Written by London swaminathan
Date: 26 March 2017
Time uploaded in London:- 18-23
Post No. 3759
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
1907 ஆம் ஆண்டு கொழும்பு புதிய சோணகத்தெரு, 20ம் நெம்பர் கிரகத்தில் ஸ்தாபித்திருக்கும் தமது வைத்திய ஜீவன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்ட கோஹ சாஸ்திரம் நான்காவது அத்தியாயத்தில் உள்ள கதை (மஹா ராஜ் கெங்காப் பிரசாத் அவர்களால் ஸம்ஸ்கிருத பாஷையிலிருந்து தமிழ் நடையில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது.
” மானிடர்களில் விவாக சம்பந்தம் பிரதாமனமாய் உண்டாயிருப்பது போலவே மிருகங்கள், பக்ஷிகள் முதலியவைகளிலும் விவாக சம்பந்தம் இயல்பாய் உண்டாகியிருக்கின்றதென அறியலாம்.
அன்றியும் மிருகங்கள் பஷிஜாதி இவைகளில் பதிவிரதா தர்மம் பொருந்தியவை அநேகமிருக்கின்றன. சுலபமாய்க் கவனிக்குமிடத்து, விலங்கினங்களில் சிங்கம், மான், முதலியவைகளும், பறவையினங்களில் புறா, அடைக்கலான் ஆகிய இவைகளின் சுபாவத்தினாலும் நாம் எளிதில் அறிந்துகொள்ளக்கூடும்.
1.விலங்கினங்களில் மிருகேந்திரன் எனப்படும் சிங்கம் தன் ஆயுள் காலத்தில் ஆண், பெண் ஆகிய இரண்டு குட்டிகளை மட்டும் ஈனுகின்றது
2.அன்றியும் மான்களில் பதிவிரதா தன்மை எவ்விதம் உண்டாகியிருக்கிறதெனில், அதாவது பூலோகத்தில் அனந்தம் தாமரைப் புஷ்பங்களுக்கும் கதிரவன் ஒருவன் தன் கிரணத்தால் அவைகளை மலரச் செய்கின்றார்போல, அநேக பெண் மான்களுக்கு ஒரே கலைமான் அவைகளோடு சுகித்த்ருந்து சந்தோஷமடையச் செய்கின்றது.
3.பறவையினங்களில் புறா, அடைக்கலான் முதலியவை தனிமையிலிராமல் ஜோடி ஜோடியாய்க் கூடிக்குலாவியிருப்பதைப் பார்க்கலாம். இவைகள் தமது கலைகளைத் தவிர வேறு ஆண் பறவைகளோடு சம்பந்தப்படுவதில்லை இவ்வண்ணம் பக்ஷி ஜாதிகளில் பதிவிரதாத் தனமை யுண்டென்பதைச் சில கதைப் புத்தகங்களால் அநேகர் அறிந்திருக்கலாம். அவ்வாறான கதைகளை இங்கு விரித்துரைத்தல் அவசியமன்று.
- விஷ ஜந்துக்களில் நாக ஸர்ப்பத்திற்கு பதிவிரதாத் தன்மையுண்டென்பது புலப்படக்கூடியதே.
ஆனால் மிருகங்கள், பக்ஷிகள் முதலிய ஜீவஜெந்துக்களிற் சில, பதிவிரதாத் தனமை யுடையவைகளாய் இருப்பதுபோல், அவைகளில் சில, விபசாரத்தன்மை யுள்ளவனவாயுமிருக்கின்றன.
அதாவது ஆடு, கோழி, ஓந்தி முதலியவைகளே விபசாரத்துக்கு அத்தாக்ஷியாகின்றன.
1.ஓர் பெண் நாயானது தன்னோடு அநேக நாய்கள் சம்பந்தப் பட்டாலும், அவைகளுக்கிணங்கி இடங்கொடுக்கின்றதல்லவா?
2.அப்படியே ஆடுகளில் விபசாரத் தன்மையுண்டு.
