
Article No. 2003
Compiled by London swaminathan
Date 19 July 2015
Time uploaded in London: 10-19
அரிஸ்டாடில்
கிரேக்க நாட்டு தத்துவவித்தகர் அரிஸ்டாடில், ஒரு கெட்ட மனிதனுக்குப் பிச்சை போட்டார்.
“அரிஸ்டாடில்! அவன் ஒரு அயோக்கியன், அவனுக்கு ஏன் பிச்சை போட்டீர்கள்?” என்று நண்பர்கள் கேட்டனர்.
அரிஸ்டாடில் சொன்னார்,
அட! நான் அவனுக்காகவா போட்டேன்? மனிதகுலத்துக்காகப் போட்டேன்” – என்றார்.
(தமிழில் ஒரு பழமொழி உண்டு: சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு, அதே போக்கு! அறிஞர்களின் உதார குணம் ஆழமானது; பொருளுடைத்து!)

நிலத்தை எரித்த சீன விவசாயி!
ஒரு சீன விவசாயி மலைப் பகுதியில், நெல் வயலில், வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பூமி அதிர்சி ஏற்பட்டு, கடல் உள்வாங்கி, திடீரென்று பின்னுக்குச் செல்வதைக் கண்டார். மாபெரும் சுனாமி பேரலைகள் வந்து, தாழ்வான இடம் முழுதும் வெள்ளக்காடாகப் போகிறது என்று உணர்ந்தார்.
தாழ்வான பகுதியில் தனது சொந்த கிராம மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். என்ன செய்வது? உரக்க கூக்குரல் போட்டாலும் காதில் விழாது; தான் கீழே போனால் எல்லோரும் “கூண்டோடு கைலாசம் போவோம்” — என்பது அவருக்குத் தெரியும்.
அவருடைய சமயோஜித புத்தி அவருக்கு உதவியது; பக்கத்தில் தனக்குச் சொந்தமான பெரிய வைக்கல்போர் (குவியல்) இருந்தது. அதற்குத் தீ வைத்தார். அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று கோவில் மணியைத் தொடர்ந்து அடித்தார். கோவில் மணியால் ஈர்க்கப்பட்ட கிராம மக்கள் மலை உச்சியைப் பார்த்தனர். அங்கே வயலில் எரியும் தீயைக் கண்ணால் கண்டனர். ஒஹோ! வயல் எரிகிறது. அதற்கு உதவி கோரி கோவில் மணியை அடித்து இருக்கிறார்கள் என்று எண்ணி கிராம மக்கள் அனைவரும் மலை உச்சிக்கு ஏறினர்.
சுனாமிப் பேரலைகள் வந்து அவர்கள் இதுவரை வேலை செய்த்த தாழ்வான பகுதிகளை மூழ்கடித்ததைக் கண்டனர்.
மலைக்கு மேலிருந்த விவசாயியின் சமயோசித புத்தி தங்கள் உயிர்களை எப்படிக் காப்பாற்றியது என்று எண்ணி அவருக்கு நன்றி கூறினர். அதுமட்டுமல்ல அவரை எந்த ஒரு சக்தி இப்படிச் செய்ய ஊக்குவித்ததோ அதை வணங்குவோம் என்று கருதி ஆண்டுதோறும் அந்த சக்தி தேவதையை இன்றும் வழிபட்டு வருகின்றனர்! அதாவது அவர் உயிருடனிருக்கும்போதே, அந்த தனி மனிதனை வழிபாடாமல், அவனுடைய நற்குணத்தை வழிபடத் துவங்கிவிட்டனர்.
(நம் நாட்டில் தனிமனிதனுக்குச் சிலைகளை வைத்துவிட்டு, அவர்கள் சொன்ன தத்துவங்களை மறந்து விடுகிறோம். காந்திஜியின் தத்துவங்களைக் காங்கிரஸ் கட்சி கொன்றது; திருவள்ளுவர் தத்துவங்களைத் திராவிடக் கட்சிகள் குழிதோண்டிப் புதைத்தன!)
தமிழர் நடுகற்கள்
சீனர்களைப் போல, தமிழ் நாட்டில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொடிய காட்டு மிருகங்களுடனோ, கொள்ளையர்களுடனுடனோ சண்டையிட்டு ஊரைக் காத்து உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு இன்றும் அவரது சக்திக்கு படைப்புகள் கொடுப்பதைக் காண்கிறோம். சில வீரர்கள் காலப் போக்கில் கிராம தேவதைகளாக்கப்பட்டு கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன!

