By London Swaminathan
Post No.1009; Date:29 April 2014.

கேள்விகள் எனது கற்பனையில் பிறந்தவை; பதில்கள் பாரதிதாசனின் பாடல்களில் ஏற்கனவே இருப்பவை!!

கேள்வி: பாரதிதாசன் அவர்களே, குரு பக்தியில் யாருக்கும் சளைக்காத நீவீர் உங்கள் குரு தேசிய கவி சுப்பிரமணிய பாரதி பற்றி……….

பாரதிதாசன் பதில்:

“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

கே: அருமையான பதில்; பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர் நீங்கள்; நினைவில் நின்ற ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாமே!

பதிள்: ஒரு நாள் நம் பாரதியார் நண்பரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்திருந்தார், அங்கே
ஒரு மன்னன் விஷமருந்தி மயக்கத்தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்த இடந்தனிலிருந்தே எழுந்துலாவி
‘’என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே
வருகுதையோ’’ என்ற பாட்டைப் பாடலானான்;
வாய்பதைத்துப் பாரதியார் கூவுகின்றார்;
மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்கு பாட்டா என்றார்!
தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை!

கே: அது சரி, உங்களுக்கு பிடித்த ஒரே பார்ப்பனர் பாரதியார். பிடிக்காத பார்ப்பனர்கள் யார், யார்?

ப: குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்
குருநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்
படியேறும் சமண் கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலைப் புரிந்திட்ட பல்லாயிரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்

Bharatidasa Uni

கே: போதும், போதும்! அடுத்த கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தீபாவளிப் பண்டிகை பிடிக்காதாமே?
ப:- நரகனைக் கொன்ற நாள் நல்விழா நாளா?

நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப் பெயரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச் சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?

கே: ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்” என்று பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. அழகிய இள மகளிரை “தமிழ் தழீய சாயலவர்” என்று திருத்தக்க தேவர் சிந்தாமணியில் புகழ்கிறார். உங்கள் கருத்து என்னவோ?

ப: தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தில் விளைவுக்கு நீர்!

கே: அற்புதமான பாடல்; நீங்கள் ஏதோ போர் இல்லாத உலகம் பற்றி எல்லாம் கனவு காண்பதாகக் கேள்வி?
ப:- புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்.

கே: தமிழ் சினிமா பற்றி உங்கள் கருத்து?

ப: என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக
ஒன்றேனும் தமிழர் நடையுடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை; உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

கே: நீங்கள் நிறைய காதல் பாட்டுக்கள் பாடி இருக்கிறீர்கள். சில வரிகளைக் கேட்க ஆசை……………….

ப: பாழாய்ப் போன என் மனம் ஒரு நாய்க்குட்டி- அதைப்
பறித்துக்கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூந்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி
***
ஆவணி வந்தது செந்தேனே – ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே – எனைப்
போவென்று சொன்னாய் நொந்தேனே – செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே!

கே: நீங்கள் தமிழ் இளைஞருக்கு விடுக்கும் செய்தி…………………..
ப: தமிழன் எலி அன்று
தாவும் புலி என்று – நீ
தாரணி அறியச் செய் இன்று.

barathidasan_(sega_graphi_) (1)

கே: நீங்கள் எழுதிய விடுகதைக் கவிதையில் ஒரு சில வரிகள் சொல்லுங்கள்;
ப: ஆமை, அருமை, பெருமை, சிறுமை
அடிமை, கடுமை, மடமையே
ஊமை, உண்மை, இன்மை, இளமை
உரிமை, திறமை, இவைகளில்,
தீமை செய்து பாரதத்தைச் சீரழிப்பது எது சொல்வாய்?
நாமடைய வேண்டுவதையும் நன்கு பார்த்துக் கூறுவாய்.
(விடைகள்:- சீரழிப்பது- அடிமை; அடைய வேண்டியது: உரிமை)

கே: இறுதியாக உங்களின் இயற்பெயர்?
பதில்:–என் பெயர் சுப்புரத்தினம், என் தாய் பெயர் லெட்சுமி அம்மாள், என் தந்தை பெயர் கனகசபை முதலியார்.
நன்றி கவிஞரே. 60 நொடிகளுக்குள் புதுமைக் கருத்துக்களச் சொல்லி சிந்திக்கவைத்தீர். உம் புகழ் தமிழ் போல் வாழ்க!!!

இதே வரிசையில் ஏற்கனவே நான் எழுதிய கற்பனைப் பேட்டிகளையும் படியுங்கள். இதோ பட்டியல்:
இதுவரை வெளியான 60 வினாடி பேட்டிகள்
அருணகிரிநாதர் (posted 17-1-12), அப்பர், ஆண்டாள்(20-1-2012), பாரதியார், கண்ணதாசன், கம்பன் (posted 17-1-12), கிருஷ்ணன், சாக்ரடீஸ் (Eng & Tam), மாணிக்கவாசகர் (posted 15-1-12), ராமலிங்க சுவாமிகள், தாயுமானவர், பட்டினத்தார், , சிவ வாக்கியர் (posted 22-1-12), திருவள்ளுவர், திருமூலர், திருஞான சம்பந்தர், திரிகூட ராசப்ப கவிராயர், இளங்கோ, ஒரு நிமிட பகவத் கீதை, சீத்தலைச் சாத்தனார், தியாகராஜர், சுந்தரர் ( posted 21-2-12),
bharathidasan

In English:—
60 Second Interviews with Swami Vivekananda15-1-12, Sathya Sai Baba, Adi Shankara posted on 16-1-12,Buddha, Socrates, ONE MINUTE BHAGAVAD GITA (Eng and Tam)

contact swami_ 48@ yahoo.com
*******