Picture of Rubik’s Cube
Written by London swaminathan
Date: 9 July 2016
Post No. 2954
Time uploaded in London :– 8-06 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஒரு செயலைச் செவ்வனே முடிக்க பல வழிகள் உள்ளன. சிறிது சிந்தித்துச் செயல்பட்டால் எதையும் எளிதில் முடிக்கலாம்.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். துன்பம் என்று எதுவுமே இல்லை. ஏனெனில் உலகில் எல்லாவகைத் துயரங்களுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. அது என்ன என்று தெளிதல் வேண்டும்.
கடவுள் யாருக்கும் துன்பம் தருவது இல்லை!
சின்னக் குழந்தைகள் ரூபிக் கியூப் (RUBIK CUBE) போல பல புதிர் விளையாட்டுகள் விளையாடும். ஒருமுறை அதற்கு விடை கண்டுவிட்டால் பின்னர் எளிதில் அதைத் தீர்த்துவிடலாம். முதல் முறை மட்டும் கொஞ்சம் கடினமாகத் தோன்றும். ஆனால் ,ஒவ்வொரு புதிருக்கும் ஒரு விடை உண்டு.
இது போலவே கடவுள் சில கஷ்டங்களைத் தரும்போது அதற்கான தீர்வையும் தருவான். அதைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் நமக்கு வேண்டும். அது இல்லை என்றால் இது போன்ற கட்டுரைகளைப் படித்து அறிய வேண்டும். பெரியோர்களிடமும் அறிவுறை கேட்கலாம்.
இதற்கு ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய நூற்றுக் கணக்கான Self Improvement சுய முன்னேற்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதில்லை. திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு முதலிய நூல்களைக் கற்று சுய முன்னேற்றம் தொடர்பான விஷயங்களை எழுதி வைத்துக்கொண்டால் போதும். அதை அடிக்கடி “பாராயணம்” செய்தால் போதும்.
கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி!
கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
முள்ளை முள்ளால் எடு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
வைரத்தை வைரத்தால் அறு சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது.
நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடி என்பதை அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் என்ற பிராமணனும், பின்னர் திருவள்ளுவரும் “யானையால் யானை யாத்தற்று” – என்று சொல்லியிருக்கிறார்கள்.
வினையால் வினையாக்கிக்கோடல் நனைகவுள்
யானையால் யானை யாத்தற்று (குறள் 678)
பொருள்: ஒரு செயலைச் செய்ய இன்னொரு செயலைப் பயன்படுத்தலாம்; நனைந்த மத நீரையுடைய யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போல.
(நனை கவுள் = மத நீரினால் நனைந்த கபோலத்தை உடைய)
இதே உவமையை வால்மீகி ராமாயணத்திலும் காணலாம் (3-56-31)
(6-16-16)
பரணர் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் 276-லும் காண்க:-
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல
(பிடி = பெண் யானை, களிறு = ஆண் யானை)
வடக்கில் , குறிப்பாக இமய மலையில், சம்ஸ்கிருத மொழியைப் பயன்படுத்தும் ரிஷி முனிவர்களையும் கற்றோரையும் “ஆரியர்” என்ற சொல்லால் சங்க இலக்கியம் அழைக்கும். இங்கே பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பிடிக்கும் உவமையை பரணர் கையாளுகிறார்.
ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து!
நன்னெறி என்னும் நூலில் ஒரு நல்ல பாடலும் இதே கருத்தை வலியுறுத்தும்.
தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட் குரியவரால் தாங்கொள்க – தங்கநெடுங்
குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் ஆவின்பால்
கன்றினாற் கொள்ப கறந்து.
பொருள்:–
தங்கநெடுங்குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் – நெடிய பொன் மலையால் செய்தது போன்ற அழகிய கொம்பு போன்ற பெண்ணே (அட! என் தங்கக் கட்டியே!)
ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து- மாட்டுப் பாலை அதன் கன்றினாற் கறந்து கொள்வார்கள் (கன்று பக்கத்தில் இருந்தால் மாடு தானே பால் சுரக்கும். மற்றொரு பொருள்- கன்று இல்லாவிடினும் இறந்து போன கன்றின் தோலுக்குள் வைக்கலை அடைத்து கன்று போல பொம்மை செய்து , பசு மாட்டின் பக்கத்தில் வைத்துப் பால் கறப்பது)
(அதுபோல)
தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளின் – தங்களுக்கு உதவி செய்யாத ஒருவரிடமிருந்து உதவி பெற வேண்டுமானால்,
தங்கட் குரியவரால் தாங்கொள்க- அவருக்கு யார் நண்பர் என்று அறிந்து அவரை அணுகுக; அல்லது உங்கள் நண்பர்களில் யார், அவருக்கு நெருக்கமோ அவர் மூலம் அணுகி உதவி பெறுக.
எவ்வளவு அருமையான, எளிமையான விஷயம் பாருங்கள்.
நாட்டுப் பிரச்சினையானாலும், வீட்டுப் பிரச்சினையானாலும், குடும்பப் பிரச்சினையானாலும் திண்ணையில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிக்காதீர்கள்; முக்காடு போட்டுக் கொண்டு அழாதீர்கள்.
கஷ்டங்களைக் கொடுப்பவன் இறைவனே யானாலும், அதற்குத் தீர்வும் உண்டு!
முடியாதது என்ற சொல்லை என் அகராதியில் காண முடியாது என்று சொன்னான் நெப்போலியன். அதற்கு முன்னரே நாம் (தமிழர்கள்) சொல்லிவிட்டோம்.
–Subham–
You must be logged in to post a comment.