Written by London swaminathan
Date: 27 March 2017
Time uploaded in London:- 14-53
Post No. 3762
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
இருபத்தெட்டு சைவ ஆகம நூல்களில் பத்தாவது இடத்தில் நிற்கும் ஆகம நூல் – சுப்ரபேதாகமம். அதன் புதிய பதிப்பு வெளிவரப்போகிறது என்று திரு கல்யாண சுந்தர சிவாச்சார்யார் சொன்னவுடனே அது பற்றி அறிய ஆவல் எழுந்தது. ஆகமம் என்றவுடனே ஏதோ சிவாச்சார்யார்களுக்கும் பட்டாச்சார்யாக்களுக்குமே பயன்படும் என்று நினைத்து பெரும்பாலோர் படிக்காமல் விட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல இது பற்றிய எந்தக் கட்டுரை அல்லது நூலை எடுத்தாலும் பாமர மக்களுக்குப் புரியாத, அறிஞர்களுக்கு மட்டுமே புரியும் (jargon) சொற்றொடர்களுடன் இருக்கும்.
கோவில் பூஜா விதிகளையும், அமைப்பு விதிகளையும் மட்டும் கூறும் நூல் என்று நானும் கருதி வாளாவிருந்தேன். ஆனால் சிவாச்சார்யா ரிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தபோது அவர் கூறிய விஷயங்கள் என்னை வியப்புக்குள்ளாக் கியது.
இதோ லண்டனில் வசிக்கும், திருச்சியைச் சேர்ந்த, சிவாகம விஷாரதா, வியாகரண சிரோன்மணி திரு எம்,என்.கல்யாண சுந்தர சிவாச்சார்யார் (Mr M N Kalyanasundara Sivacharyar, M.A. (Sanskrit) அளித்த பதில்களின் சுருக்கம்:-
1.இது எவ்வளவு பெரிய நூல்?
நாங்கள் வெளியிடும் வடிவில் இது 480 பக்கங்களுக்கு மேல் வரும். சுப்ரபேதாகமம் என்னும் நூலில் 4583 ஸ்லோகங்கள் இருக்கின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களும் இதில் இருப்பது இதன் சிறப்பு.
யோக பாதத்தில் 3 படலம், 321 ஸ்லோகங்கள்
சரியாபாதத்தில் 12 படலம், 794 ஸ்லோகங்கள்
கிரியா பாதத்தில் 56 படலம், 3117 ஸ்லோகங்கள்
ஞான பாதத்தில் 3 படலம், 351 ஸ்லோகங்கள்-
இருக்கின்றன.
2.இதற்கு முன் யாரும் வெளியிடவில்லையா? நீங்கள் ஏன் இப்பணியை எடுத்துக்கொண்டீர்கள்?
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் திரு அழகப்ப முதலியார் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் சில பிழைகளும் , சில விட்டுப்போன பகுதிகளும் இருந்தன. அவைகளை நிறைவும் செய்யும் முகத்தான், நாங்கள் இப்பணியை மேற்கொண்டோம். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளின் உதவியுடன் இதைச் செய்தோம்.
வேதாகம அகாடமியின் சார்பில் இது செய்யப்பட்டாலும் என்னுடன் மேலும் மூன்று பேர் சேர்ந்து இதில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மாதங்களுக்கு தினமும் நவீன தகவல் தொடர்பு வசதிகள் மூலம் தொடர்பு கொண்டு இப்பணியை முடித்தோம்.
3.இதிலுள்ள இலக்கிய நயங்கள் என்ன?
பேழை (பேலா), சுள்ளி என்ற சொற்கள் வடமொழி ஸ்லோகங்களில் அப்படியே உள்ளன. நாம் சுண்டைக்காய் அளவு, கடுக்காய் அளவு என்று சொல்வோம் இதில் ‘’முத்து அளவு’’ (சுக்திகா முக்தம்) என்று சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு புதுமை. நாம் ‘நொடிப்பொழுது’, ‘கண் இமைக்கும் நேர’த்துக்குள் என்று சொல்வோம். இந்த நூலில் இமைப் பொழுதையும் நான்காகப் பிரித்துள்ளனர்!
