ஒரு குட்டிக்கதை–குரு எதற்கு? கோவில் எதற்கு? (Post No.4949)

ஒரு குட்டிக்கதைகுரு எதற்கு? கோவில் எதற்கு? (Post No.4949)

 

Written by London Swaminathan 

 

Date: 25 April 2018

 

Time uploaded in London –  21-49

 

Post No. 4949

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

உலகம் முழுதும் உள்ள மியூசியங்களுக்குப் போனால் அங்கே பெரிய மனிதர்கள், மஹான்கள், தலைவர்கள் பயன்படுத்திய பேனாக்கள், செருப்புகள், அவர்கள் சாப்பிட்ட தட்டுகள், படுத்த பாய்கள், படித்த புத்தகங்கள் இவைகளை எல்லாம் காட்சிக்கு வைத்துள்ளனர். அதைப் பலரும் தொட்டுக் கும்பிடுகின்றனர். வணங்கிச் செல்லுகின்றனர். கல்லில் பொறித்த பாதங்களை இது ராமர் பாதம், இது புத்தர் பாதம், இது சமண தீர்த்தங்கர பாதம் என்று சொன்னால்    அதையும் கும்பிட்டுச் செல்கின்றனர். இது ஏசு மீது போர்த்திய துணி என்றால் அதைப் பார்க்கவும் டூரின் (Turin) நகருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதில் எந்த மதமும் விலக்கு அல்ல. எல்லா மதங்களிலும் இது போல நம்பிக்கை உள்ளது.

 

பெரிய புராணத்தில் பல கதைகளில் வெள்ளை நிறத்தைப் பார்த்தாலேயே விபூதி என்று கருதி வண்ணான் முதலியோரையும் வணங்கிய செய்தி வருகிறது. ஏன் இப்படி?

 

இது பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார்; அதைப் படித்தால் நாம் குருவுக்கு எதற்கு வணக்கம் சொல்கிறோம், கோவிலுக்குச் சென்று ஏன் வணங்குகிறோம் என்பது விளங்கும்; அவைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு ஊற்றுணர்ச்சி கிடைக்கிறது கடவுளை எண்ணுகிறோம்; குருவை நினைக்கிறோம்; அவரது உபதேசங்களில் மெய் மறக்கிறோம்

 

 

இதோ  ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையைச் சுருக்கித் தருகிறேன்:

 

ஒரு முறை சைதன்ய மஹாப்ரபு ஒரு ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் சிலர் இந்த ஊர்க்காரர்கள்தான் மண்ணினால் கடம் மிருதங்கம் முதலிய இசைக் கருவிகளைச் செய்கிறார்கள் என்று சொல்லி வைத்தனர். உடனே அதை எண்ணி எண்ணி சைதன்யர் சமாதி நிலைக்குப் போய்விட்டார்.

 

ஓ கடவுளே: இவர்கள் செய்யும் இசைக் கருவிகள அல்லவா பஜனைகளில் வாசிக்கப்படுகிறது. அதன் மூலம்தானே நாமிறைவனை நினைக்கிறோம்; அந்த இறைவன் ஆன்மாக்களில் எல்லாம் அந்தராத்மாவாக உறைகிறானே; அழகுக்குக் எல்லாம் அழகானவன் அவன் அன்றோ என்று எண்ணிக்கொண்டே சமாதி நிலைக்கு போய்விட்டார்.

இதே போல குருவின் மீது அபார பக்தி கொண்டவர்கள், அவர் வாழும் ஊரிலிருந்து வந்தவர்களைப் பார்த்தவுடன் குருவின் ஞாபகம் வந்து, அவர்களை உபசரித்து, அன்னம் இட்டு காலில் விழுந்து வணங்குகின்றனர். அவர்கள் மிதித்த இடத்தில் இருந்து பாத தூளிகளை எடுத்து தலையில் தரிக்கின்றனர். குருவிடத்தில் குறைகள் இருந்தாலும் கூட அதைக் காண முடியாத வாறு பக்தி வெள்ளம் வருகிறது.

 

இந்தக் கதையிலிருந்து நாம் அறிவது என்ன?

கண்ணுக்கு முன் உதாரண புருஷராக விளங்கும் குரு அவசியம்; அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவருடைய சினங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு அந்தப் புனிதரின் நினைவு வருகிறது.

இதே போலக் கோவிலுக்குச் சென்றால் சிறுவர்களும் பெரியவர்களும் உள்ளம் உருகிக் கண்ணீர் விடும் காட்சியைக் கண்டவுடன் நமக்கும் உத்வேகம் பெருகுகிறது.

ஒருவன் வேண்டாத படங்களைப் பார்த்தால் தீய எண்ணங்கள் வரும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. தற்காலத்தில் வரும் திரைப்படங்களும் டெலிவிஷன் சீரியல்களும் மனதில் தீய மன வெழுச்சிச்சிகளை உண்டாக்குகின்றன. இதற்கு நேர் மாறாக மடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்று பக்தர்களைப் பார்க்கையில் நம் மனதில் நல்ல எண்ணங்களும் மன அமைதியும் உண்டாகின்றன. ஆகவே கோவில்களுக்குச் செல்லுவது அவசியம்; குருநாதரையோ அவர்களின் சீடர்களையோ காண்பதும் அவசியம்.

 

–SUBHAM–