Written by S NAGARAJAN
Date: 1 July 2017
Time uploaded in London:- 6-11 am
Post No.4041
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
பாக்யா 2-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
செரிங்கட்டி விதிகள்! – 1
ச.நாகராஜன்
“பாலூட்டி இனங்களின் வகைகளிலும் எண்ணிக்கையிலும் ஆப்பிரிக்கா குறிப்பிடத்தகுந்த இடத்தை வகிக்கிறது… ஆனால் இங்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது?” – ஜூலியன் ஹக்ஸ்லி
வாழ்க்கை எப்படி இயங்குகிறது? இயற்கையானது எப்படி சரியான எண்ணிக்கையில் சிங்கங்களையும் வரிக்குதிரைகளையும் இதர இனங்களையும் ஆப்பிரிக்க காடுகளில் படைக்கிறது? மீன்கள் சரியான எண்ணிக்கையில் எப்படி உலகின் பெருங்கடல்களில் உருவாகின்றன?
இவை அனைத்தும் ஏதோ தற்செயலாகப் படைக்கப்பட்டு உயிர் வாழ்வன அல்ல. இயற்கை எல்லாவற்றிற்குமே சரியான ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டே இயங்குகிறது; புவியை இயக்குகிறது.
இதை ஆராயப் புகுந்தார் பிரபல விஞ்ஞானி சீன் கரோல். (SEAN B.CARROL) தான் கண்டுபிடித்தவற்றை அழகுற ‘தி செரிங்கட்டி விதிகள்’ (THE SERENGETI RULES) என்ற நூலில் விளக்கியுள்ளார்.
அணுத்துகள் முதல் பெரிய சுற்றுப்புறச் சூழல் அமைப்பு வரை அனைத்துமே ஒரு தர்க்கரீதியான வகையில் இயற்கையால் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை!
இந்த இயற்கை மர்மத்தை விடுவிக்கவும் புரிந்து கொள்ளவும் ஏராளமான விஞ்ஞானிகள் தங்கள் ஆயுள் காலம் முழுமையும் அர்ப்பணித்து நமது சுற்றுப்புறச் சூழலை ஆராய்ந்து வந்துள்ளனர்.இப்படிப்பட்ட விஞ்ஞானிகளின் சரிதத்தை தொகுத்திருக்கிறார் சீன் கரோல்.
இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராயத் தகுந்த இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல்கரிள் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.
உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.
1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு வந்து சேர்ந்த பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அசந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அசந்து போனது!
கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.
செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.
70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.
செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.
முதல் விதி : எல்லா உயிரினங்களும் சம அளவில் படைக்கப்ப்டவில்லை.
எவ்வளவு தேவையோ அந்த அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது.
இரண்டாம் விதி: சில முக்கியமான உயிரினங்கள் தொடர்கூட்ட அளவில் மற்றவற்றின் மீது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
அதாவது குறிப்பிட்ட சில முக்கிய உயிரினங்களை மட்டும் கண்காணித்தால் போதும். அது ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.
மூன்றாவது விதி: சில உயிரினங்கள் பொதுவான ஆதார வளங்களுக்காகப் போட்டி போடுகின்றன.
ஒவ்வொரு உயிரினமும் தமக்கென ஒரு இடத்தையும் ஆதார வளத்தையும் கொண்டுள்ளது. உயிரினங்களுக்கு இடையே உள்ள போட்டியானது அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. அந்த இனங்களின் பல்வேறு வகைகளையும் கட்டுப்படுத்துகிறது.
ஆக இயற்கை தனக்கென ஒரு கட்டுப்பாட்டை நியமித்துக் கொண்டு அதை யாருமோ அல்லது எதுவுமோ மீறாத வகையில் காத்தும் வருகிறது.
மற்ற விதிகளை அடுத்துப் பார்ப்போம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்க விஞ்ஞானியான தாமஸ் மிட்ஜ்லி (Thomas Midgely) சென்ற இருபதாம் நூற்றாண்டில் தான் ஒருவராகவே அபாயகரமான இரண்டு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர். ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் அவர் கெமிகல் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். கார்களின் எஞ்சின் அடிக்கடி ஸ்டார்ட் ஆகாமல் திணறவே அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வேலை அவருக்கு வந்தது. டெட்ரா எதில் லெட்-ஐ பெட்ரோலுடன் கலந்தால் எஞ்சின் சரியாக இயங்கும் என்பதை அவர் கண்டுபிடிக்கவே கம்பெனிக்கு ஏக லாபம். ஆனால் அந்த காரீயம் விஷம் என்பதால் அவர் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுப்புறச் சூழலின் கேட்டிற்கும் அந்தக் கண்டுபிடிப்பே காரணமாக அமைந்தது.
கம்பெனியின் துணைத் தலைவராக ஆன அவருக்கு அடுத்த ஒரு சவால் எழுந்தது.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் ரெப்ரிஜரேட்டரில் விஷமுள்ள வாயுக்கள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. அது கசியும் போது பலர் இறக்க நேர்ந்தது. அமெரிக்காவில் உள்ள ஓஹையோவில் க்ளீவ்லேண்ட் நகரில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் ரெப்ரிஜரேட்டரில் கசிவு ஏற்படவே நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்தனர்.
விபத்து ஏற்பட்ட மூன்றே நாட்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வைக் கண்டார் மிட்ஜ்லி. அவர் கண்டுபிடித்த வாயு தான் ஃபிரியான். ரெப்ரிஜரேட்டர்களில் ஃபிரியான் வாயு பயன்பாட்டிற்கு வந்தது.
விஞ்ஞானிகளுக்கு முன்னால் தானே அதை அவர் சுவாசித்துக் காண்பித்தார். அத்தோடு மட்டுமின்றி அது எரியாது என்பதை விளக்க எரியும் மெழுகுவர்த்தி மீது அதை ஊதிக் காட்டினார்
அவ்வளவு தான், உலக கம்பெனிகள் அனைத்தும் ஃப்ரியான் வாயுவுக்குத் தாவினர். என்றாலும் கூட சமீபத்தில் தான் ஃப்ரியான் வாயுவும் கூட ஓஜோன் படலத்திற்கு தீங்கு விளைவிப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது மட்டுமல்ல, இன்னும் 117 அபூர்வ கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அவரது கண்டுபிடிப்புகளில் ஒன்றால் அவர் போலியோ நோய்க்கு இலக்காகி கால்கள் விளங்காமல் படுத்த படுக்கையானார். அங்கும் சும்மா இருக்கவில்லை அவர்! தன்னைப் படுக்கையிலிருந்து சுலபமாக எழ வைக்க தன்னைத் தூக்கும் ஒரு கருவியைக் கண்டு பிடித்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு நாள் அந்தக் கருவியில் இருந்த இரண்டு கயிறுகளில் சிக்கி அவர் இறந்தார்.
அபூர்வமான விஞ்ஞானிகளுள் ஒருவர் தாமஸ் மிட்ஜ்லி!
***