திருவாதிரைக் களியின் கதை! (Post No.3534)

Written by London swaminathan

 

Date: 11 January 2017

 

Time uploaded in London:- 6-46 am

 

Post No.3534

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

தேவாரத்தில் ஆதிரை விழா

திருவாதிரை விழா சிவபெருமானின் திருவிழாவாக சங்க காலம் முதலே கொண்டாடப்படுவது பரிபாடல் என்னும் நூல் மூலம் தெரிகிறது. சம்பந்தர், அப்பர் ஆகிய இருவர் காலத்தில் இது மிகச் சிறப்பாக நடந்ததால் அப்பரும் சம்பந்தரும் தேவாரத்தில் இவ்விழாவைக் குறிப்பிடுகின்றனர். அப்பர் பாடிய திருவாதிரைப் பதிகம் பற்றி எஸ். நாகராஜன் எழுதிய கட்டுரை இதே பிளாக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இன்று திருவாதிரைக் களியின் சிறப்பைக் காண்போம்.

 

காவிரிப் பூம்பட்டினத்தில் பட்டினத்தடிகளின் மாளிகையில் அவருக்கு கணக்குப் பிள்ளையாக — பொக்கிஷ அதிகாரியாக — வேலை பார்த்தவர் சேந்தனார் என்பவராவார். பட்டினத்தடிகளுக்கு ஒரு பெட்டியில் காதற்ற ஊசி வந்தவுடன், அவர் வாழ்க்கையின் நிலையாமையை எண்ணி பொருள் அனைத்தையும் சூறைவிடச் சொன்னபோது அத் திருப்பணியைச் செய்தவர் சேந்தனார்தான்.

 

இதைக் கேள்விப்பட்ட சோழ நாட்டரசன், அப்பொருள் அனைத்தையும் சேந்தனார், அரசாங்க கஜானாவில் சேர்ப்பிக்காதது தவறு என்று சொல்லி அவருக்குத் தொல்லை கொடுக்கத்  துவங்கினான். இதன் காரணமாக சேந்தனார்,  மனைவி மக்களுடன் சிதம்பரத்துக்குச் சென்றார். அங்கே விறகு விற்கும் தொழிலைச் செய்துகொண்டே சிவபக்தியில் மூழ்கினார்.

 

விறகு விற்ற பணத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அமுது படைத்தார்.

 

ஒரு நாள் சிவபெருமானே, வேறு வேடம் தரித்து சேந்தனார் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றார். நள்ளிரவில் சென்றதால் சேந்தனார் வெறும் கூழைக் கிண்டி அதைப் பரிமாறினார். சிவனும் அதை விரும்பிச் சாப்பிட்டுவிட்டு மீதி இருந்ததையும் ஒரு கந்தைத் துணியில் கட்டி எடுத்துச் சென்றார். மறுநாள் சிவனுடைய சந்நிதியில்  அந்தக் கூழ் சிதறி இருந்ததைக் கண்டு திகைத்த அர்ச்சகர்களுக்கு சேந்தனாரின் வீட்டில் முதல் நாளிரவு நடந்த நிகழ்ச்சி தெரிய வந்தது. அன்றுமுதல் கூழ் போலக் களியைக் கிண்டி எல்லா சிவனடியார்களுக்கும் கொடுக்கும் வழக்கம் துவங்கியது.

 

திருவாதிரைக் களியும் அதற்கான விசேஷ கூட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தது. கேரளத்தில் ஆதிரையை, பெண்கள் புத்தாடை அணிந்து கும்மியடித்து சிறப்பாக் கொண்டாடுவர்.

 

நட்சத்திரங்களில் இரண்டுக்கு மட்டுமே திரு என்ற அடைமொழி உண்டு ஒன்று திரு ஆதிரை மற்றொன்று திரு ஓணம். இரண்டும சிவபெருமானுடனும் விஷ்ணுவுடனும் தொடர்புடையவை. அது மட்டுமல்ல. இரண்டு விழாக்களுக்கும் இடையே சரியாக ஆறு மாத இடைவெளி இருக்கிறது.

2015 ஜனவரியில் ஆதிரை நாளன்று வெளியான எஸ். நாகராஜன் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி மட்டும்:–

 

ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடி மேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

 

என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.

 

திருவாதிரைப் பதிகம்

 

இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார், பார்ப்போமா:-

பாடல் எண் : 1
முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

ரமண மஹரிஷி ஆருத்ரா தரிசன நாளன்று பிறந்தவர் என்பதால் இந்த திருவாதிரைப் பதிகத்தைக் கேட்டு ஆனந்தித்து உத்வேகம் பற்ற ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ரமணரின் மீது பக்திப் பாடல்களை இயற்றினார்.

–subham–