பார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்? வர்ணம் வேறு, ஜாதி வேறு- பகுதி-3 (Post No.3161)

brahmin4

Written by London swaminathan

Date: 17 September 2016

Time uploaded in London: 7-30 AM

Post No.3161

Pictures are taken from various sources; thanks.

 

வேதங்களையும், பிராமணீயத்தையும் பல இடங்களில் புகழ்ந்து பாடிய பாரதி, சில இடங்களில் பிராமணர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளான். இது ஏன்? என்று பார்ப்போம்.

 

பாரதியே ஒரு பிராமணன் என்பதையும் வேதங்களைக் கற்றவன் என்பதையும்,  தீவிர தெய்வ நம்பிக்கை உடையவன் என்பதையும் மறந்து விடக்கூடாது.

 

சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல தலைவர்கள் அந்தணர்களே. ஆனால் அதை    விட அதிக அளவுக்கு வெள்ளைக்காரனிடம் வேலை பார்த்ததும் அந்தணர்களே. இவர்களில் பலர்,  பாரதிக்கு எதிராக நின்றனர். உளவும் சொன்னார்கள்.

 

பாரதியின் சீர்திருத்தக் கருத்துகளை ஜீரணிக்கும் அளவுக்கு அறிவின் வளர்ச்சியும் பல பிராமணர்களுக்கு இல்லை. மனைவி செல்லம்மாவுடன் கைகோர்த்து, ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி, தெருக்களில் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. அதைக் கிண்டலும் செய்தார்கள்.

 

 

இதற்கெல்லாம் மேலாக பெரும்பாலான பிராமணர்கள் வேதங்களின் உண்மைக் கருத்துகளைப் பின்பற்றாமல் சடங்குகளில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தனர். இன்னும் பலரோ எந்த வித அனுஷ்டானங்களையும் பின்பற்றாமல் — அதாவது சந்தியா வந்தனம் முதலியன செய்யாமல் — பிறப்பினாலும், பூணுல் போட்டதாலுமே — தாங்கள்தான் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று எதிர்பார்த்தனர். இந்த போலித் தனத்தை பாரதி ஏற்கவில்லை. மற்ற விஷயங்கள் அவனது பாடல் வரிகளிலேயே இலகு தமிழில், பழகு தமிழில் உள்ளன. நான் விளக்கத் தேவை இல்லை.

brahmin3

வேதம் அறிந்தவன் பார்ப்பான்

 

வேதங்களில், நான்கு வர்ணம் என்று தொழில் ரீதியில் ஜாதியை அணுகியதை, பாரதி ஏற்கிறான். அவனே அதைப் பாடலிலும் தருகிறான்:-

 

வேதம் அறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி தவறாமல் – தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

(நாய்க்கன் = அரசன்)

 

 

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

சோம்பலைப் போல் இழிவில்லை

 

நாலு வகுப்பும் இங்கு ஒன்றே- இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே- செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

இதே கருத்து ரிக் வேதத்தின் புருஷ சூக்த மந்திரத்தில் இருப்பதை முதல் பகுதியில் கொடுத்துள்ளேன்.( இது மூன்றாவது கட்டுரை.)

 

நாலு குலங்கள் அமைத்தான்; – அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்

சீலம் அறிவு கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

 

மேலவர், கீழவர் என்றே – வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியை எல்லாம் – இன்று

பொசுக்கி விட்டால் எவர்க்கும்நன்மை யுண்டென்பான்

(கண்ணன் என் தந்தை – பாடல்)

 

 

bharati-stampz

பேராசைக்காரனடா பார்ப்பான்!

 

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் – ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் — இவர்

ஏதுசெய்தும் காசு பெறப் பார்ப்பார்.

 

பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்

பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை…………….

………………………………………. (வரிகள் கிடைக்கவில்லை)

 

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்

பிச்சுப் பணம் கொடு எனத் தின்பான்

கொள்ளைக் கேசெந்—————-(வரிகள் கிடைக்கவில்லை)

 

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்

 

……………………….

