கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.
‘’அசுரர்’’-கள் யார், ‘சுரர்’-கள் யார் என்று குணங்களின் அடிப்படையில் மனிதர்களை இந்துக்கள் தரம் பிரித்து வைத்தார்கள். இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? பகவத் கீதையில் 16 ஆவது அத்தியாயத்தில் (தைவ அசுர சம்பத் விபாக யோகம்) இருக்கிறது. அசுர குணங்கள் எவை? தெய்வீக உணங்கள் எவை என்று கிருஷ்ண பரமாத்மா மிகத் தெளிவாகவே கூறி இரிக்கிறார். அது மட்டுமல்ல. விபூதி யோகம் என்னும் பத்தாம் அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் தான் யார் என்று பறவை, மிருகங்களைக் கூட சேர்த்திருக்கிறார். அதில் தன்னை அசுரர்களில் பிரஹலாதன் என்கிறார். இது எதைக் கட்டுகிறது? எல்லோரும் கடவுளின் படைப்பே.
“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – என்று பாரதி பாடியதற்கு இந்த பத்தாவது ( விபூதி யோகம்) அத்தியாயமே காரணம்.
நம் எல்லோருக்கும் அசுர குணங்களும் தெய்வீக குணங்களும் உண்டு. சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றிலும் தூயவர்களை – த்ரிகரணசுத்தி உடையவர்களை – நாம் மகான்கள் என்று போற்றுகிறோம். நம்மைப் போன்றவர்கள் அசுரர் அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை எனினும் அவ்வப்போது அசுர குணங்கள் தலை எடுப்பதால் நாம் இன்னும் சாதரண மனிதர்களாகவே இருக்கிறோம். ராவணன் போன்றோர் கலையிலும் கல்வியிலும், செல்வத்திலும் உயர்வு பெற்றும் ஒரு அசுர குணம் உச்சத்துக்குப் போனவுடன் அதன் காரணமாகவே இறக்க நேரிடுகிறது.
ஆக, சுருங்கச் சொல்லின் அசுர குணங்களில் ஏதேனும் ஒன்று ஒருவருக்கு, நூறு சதவிகிதம் மேலிடும்போது அவருக்கு அழிவு ஏற்படும் இது இந்து மதத்தில் பல்லாயிரக கணக்கான ஆண்டுகளாக உள்ள கொள்கை. இந்தக் கொள்கையில் வெள்ளைக்காரர் போன்ற சில வெளிநாட்டு “அறிஞர்கள்” அவர்களுடைய மதத்தைப் பரப்புவதற்காகவும் ஆட்சியை நிலை நாட்டுவதற்காகவும் ஆரிய—திராவிட வாதம் என்னும் விஷத் தூளைத் தூவினர். இது இந்திய வரலாற்றில் புரையோடிப் போய்விட்டது. இந்தியர்களை இரண்டாகப் பிரித்து, ஆரியர்கள் எல்லாம் தேவர்கள், திராவிடர்கள் எல்லாம் அசுரர்கள் என்று முத்திரை குத்தினர்.
இதைத் தாங்கள் சொல்லவில்லை என்றும் இந்து மத நூல்கள் சொல்கின்றன என்றும் இங்கொரு செய்யுள் அங்கொரு செய்யுள் என்று எடுத்து மேற்கோள் காட்டினர். இந்துக்களில் நிறையப் பேர் சோம்பேறித் தடியர்கள், விதண்டாவாதிகள், குதர்க்க வாதிகள், புத்திசாலிப் போல பேசும் கோணங்கிகள், அரை வேக்காடுகள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஏனெனில் ராமாயணத்தையோ, மஹாபரதத்தையோ, கீதையையோ, குறளையோ, தேவார திவ்யப் பிரபந்ததையோ வாழ்நாளில் ஒரு முறையும் படிக்க முயற்சி கூட செய்யாமல் கேள்வி மட்டும் கேட்கவும், குதர்க்க வாதம் மட்டும் செய்யவும் மட்டும் கற்றுக் கொண்டு விட்டனர்.
ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால், இந்துக்களைக் குறை சொல்வதிலும் நியாயம் இல்லை. அவர்களுடைய நூல்களைப் படிக்க நூறு பிறவி எடுத்தாலும் போதாது. பைபிள், குரான், ஆதிக்கிரந்தம் போன்றவற்றை சில மணி நேரங்களில் படித்து விடலாம். ஆனால் இந்து மத வேத புராண, இதிஹாச, உபநிஷத, ஸ்மிருதிகள் இவைகளைப் படிக்க கோடி கோடி ஜன்மங்கள் வேண்டும். ஏனெனில் சம்ஸ்கிருத மொழியில் உள்ள புத்தகங்களின் பெயர்களைப் படிக்கவே ஒரு ஜன்மம் போதாது!!!
இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்பீர்கள். இப்பொழுதுதான் ஹாலந்து நாட்டுப் லெய்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து ஒவ்வொரு துறையில் உள்ள முக்கிய புத்தகங்கள் பற்றி எழுதி தனித்தனி பகுதிகளாக வெளியிட்டு வருகின்றனர்.
அதில் அகராதி என்று எடுத்தால் அதில் மட்டும் நூற்றுக் கணக்கான பெயர்களும் புத்தகங்களின் சுருக்கமும் இருக்கும். பாணினிக்கு முன் எத்தனை இலக்கண வித்தகர்கள் இருந்தனர் என்று படித்தால் வியப்பாக இருக்கும். அப்போது உலகில் யாருக்கும் இலக்கணம் என்ற வார்த்தையோ அகராதியோ என்ன என்று “ஸ்பெல்லிங்” கூடத் தெரியாது!!
