மொழிபெயர்க்க முடியாத ஒரு அற்புதச் சொல்!

good Dharma2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1412; தேதி 15 நவம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உள்ள தர்மம் என்ற சொல் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கிறது. இது எந்த மொழியிலும் ஒரே சொல்லால் மொழி பெயர்க்க முடியாத ஒரு அற்புதமான சம்ஸ்கிருதச் சொல். தமிழில் அறம் என்று சொல்வோம். ஆனால் தர்மம் என்ற சொல்லின் எல்லாப் பொருளையும் அது தராது.

தர்ம என்பது இந்தியில் தரம் என்றும் தமிழில் அறம் என்றும் உரு மாறியது. அறம் என்ற சொல், சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்தது என்று நான் சொல்லவில்லை. பாரதீய சிந்தனை — ஒரே சிந்தனை. ஆகையால் ஒரே மாதிரித்தான் சொற்களும் உருவாகும். சிவ பெருமானின் உடுக்கை ஒலியின் ஒரு புறத்திலிருந்து எழுந்த சப்தத்தை ஒரு குழு ‘’தர்ம’’ என்று கேட்டனர். மற்றொரு குழு ‘’அறம்’’ என்று கேட்டனர் என்பதே சாலப் பொருந்தும்.

PoweroftheDharmacover

இதை இன்னொரு எடுத்துக்காட்டாலும் உணரலாம். ‘’தர்ம, அர்த்த, காம’’ என்ற வட மொழிச் சொற்றொடர் ‘’அறம், பொருள், இன்பம்’’ என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம் (சூத்திரம்1037, 1363), திருக்குறளிலும் (501, 754, 760, முப்பால்) காண்கிறோம். காலத்தால் முந்திய வேத உபநிஷதங்களைத் தமிழர்கள் ‘காப்பி’ அடித்தனர் என்பதைவிட, பாரதீயர்கள் ஒரே மாதிரித்தான் சிந்திக்க முடியும் என்று கொள்ளலாம்.

இதை இன்னொரு எடுத்துக்காட்டாலும் கண்டு கொள்ளலாம். தர்ம–அர்த்த காம—என்பதன் இடையில் உள்ள ‘’அர்த்த’’ என்பதற்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இரண்டு அர்த்தம்–பொருள் உண்டு.
அர்த்தம் = பொருள்

இந்தச் சொல்லின் பொருள் MEANING என்ன? இந்தச் சொல்லின் அர்த்தம் என்ன என்று நாம் கேட்கிறோம்.

அர்த்தம் என்பதை செல்வம் WEALTH என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழிகளிலும் ஒரு சொல் இப்படி ஒரே பொருளுடன் வழங்குவது தன்னிச்சையாக (Not a coincidence) நடந்ததல்ல. தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்ததையே இவை காட்டும்.

aum

பாரத மக்கள், சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் ஒன்று பட்டவர்கள் என்பதற்கு இது போல நூற்றுக் கணக்கான எடுத்துக்காத்துகளை எடுத்துச் சொல்லலாம். இன்னும் ஒரே ஒரு எடுத்துக்காட்டு:–

சூத்திரம் = நூல் BOOK (இரு மொழிகளிலும் புத்தகம் என்ற பொருளில் வரும்.
எ.கா. காம சூத்திரம், கல்கி எழுதிய நூல்கள்…………………………

சூத்திரம் = நூல்கண்டில் இருந்து நாம் ஊசியில் நுழைக்கும் நூல்THREAD.

எ.கா. தாலிக் கயிற்றை மங்கலசூத்ரம் என்பர். தமிழிலும் இந்த இரண்டு பொருள்களும் உண்டு.நிற்க.
தருமம் என்பதை ஒரே சொல்லால் விளக்கவே முடியாது.