…………………………………(வரிகள் கிடைக்கவில்லை)

 

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு

நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு

பாயும் கடி நாய்ப் போலீசு – காரப்

பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு (fees)”

 

பூணூல் போட்டுக் கொண்டதால் மட்டும் உயர்வு என்ற கொள்கையை பாரதி ஏற்கவில்லை. மஹாபாரதம் சொல்லுவது போல (முதல்  இரண்டு பகுதியில் காண்க), குண நலன்களால் பிராமணனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆகையால் வெள்ளைக்கரனை எப்படி “துரை” என்று சொல்லக்கூடாதோ அப்படி பிராமணர்களையும் இனிமேல் “ஐயர்” (பண்பாடுமிக்க உயர்ந்தோர்) என்று சொல்லாதீர்கள் என்றார்:-

bharati-b-w

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே

ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (ப்ராக்ருதம்)= ஐய(ர்)-தமிழ்

பொருள்: பண்பட்ட மக்கள், மதிப்பிற்குரியோர்.

 

சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் மனு ஸ்மிருதியில் ஏராளமான இடை செருகல் நுழைக்கப்பட்டன. அதில் பல ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளன. ரிக் வேதத்தில் முதற்கொண்டு இடைச் செருகல், பிற்சேர்க்கை கண்டு பிடித்த வெளி நாட்டு “அறிஞர்களும்”, அவர்களுடைய இந்திய அடிவருடிகளும் மனு ஸ்மிருதியை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டனர். ஏனெனில் திட்டுவதற்கு அதில் நிறைய சரக்குகள் இருந்தன. அந்த மனு நீதி எங்கேயும் பின்பற்றப்பட்டு சூத்திரர்களை தண்டித்ததாக வரலாறு இல்லை. அவரவர் குற்றத்துக்கு ஏற்பவே தண்டனைகள் கொடுக்கப்பட்டன. வெள்ளைக்கா ரன் காலத்திலும் அவனை எதிர்த்த பிராமணர் அனைவரும் தூக்கில் போடப்பட்டனர் அல்லது சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படி இறந்தோர் ஏராளம் (குறிப்பாக வங்கத்தில்). இந்த மனு நீதியைத் “தமது” என்று சொல்லிய சில பேதைகளைக் கண்டிக்கும் முகத்தான் பாரதியும் பாடினான்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.

 

பாரதிக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழில் அதிகப் பாடல்களைப் பாடிய கபிலன் என்ற “புலன் அழுக்கற்ற அந்தணாளன்”, பாரியின் மகள்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று மாப்பிள்ளை வரன் தேடினான். இது போல ஜாதிக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து எறிந்து, மனு நீதியைப் பின்பற்றாமல், பணியாற்றியோர் ஏராளம். மயில் வளர்க்கும் கீழ் ஜாதி மக்களை அழைத்து மாபெரும் மௌர்ய சாம்ராஜ்யத்தை உண்டாக்கிய சாணக்கியன் கடைசி வரையில் குடிசையில் வாழ்ந்தான். மனு தர்மமும் கூட பிராமணன் பொருளே சேர்த்துவைக்கக் கூடாதென்கிறது..

 

இந்தப் பிண்ணனியில் பாரதியின் வரிகளைப் படித்தால் அவன் ஏன்

சாத்திரத்தை “சதி” என்று சொன்னான் என்று தெளிவடைவோம்.

brahmin2

முன்னாள் ராஷ்டிரபதியும், தத்துவ வித்தகருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், அவரது பகவத் கீதை வியாக்கியானத்தில், ஜாதிகள்/வர்ணம் பற்றி விள்ளக்குகையில்,  கீழ்கண்ட ஸ்லோகங்களைக் கொடுத்துள்ளார்:-

 

அந்த்யஜோ விப்ர ஜாதி ச ஏக ஏவ சஹோதர:

ஏக யோனி ப்ரசூதஸ் ச ஏக சாகேன ஜாயதே

 

அந்தணர்களும், ஐந்தாவது ஜாதியினரும் சஹோதர்களே; அவர்கள் ஒரு தாயிடத்தில் பிறந்தவர்களே (பழைய கால ஸ்லோகம்)

 

ஏகவர்ணம் இதம் பூர்வம் விஸ்வம் ஆசீத் யுதிஷ்டிர

கர்மக்ரியா விஷேசேன  சாதுர்வர்ண்யம் ப்ரதிஷ்டிதம்

 

ஓ, யுதிஷ்டிரா! ஆதிகாலத்தில் ஒரே ஜாதிதான் இருந்தது; தொழில் வேறுபாட்டால் நான்கு பிரிவுகளாக அவை பிரிக்கப்பட்டன.

 

எல்லாரும் ஓர் குலம்

 

எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்;

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம்

 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — ஜய ஜய ஜய

பாரத சமுதாயம் வாழ்கவே  – சுப்பிரமணிய பாரதி

 

–Subham–