Written by London swaminathan
Date: 8 August 2018
Time uploaded in London – 11-48 AM (British Summer Time)
Post No. 5300
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
குருட்டுக் கவிஞர் மில்டனும் செவிட்டு அறிஞர் எடிசனும் சமாளித்த விதம்!
உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் பலர் கண்பார்வையற்றவர்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் அருமையான கவிகளைப் பொழிந்தவர் தீர்க்கதமஸ் (நீண்ட இருள்). கண்பார்வையற்றதால் ஏற்பட்ட காரணப் பெயர் இது. கிரேக்க மொழியில் முதல் காவியத்தை இயற்றிய ஹோமரும் அந்தகரே. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற பாரடைஸ் லாஸ்ட் காவியத்தை உருவாக்கிய மில்டனும் கண்பார்வை இழந்தவரே. தமிழ் கூறு நல்லுலகில் அந்தகக் கவி வீர ராகவ முதலியார், இரட்டைப் புலவரில் ஒருவர் இப்படிப் பலர் அந்தகர்களே! கிருஷ்ண பக்தர் சூர்தாஸும் அந்தகரே! கண்ணில்லை; ஆனால் புகழ் கொடி கட்டிப் பறந்தனர்.
மில்டனை குருட்டுக் கவிஞர் என்று அவருடைய இலக்கிய எதிரிகள் குறைகூறினர். அதற்கு மில்டன் அளித்த பதில் மிகவும் உருக்கமானது:
மில்டன் சொன்னார்
“உங்களுடைய குருட்டுத் தன்மையை விட என் குருட்டுத்தனம் எவ்வளவோ மேலானது. எனக்கு கண்கள் மட்டுமே குருடு; உங்களுக்கோ எல்லா புலன்களுக்கும் அடியில் ஆழமாகச் சென்று உங்கள் மனதையும் குருட்டாக்கி விட்டது. இதனால் உருப்படியான விஷயங்களை உங்களால் காண முடியாது; நான் ஒரு பொருளின் வர்ணத்தையும் உருவத்தையும்தான் காண முடியாது. ஆனால் அவைகளின் உண்மைப் பொருளையும் நிலைத்த தன்மையையும் ஊடுருவிப்பார்க்க முடியும். அது கிடக்கட்டும்.
நான் பார்க்காத பொருள்கள் எவ்வளவு; நான் வருத்தப் படாமல் பார்க்கும் பொருள்கள்தான் எவ்வளவு? அப்படி வருந்தாமல் பார்க்கக்கூடிய, விட்டுப் போன பொருள்கள் குறைவே;
தீய மனிதர்களே! என்னைப் பார்த்து கேலியா செய்கிறீர்கள்? மனிதர்கள் ஏற்படுத்தக்கூடிய காயங்களில் இருந்து அந்தகர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. சொல்லப்போனால் நாங்கள் (தீயவைகளைப் பார்க்காததால்) புனிதர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்”
(இது ஒரு நல்ல பாடம்; நாமதிகமான தீமைகளையும் தீய செயல்களைச் செய்வோரையுமே காண்கிறோம்; அவர்களைக் காணாததும் அது பற்றி சிந்திக்காததும் அந்தகர்களை ரிஷி முனிவர் போல ஆக்கி விடுகிறது!
மில்டன் யார்?
ஆங்கில மொழியில் தலை சிறந்த புலவர்களில் ஒருவர். ஹோமர், வர்ஜில் போல காலத்தால் அழியாத காவிய த் தைப் படைக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாளைய அவா; அதன் காரணமாக PARADISE LOST சொர்க்க இழப்பு, சொர்க மீட்சி PARADISE REGAINED என்ற இரண்டு காவியங்களைப் படைத்தார்.
பிறந்த ஆண்டு 9-12- 1608
இறந்த ஆண்டு 8-11-1674
இறக்கும்போது வயது- 65
கல்லூரியில் படிக்கும்போது கவிதை யாத்தார். 29 வயதில் அவர் எழுதிய லிஸிடாஸ் LYCIDAS என்ற கவிதை மிகச் சிறந்த கவிதை ஆகும்.
இங்கிலாந்தில் உளநாட்டுப் போர் ஆரம்பமானது.
ஆலிவர் க்ராம்வெல் OLIVER CROMWELL என்பவர், முடியாட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது, அவருக்கு ஆதரவாக அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் முனைப்பு காட்டினார். பின்னர் முடியாட்சி மீண்டும் ஏற்பட்டது. இதற்குள் அவர் முழுக் குருடு ஆகிவிட்டார். அவர் பிறவிக்குருடர் அல்ல.
பாரடைஸ் லாஸ்ட் என்பதை எழுத இவர் மனைவியும் மகளகளும் உதவினர். மில்டன் சொல்லச் சொல்ல அவர்கள் எழுதினர். 55 வயதில் அது வெளிவந்தது. சாத்தானை சொர்க்கத்தில் இருந்து பூமிக்குத் தள்ளியப்போது அது எப்படி ஆதாமையும் ஏவாளையும் மனதளவில் கெடுத்தது என்பதே சொர்க்க இழப்பு கதையின் சாரம். இது வெளியானவுடன் இவர் புகழ் உச்சாணிக் கொம்புக்கு ஏறியது!
xxxx
செவிடாக இருப்பதே மேல்!
தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்காவின் புகழ் பெற்ற விஞ்ஞானி; கண்டு பிடிப்பாளர். ஆயிரத்துக்கும் மேலான பொருள்களுக்கு அமெரிக்காவில் பேடன்ட் வாங்கி வைத்தவர். பல்பு முதலிய பலபொருட்களைக் கண்டுபிடித்தவர்.
அவர் வாழ்ந்த காலம்-
11-2-1847 to
18-10- 1931
தாமஸ் ஆல்வா எடிசனுக்குக் காது கேட்காது. ஆனால் அவர் காதில் கோளாறு இல்லை; மனதிலேயே கோளாறு என்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நண்பர்கள் ஒரு டாக்டரை அழைத்து வந்தனர். அவர் பெரிய சிகிச்சை திட்டம் ஒன்றை வகுத்து எடிசனிடம் காட்டினார். நீங்கள் ஒப்புக் கொண்டால் நாங்கள் உடனே தயார் என்றார்.
எடிஸன் சொன்னார்
“இதோ பாருங்கள்; உங்கள் திட்டம் கட்டாயம் வெற்றி பெறும்; எனக்கு ஐயப்பாடே இல்லை. நான் என்ன என்ன வெல்லாம் கேட்க வேண்டி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவற்றில் எவை எவை கேட்கத் தகாதவை என்பதையும் சிந்தியுங்கள். கொஞ்சம் காது கேளாமை இருப்பது நல்லதே. நானே எவை எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவைகளை மட்டுமே கேட்கிறேன். என்னை இப்படியே விட்டு விடுங்கள்” நீங்கள் எந்த அளவுக்கு காது கேட்க முடியாதவர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது எவ்வளவு நல்லது!
–சுபம்–