அம்மா, கொஞ்சம் தரும் போடுங்கம்மா. ஐயா பெரிய தருமவான். அவர் இருந்தா இவ்வளவு நேரம் என்னை நிக்க வச்சிருக்க மாட்டார் என்று பிச்சைக்காரன் சொல்லும் இடத்தில் தர்மம் என்பதன் பொருள் ‘தானம்’.

சட்டசபையில் நம்து கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, இது நியாயமா, தர்மமா, முறையா, நீதீயா, நேர்மையா? முதலமைச்சரே பதில் சொல்லட்டும் என்று சொல்லும் போது அது தர்ம நூல்களில் அல்லது அம்பேத்கர் என்பவர் தலைமையில் எழுத சட்ட விதிகளைக் குறிக்கும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இதே சொல்லை – “நாம் எல்லோரும் இந்து தர்மத்தைப் பின்பற்ற வேண்டும்” — என்று சொல்லும்போது அதன் பொருள் மிகவும் விரிவடைகிறது.

பஞ்சபாண்டவர்களில் யுதிட்டிரனுடைய பெயரை தர்மன் என்று சொல்லும்போது நெஞ்சாரப் பொய் சொல்லமாட்டான், யாருக்கும் தீங்கு செய்யமாட்டான் என்ற பொருளில் பயன்படுத்துவோம்.

ஒருவருடைய கடமையையும் தர்மம் என்போம். மருந்து எழுதிக் கொடுத்து அதற்குக் காசு வாங்குவது டாக்டர்கள் தர்மம். மக்களுக்கு இன்பம் கொடுத்து காசு வாங்குவது விலை மாதர்களின் தர்மம், போரில் எதிரிகளைக் கொல்வது படைவீரனின் தர்மம் என நமது நூல்கள் பகரும்.

Acharya-Dharma-Manifesto

(1)சட்டம், (2)கடமை, (3)நேர்மையான நடவடிக்கை, (4)சமூக தார்மீக அமைப்பு, (5)குணநலம், (6)ஒரு பொருளின் இயற்கையான நடவடிக்கை (தேளுக்கு தர்மம் கொட்டுவது — ஆகிய அத்தனையும் – தர்மம் என்னும் குடையின் கீழ் வந்து விடும்.

வடமொழியில் தர்மம் என்பதன் வேர்ச்சொல் ‘’த்ரு’’.
அதன் பொருள் ‘’தாங்குதல்’’, ஆதாராமாக இருத்தல்.
பாராதீய சிந்தனையின், செயல்பாட்டின் ஆதாரம் அது.

இதில் இன்னொரு விஷயத்தையும் சிந்திப்போம். ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. மாதா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் மதர், மெடர், மெடர்னிட்டி, மெடெர்னல் என்று நூற்றுக்கணக்கான சொற்களைக் காணலாம். ஆனால் இந்த தர்ம என்ற சொல்லை ஏன் பிறமொழிகள் எடுத்துக் கொள்ளவில்லை? தமிழில் மட்டும் அதே சப்தத்துடன் (தர்ம=தரம்=அறம்) அச் சொல் வழங்கிவருகிறது என்று யோசித்தோமானால் ஒரு பெரிய ரகசியம் புரியும். உலகின் ஆதி மொழி இரண்டே இரண்டுதான். அதற்குள் உலகையே அடக்கிவிடலாம். நம்மிடமிருந்து ஐரோப்பியர்கள் மொழிகளை மட்டுமே கற்றனர். அடி வேர்களை, ஆணி வேர்களை அவர்கள் அறியவில்லை. தமிழனும் சம்ஸ்கிருதம் பேசுவோனும் மட்டுமே ஆணிவேர்கள். அதைப் புரிந்துகொண்டால் உலகையே அளந்துவிடலாம்!!
dharma

வேதம் “தர்மம் சர, சத்யம் வத” (அறம் செய்மின்; உண்மை பேசுமின்) என்று சொல்கிறது. நாமும் அதையே பின்பற்றுவோம்.

Contact swami_48@yahoo.com