மரம் நட்ட மாமனிதன்!
அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்னும் ஒரு மாநிலம் உள்ளது. அதன் புகழ்மிகு கவர்னர் ஹாக். அவர் இறக்கும் தருவாயில் சொன்னார். “நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னம் எழுப்பி காசு, பணத்தை வீணடிக்காதீர்கள்; என் கல்லறையின் தலை மாட்டில் பெக்கன் கொட்டை மரத்தை நடுங்கள்; என் கால் மாட்டில் வால்நட் மரக் கொட்டைகளை நடுங்கள்; இரண்டும் மரமாகி விதைகளைத் தள்ளும் போது என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய டெக்ஸாஸ் மக்களிடையே அவைகளை விநியோகிங்கள். அவர்கள் அதைப் பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் செழிக்கட்டும்” — என்றார்.
அதுபோலவே 1926 ஆம் ஆண்டுமுதல் அந்த மரங்களிலிருந்து கிடைத்த விதைகளை அருகிலேயே வரிசையாக நட்டு பெரிய மரச் சோலையை வளர்த்தனர். அவை பெரிதாகி விலையுயர்ந்த வால்நட், பெக்கன் பருப்பு விதைகளைக் கொடுக்கின்றன. அவைகளை நட்டு, மரக் கன்று வந்தவுடன் அவைகளைப் பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கின்றனர்.
என்ன அருமையான யோஜனை பாருங்கள்! தன்னுடைய நினைவையும் தக்க வைத்தார்: தன் நாட்டையும் செழிக்கச் செய்தார்!!
செத்தும் கொடுத்தான் சீதக்காதி
இதே போல தமிழ் நாட்டிலும் சீதக்காதி என்னும் பெருந்தகையின் புகழ் இன்றும் இருக்கிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி ! என்னும் கதையை முன்னரே எழுதிவிட்டேன். படித்தறிக!

போப்பும் ஸ்விFப்டும்
ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு அலெக்ஸாண்டர் போப் என்ற கவிஞரையும் ‘கல்லிவர்ஸ் ட்ராவல்’ முதலிய படைப்புகளைப் படைத்த ஜோனதன் ஸ்விப்ட் என்ற எழுத்தாளரையும் நன்கு தெரியும். கல்லிவரின் லில்லிபுட் யாத்திரை தமிழிலும் இருக்கிறது. இதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். நமது ‘விரலான்’ கதையை அவர் அரசியல் அங்கதமாக எழுதினார் என்பதை விளக்கி இருக்கிறேன் முன்னொரு கட்டுரையில்.
ஸ்விப்டிடம் போப் என்ன சொன்னார் தெரியுமா?
“என்னிடம் நிறைய பணம் இருக்கிறது; ஆண்டுக்கு நூறு பவுண்டுகள் வரை நன்கொடை கொடுக்க இயலும் (அந்தக் கலத்தில் 100 பவுண்ட் என்பது இப்பொழுது மில்லியன் போல); இந்தப் பூவுலகில் ஏதேனும் நல்லது செய்வேன்; புழுப்போல நெளிய மாட்டேன். உயிருடன் இருக்கும் போதே மற்றவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நான் பேரானந்தம் அடைவேன். நான் இறந்த பிறகு என்னிடம் எனக்கு கல்லறை எழுப்பக்கூட பணம் மிச்சம் இருக்கக் கூடாது. என் கல்லறைக்கு வெளியே யாராவது ஒருவன் காசு வேண்டி நிற்பானாகில் நான் நாணித் தலை குனிவேன்!”
(எவ்வளவு உயரிய சிந்தனை! ‘தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’, ‘இல்லை என்பதை இல்லை ஆக்குவேன்” – என்று முழக்கமிட்ட புரட்சிக் கவிஞன் பாரதியை இது நினைவுபடுத்தும்).

