WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,320
Date uploaded in London – – 10 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சேக்கிழார்! – 2
இப்படிப்பட்ட பெரும் நூலை இயற்றுவதற்காக பல்வேறு தலங்களுக்கும் யாத்திரை சென்று அனைத்துத் தகவல்களையும் திரட்டினார் சேக்கிழார். நூலில் ஆழ்ந்த கவனம் செலுத்தி இயற்ற வேண்டும் என்பதற்காகத் தனது முதல் மந்திரிப் பதவியையும் துறந்தார். நேராகச் சிதம்பரம் சென்றார். அங்கு தியானத்தில் ஆழ்ந்தார் சேக்கிழார். எப்படி இப்புராணத்தை இயற்றுவது என்று அவர் சிந்தித்து இறைவனை வேண்டிக் கொண்ட போதில்,
“உலகெலாம்” என்ற ஒலி ஆகாயத்திலிருந்து அசரீரியாக ஒலித்தது.
உடனே பிறந்தது திருத்தொண்டர் புராணம்.
உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு வாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்”
என்ற கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய பெரிய புராணம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.
முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான். ஆம் இந்தப் பாடலில் 63 எழுத்துக்கள் உள்ளன. அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மாரும் 63 பேர் தானே! உலகெலாம் என்பதில் உகாரமும் அலகில் என்பதில் அகாரமும் வணங்குவாம் என்பதில் மகாரமும் வருவது ஒரு தனிச் சிறப்பல்லவா! பிரணவ மந்திரத்தையே நூல் விண்டுரைக்கிறது என்று ஆகிறதல்லவா!! இப்படி இந்த முதல் பாடலுக்கே ஒரு பெரிய விரிவுரையைக் காணலாம்.
இப்படிப்பட்ட அபூர்வமான புராணம் நன்கு வளர்ந்து வருகிறதா, எப்போது முடியும் என்றெல்லாம் அக்கறையுடன் அவ்வப்பொழுது தூதர் மூலமும் ஒற்றர் மூலமும் சோழ மன்னன் விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்தான். புராணம் முடிவுற்ற செய்தி அவனுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் சோழன் பெரிதும் மகிழ்ந்தான்; பெருமையுற்றான்.
நேராக சிதம்பரம் வந்து சேர்ந்து நடராஜரையும் நூலாசிரியரையும் முறைப்படி வணங்கினான். அங்கு நடராஜரின் அருள் ஆணையின் படி ஆயிரங்கால் மண்டபத்தில் நூலைப் படித்து பொருளை விரித்துரைக்கச் செய்தான். பல இடங்களுக்கும் ஓலை அனுப்ப, சிற்றரசர்கள், மந்திரிகள், மடாதிபதிகள், தில்லை வாழ் அந்தணர் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக வந்திருந்து நூலைக் கேட்டு இன்புற்றனர்.
சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று திருத்தொண்டர் புராணம் ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து அதே சித்திரை மாதம் திருவாதிரை நாளில்முடிக்கப்பட்டது. நூல் நிறைவு பெற்ற நாளன்று நூலையும் நூலாசிரியரையும் யானை மேல் ஏற்றி பின்னால் நின்று சாமரம் வீசியவாறே நகர் வலம் வந்தான் மன்னன். ஊர் மக்களும் சான்றோரும் அறிஞரும் பெரிதும் மகிழ்ந்தனர். தொண்டர் பெருமையை விளக்கிய சேக்கிழாருக்கு தொண்டர் சீர் பரவுவார் என்ற பெயரைச் சூட்டியதோடு இதுவரை நம்பி ஆண்டார் நம்பிகள் கோவை செய்த பதினொரு திருமுறையோடு இதைப் பன்னிரெண்டாம் திருமுறையாக ஆக்கி அதைச் செப்பேட்டில் பதிவு செய்தான் அநபாயன். அது மட்டுமின்றி சேக்கிழாரின் தம்பியான பாலறாவாயரை அழைத்து அவருக்குத் தொண்டைமான் என்ற பட்டத்தை அளித்து அவரைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான்.
அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றை அழகுறச் சொல்லும் இதைப் பற்றிச் சோழ மண்டல சதகம் பெருமையுறத் தன் 79ஆம் பாடலில் கூறிச் சிறப்பிக்கிறது இப்படி:-
காக்கு நீதி இரவிகுலக் கழற்கால் வளவன் கனிந்தேவ
சேக்கிழார் தம் திருவாயில் தெளிந்த முதல் நூல் செழுக்கதையின்
மேக்கு யாவும் திருவேட மெய்யே பொருளா வீடு பெற்றோர்
வாய்க்கு யாவும் புகழ்வேளாண் மரபோர் சோழ மண்டலமே
(சோழ மண்டல சதகம் பாடல் 79)
சேக்கிழார் தொண்டைமண்டலத்தில் பிறந்தார் என்ற காரணத்தால் தொண்டை மண்டல சதகம் அவரைப் புகழ்ந்து 16ஆம் பாடலில் அவரைப் போற்றிப் புகழ்கிறது இப்படி:-
விண்ணிற் பிறக்கும் புகழ்க்குன்றநாடன் விளங்குதமிழ்ப்
பண்ணிற் பிறக்கும் பெரியபுராணம் பகர்ந்த பிரா
ளெண்ணிற் பிறக்கும் பததூளியென்றலை யெய்த வந்த
மண்ணிற் பிறக்கவும் வைக்குங் கொலோ தொண்டை மண்டலமே
(தொண்டைமண்டல சதகம் – பாடல் 16)
இப்படி சோழ மண்டல சதகம் மற்றும் தொண்டை மண்டல சதகம் ஆகிய இரு சதகங்களும் போற்றிப் புகழும் பெருமை கொண்டவர் சேக்கிழார்.
சேக்கிழாரின் இந்த நுண்ணறிவை மகாகவி கம்பனும் கூட தனது ஏர் எழுபது என்ற நூலில்
“மண்ணில் கடலில் மலையில் பெரிதென் என
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை” என்று கூறி சேக்கிழாரைப் பாராட்டுகிறான்.
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்னும் அரிய நூலை சேக்கிழாரின் பெருமையைப் போற்றி இயற்றியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் திருத்தொண்டத் தொகையை அருளிய சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கிடைத்துள்ளது.
- தொடரும்
tags- சேக்கிழார், பிள்ளைத் தமிழ், பெரிய புராணம், உலகெலாம்