நீரைச் சேமிப்போம்! (Radio Talk 1)-(Post No. 7739)

drought picture
drought image

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7739

Date uploaded in London – – 25 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for all your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் முதலாவது உரை

(1-3-2020 அன்று ஒலிபரப்பானது)

நீரைச் சேமிப்போம்!

ச.நாகராஜன்

நாளுக்கு நாள் உலகில் குறைந்து கொண்டே வரும் நீர் வளம் மிகப் பெரும் பாதிப்பை பல்வேறு நாடுகளில் வாழும் மக்களிடம் உருவாக்குகிறது.

நீரைச் சேமிப்பது அரசின் கடமை என்று ஒதுக்கி விடாமல் ஒவ்வொரு மனிதனும் முனைப்புடன் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இன்று இருக்கிறது.

ஒரு பெரும் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட நல்ல ஒரு முடிவின் விளவாக பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் தருவது நிறுத்தப்பட்டது. கூட்டங்கள், கருத்தரங்கம், விவாதம் நடத்தப்படும் இடங்களில் கண்ணாடி ஜாடிகள் வைக்கப்பட்டன.

இதன் விளைவாக ஒரு வருடத்தில் மட்டும் நான்கு லட்சத்து முப்பதினாயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு அறவே நீக்கப்பட்டது.

இது எவ்வளவு பெரிய செய்தி! உலகின் அனைத்து நிறுவனங்களும், இல்லங்களும் இப்படி பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை நிறுத்தினால் நீரையும் சேமிக்க முடியும்; பிளாஸ்டிக் அபாயத்தையும் தவிர்க்க முடியும்.

நீரை எவ்வளவு அனாவசியமாக வீணாக்குகிறோம் என்பதற்கு அதன் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

ஒரு காரை சுத்தம் செய்ய பைப்பை உபயோகித்து நீரைச் செலுத்தினால் சுமார் 450 லிட்டர் நீர் தேவை. பத்து நிமிடம் ஷவர் பாத் குளியலை எடுத்தால் தேவைப்படும் நீரின் அளவு சுமார் 264 லிட்டர். பெரிய ஒரு வாஷிங் மெஷினுக்கோ ஒரு தடவைக்கு நாம் பயன்படுத்தும் நீரின் அளவு 150 லிட்டர்.

இப்படி ஒவ்வொரு பயன்பாட்டையும் எடுத்துக் கொண்டு  இவை நிச்சயம் தேவை தானா, எப்படிக் குறைக்க முடியும் என்று ஒவ்வொருவரும் ஆராய்ந்து முடிவெடுத்தால் பல லட்சம் லிட்டர் நீர் அன்றாடம் உலகெங்கும் சேமிக்கப்படும்.

well in a village

ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங் (Rain Water Harvesting) எனப்படும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நீரைச் சேகரிப்பதற்கான நல்ல ஒரு வழி.

ஒழுகும் குழாய் இருப்பின் அதை சீராக்கி வைத்தல் வேண்டும். குழாயைத் திறந்து வைத்துக் கொண்டே பாத்திரங்களைத் துலக்குவது போன்ற வேலைகளைச் செய்யாமல் நீரை அளவுடன் பிடித்துக் கொண்டு உரிய அளவில் மட்டும் தேவைக்குத் தகப் பயன்படுத்தல் போன்ற எளிய வழிகள் நீரைப் பெருமளவில் சேமிக்கும் வழிகளாகும்.

WATER POSITIVE எனப்படும் நீர் வளத்தை அதிகரிப்போம் என்னும் மனநிலையை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் நீர்வளப் பற்றாக்குறை இல்லாத நாடாக நமது நாடு மாறி விடும்.

நீரின்றி அமையாது நம் வாழ்க்கை என்ற தாரக மந்திரத்தை மனதில் நிலை நிறுத்தி நீரைச் சேமிப்போம்; உயர்வோம்!

tags  —  நீர், சேமிப்போம்

Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

village well

***