இசைமேதை பிராம்ஸ்
இசைமேதை பிராம்ஸ் அவர்களுக்கு ஒரு ஆங்கிலேயர் 1000 பவுண்ட் (இப்போது கோடி பணத்துக்குச் சமம்) உயில் எழுதிவிட்டு இறந்து விட்டார். இந்தச் செய்தியை பிராம்ஸிடம் சொன்னார்கள். அவர் சொன்னார்: “இதைவிட பேரானந்தம் தரும் அனுபவம் உண்டா? இதைவிட நல்ல செய்தி என்ன இருக்க முடியும். என்னை அறியாத ஒருவன் – எனக்கு கடிதமே எழுதாத ஒருவன் – இப்படி என்னை நினைவிற் வைத்துக் கொண்டது என் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுவிட்டது. முன்னைப் போல, மீண்டும் ஒரு முறை அளவிட முடியாத ஆனந்தம் பெற்றேன். வெளியே எனக்குக் கிடைத்த பெரிய விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் எல்லாம் மேலானது இது! எனக்கு இந்தப் பணத்தை ‘முதலீடு’ செய்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.அவரைப் போலவே நானும் இதை மற்றவர்களுக்குக் கொடுத்து பெரு மகிழ்ச்சி அடைவேனாக”
இந்த சம்பவங்களைப் படித்துவிட்டு கீழேயுள்ள மேற்கோள்களைப் படியுங்கள். பொருள் தெள்ளிதின் விளங்கும்!

“கைம்மாறு வேண்டா கடப்பாடு” – குறள் 211
பலனை எதிர்பாராமல் உதவி செய்
“ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்” – குறள் 214
மற்றவனுக்கு உதவுபனே உயிர் வாழ்பவன்; மற்றவர்கள் நடமாடும் பிணங்கள்!
“ஊருணி நீர் நிறைந்தற்றே பேரறிவாளன் திரு” -215
நல்லோரிடமுள்ள செல்வம் ஊற்றுத் தண்ணீர் போல எல்லோருக்கும் பயன்படும்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகை – 221
தேவைப்பட்டவருக்கு காசு கொடுப்பதே தானம்.
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று 222
தானம் செய்தால் மறு ஜன்மத்தில் பலன் என்று நினைக்காதீர்கள்! சொர்க்கம் என்று ஒன்று இல்லாவிடினும் கொடுப்போம்!
“ஈத்துவக்கும் இன்பம் அறியார் வறியார்” – 228
கொடுக்கும் போது ஏற்படும் ஆனந்தத்தை அறியாதோர்தான் ஏழைகள்!
சம்ஸ்கிருதப் பொன் மொழிகள்
“பெருந்தன்மை கொண்டோருக்கு உலகமே ஒரே குடும்பம்” – பஞ்சதந்திரக் கதைகள்
உதார குணம் படைத்தவன் கொடுப்பான்; கொடுத்துக் கொண்டே இருப்பான். கருமியோ கொடான்,கொடான்; கூனிக் குறுகி குமுறுவான்! –கஹாவத் ரத்னாகர்
தனக்கே உடையில்லாத பிச்சைக்காரன் கூட, தானம் செய்து மகிழ்வான் — கஹாவத் ரத்னாகர்
-சுபம்-
You must be logged in to post a comment.