Tarakasura in Yakshagana, Mangalaore
மதம் என்று எடுத்துக் கொண்டால் இமய மலை அளவுக்கு நம்மிடம் புத்தகங்கள் உள. மற்றவர்களிடம் ஒரு உயர்ந்த மாடி வீட்டு அளவுக்குத்தான் புத்தகம். இதனால் அவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்து விடாதீர்கள். திருக்குறளில் உள்ள துறவறவியல் என்ற பகுதியில் மட்டும் கூட இந்துமதத்தை அடக்கிவிடலாம. அத்தனையும் அவ்வளவு அழகாக 130 குறள்களில் சொல்லிவிட்டார். 260 வரிகளில் இந்து மதத்தையே அடக்கிவிட்டார்.
கண்ண பிரான் 700 குறள்களில்– 1400 வரிகளில்– இந்து மத ‘’ஜூஸ் ‘’ பிழிந்து கொடுத்துவிட்டார் (குறள் ஈரடிச் செய்யுள். கண்ணனும் ஈரடியில் ஸ்லோக வடிவில் சொன்னான்). எதையும் படிக்காதது இந்துக்களின் குறையே.
மேலும் அசுரர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள் ஆகிய அனைவரும் ரிஷிகளுக்குப் பிறந்தவர்களே என்றும் புராண, இதிஹாசங்களில் மிக மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
ஆகவே அசுரர்கள் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதைப் புரிந்து கொண்டு கீழே உள்ள பட்டியலைப் படியுங்கள்:
கிருஷ்ணனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
பூதனா, சகடாசுரன், த்ரினாவர்த்தா, வத்சாசுரா, பகாசுரா, அகாசுரா, தேனுகாசுரா, காளீயன், ப்ராலம்பாசுரா, அரிஷ்டாசுர, கேசி அசுரா, சங்கசூடா, கம்ச, சாணூர, வ்யோமசுரா, மது, நரகாசுரா
அஹீ, விருத்திர
இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
அஹீ, விருத்திர பிராமண அசுரன்), திரிசிரஸ் (பிராமண அசுரன்),சம்பரன், அராரு, சுஸ்ன, குயவ, இலிபிஷ, உரன, ஸ்வர்பானு, அஹிசுவ, கரஞ்ச, பர்நாய, வாங்த்ர, அற்புத, ஔர்ணவாப, வ்ருகத்வார, பிப்ரு, சுமுரி, நமுசி, ரிதிக்ர, ஸ்ரீபிந்த, அனார்சனி, துனி, வல, ம்ரிக்ய, த்ர்பிக, துக்ர, வேடசு
இவர்கள் எல்லோருடைய பெயர்களும் அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதால் இவை அனைத்தும் சம்ஸ்கிருத பெயர்களே. வெளி இனத்தாரோ, வெளி நாட்டாரோ இல்லை.
இந்திர, மித்ர, வருண, வாயு, அக்னி, அர்க, வாகீச, நாசத்ய, வாசஸ்பதி, பிருஹஸ்பதி என்ற வேதக் கடவுளர் பெயர்களும் இதே போல அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதைக் காண்க.
அசுரர்களைக் கொன்ற கடவுளர்கள்
மது கைடப – ஹயக்ரீவ (விஷ்ணு)
ஹிரண்யகசிபு – நரசிம்ம
பலி – வாமன/த்ரிவிக்ரம
ராவண ( 50% பிராமண அசுரன்) – ராமன்
இந்திரஜித், கும்பகர்ண, மாரீச – ராமன்
கர, தூஷண, கபந்த, தாடகா- ராமன்
வாதாபி – அகஸ்தியர்
ஜடாசுர, பகாசுர – பீமன்
அந்தகாசுர, முயலக- சிவன்
பஸ்மாசுர – தன் வரத்தினாலேயே மரணம்
கஜமுகாசுரா- கணபதி
தாரக, சூரபத்ம- முருகன்
மஹிசாசுர,சும்ப, நிசும்ப, சுந்த, உபசுந்த—தேவி.
ராஹு, கேது ஆகியோர் அசுரர்களாகவும், கிரகங்களாகவும் கருதப்படுவர்.
Mahisasura was killed by Devi
இறுதியாக, புராண காலத்தில் அசுரர்கள் கூடுதலாகவும், இதிஹாச காலத்தில் குறைவாகவும் இருப்பதைக் காண்க. அதிலும் ராமாய ணத்தில் கூடுதலாகவும் மஹாபாரதத்தில் குறைவாகவும் இருப்பதையும் கவனிக்க — அதாவது, தீய குணங்களை உடையோர் அசுரர்கள் — புராண காலத்தில் வாழ்ந்திருந்தால் துரியோதணனைக் கூட அசுரர் என்று சொல்லி இருப்பர்!!. ரிக் வேத துவக்க காலத்தில் அசுரர் என்னும் சொல், நல்ல பொருளில் மட்டும் பயன்படுத்த ப்பட்டது. இந்திரனையும் அசுரன் என்றே போற்றுகிறது. பின்னர் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. சங்க காலத்தில் நாற்றம் என்றால் நல்ல (வாசனை) பொருள். இப்போது அதைக் கெட்ட பொருளில் (துர் நாற்றம்) பயன்படுத்துகிறோம். அதுபோலத் தான் அசுர என்ற சொல்லும் பொருள் மாறிப்போனது.
நம் எல்லோருக்கும் ‘’அசுர’’ பலம் கிடைக்கட்டும்!!
‘’சுர’’ குணமும் கிடைக்கட்டும்!
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.