அஜெய – புத்திரம் – வம்ஸ – சிரோன்மணி, கபடன் – ராக்கது – நிஜகுலம் ” என்ற சம்ஸ்கிருத ஸ்லோகத்தின்படி, ஆடானது தன் வம்சத்தில் தாய் என்றும் பிள்ளை என்றும் விகற்பமின்றி ஏகசமமாய் ஒன்றையொன்று கூடி சுகிக்கும் தன்மையுடையதாயிருக்கின்றது.
3.ஓந்திகளிலும் கோழிகளைப்போல் விபசாரத் தன்மையுண்டு.
4.பெட்டைக் கோழியானது சேவலுடன் கூடுவதற்கு விருப்பமின்றிப் பிர த்யேகமாய் மேய்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் சேவலானது அதைப் பின்பற்றித் துரத்திச் சென்று பலவந்தமாய்க் கூடிச் சுகிப்பதுமுண்டு. இதனைகண்ட மற்றொரு சேவல் முன்கூடிச் சுகித்த சேவலைத் துரத்திவிடுவது வழக்கம்.
இது காரணம் பற்றியே மேற்கூறிய ஜீவராசிகளில் பதிவிரதாத் தன்மையும் விபசாரத் தன்மையும் இருக்கின்றதெனத் தெரிந்து கொள்ளலாம்.
டில்லி பாதுஷா மகள் கதை
சிலகாலத்திற்குமுன் டில்லிநகரத்து அக்பர் பாதுஷா என்னும் சக்ரவர்த்தியின் குமாரத்தி ஒரு நாள் அரண்மனையின் வெளிப்புறங்களில் உல்லாசமாய் உலாவிக்கொண்டிருக்கும் சமயத்தில் அங்கு மேய்ந்து திரிந்த கோழிகள் செய்யும் சந்தான சந்தோஷ (SEX) கேளிக் கையைக் கண்டதின்பேரில் அவைகளின் விபரீதச் செய்கையைக் கவனித்து, தான் எப்படி விவாகஞ் செய்துகொள்வதென மன அருவருப்புடன் வியாகூலமடைந்து விவாக சம்பந்தத்தில் விருப்பமற்றவளானாள்.
இவ்வண்ணாம் ராஜ குமாரத்தி தனக்கு விவாகம் செய்தல்வேண்டாமென மறுத்து மனவெருப்புற்றிருந்ததை அறிந்த பாதுஷாவின் மந்திரியாகிய பீர்வல் என்பவர் அந்த ராஜகுமாரத்தி வசித்திருக்கும் அரண்மனையில் சில புறாக்களைக் கொண்டுபோய் வைத்து வளர்க்கும் படி ஆக்ஞாபித்திருந்தார் (கட்டளை இட்டிருந்தார்).
இவ்வாறு புறாவினங்கள் வளர்ந்து அவை ஜோடி ஜோடியாய்த் திரிந்திருந்து தங்கள் பேடைகளுடன் வெகு சரச சல்லாபமாய்ச் சந்தான சந்தோஷம் செய்வதையும், பேடைகள் இட்ட முட்டைகளை ஆண்புறாக்களும் கூடவிருந்து அவைகளை மாறி மாறி அடைகாத்துக் காப்பாற்றி வரும் தன்மை யையும், புறாக்கள் ஜோடி ஜோடியாய்ச் சேர்ந்து இடுகின்ற இருமுட்டைகளினின்று ஆண் ஒன்று பெண் ஒன்றுமாய்க் குஞ்சுகள் உற்பத்தியாகி யிருப்பதையும் பார்த்த பாதுஷாவின் குமாரத்தி வெகு ஆச்சரியத்துட ன் பேரானந்தங்கொண்டு தானும் மணஞ்சூட்டிக்கொள்ள அபேட்சையுள்ளவளானாள்.
((1907 ஆம் ஆண்டு புத்தகத்திலிருந்து.))
–Subham–