கண் இமைக்கும் நேரம்= 4 துடி
2 துடி =ஒரு லவம்
2 லவம்= நிமிஷம்
((இன்று நாம் நிமிஷம் என்பதை வேறு கால அளவாக — 60 வினாடிகள் — உபயோகிக்கிறோம்))
மனித சரீரத்தில் தேவர்களும் , பரமேஸ்வரனும் ”விளையாடுகின்றனர்” என்றும் இந்நூல் கூறும்.
ஒவ்வொரு உறுப்பும் அவரவர் விரல் போல மூன்று மடங்கு என்றும் (3 அங்குலி) என்றும் சொல்கிறது.
மனிதனுடைய வயது 100 என்றும் சொல்கிறது.
( இவை அனைத்தும் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். விஞ்ஞானமுறைப்படி ஆராய்ந்து பார்க்க இந்நூலில் நிறைய விஷயங்கள் உள்ளன)
4. பூகோள, சரித்திர விஷயங்கள் உள்ளனவா?
ஞான பாதத்தில், ஏழு கடல், ஏழு த்வீபங்கள் (தீவு) வருணனைகள் உள்ளன. மற்ற புராணங்களில் உள்ளது போலன்றி கடலின் அளவு, தீவுகளின் இருப்பிடம் முதலியவற்றையும் இந்நூலில் காணலாம்.
5.உடல் ஆரோக்கியம், அமைப்பு பற்றி என்ன சொல்கிறார்கள்?
மிக வியப்பான விஷயம் கருவின் வளர்ச்சி பற்றியதாகும். தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு எப்பொழுது என்ன உறுப்புகள் வளர்கின்றன, அவற்றின் அளவு என்ன என்று கூட இந்த ஆகமம் சொல்கிறது. உடலில் ஓடும் 72,000 நாடிகள் பற்றிய விவரங்கள் உள்ளன.
6. தாவரவியல் பற்றி ஏதேனும் இருக்கிறதா?
பூஜைக்கு உபயோகிக்க, கலசத்துக்கடியில் போட ஐந்து வகை நெல்களைச் சொல்கிறது. அதில் ஒரு அரிசி கருப்பு அரிசி.
பூஜைக்கான பழம், பூ, இலை வகைகள் என்னென்ன என்ற ஸ்லோகங்களும் இடம் பெற்றுள்ளன.
7.இன்னொரு இடத்தில்,
ஈஸ்வரனில் ஆயிரத்தில் ஒரு பகுதி ருத்ரன்;
ஈஸ்வரனில் கோடியில் ஒரு பகுதி விஷ்ணு;
அதே போல பிரம்மாவும்; என்றும் எழுதப்பட்டுள்ளது.
பகவத் கீதை போலவே சாத்வீக, ராஜச குணங்களுடைய மனிதர்கள் பற்றியும் வருணிக்கின்றனர்.
8.நல்ல உவமைகள், பழமொழிகள் ஏதேனும் உளதோ?
இருக்கிறது. சிவனும் சக்தியும் நெருப்பும் அதிலுள்ள சூடும் போல என்று சொல்லப்பட்டுள்ளது
(நான்:- அட! ஜகத்துக்கே பெற்றோர்கள் போன்ற பார்வதி பரமேஸ்வரனை ‘’சொல்லும் பொருளும் போல இணைபிரிக்க முடியாதவர்கள்’’ என்று காளிதாசன் வருணித்துள்ளான். தீயும் சூடும் என்று சொல்வதும் அழகாக இருக்கிறது)
உடல்தான் அழியும்; ஆத்மா அழியாது என்பதை விளக்க ‘கட’ நாசம் ( பானையின் அழிவு) என்ற உவமை சொல்லப்பட்டுளது. பல வகை வடிவப் பானைகளில் காற்று இருந்தாலும் அந்தப் பானையை உடைத்தால், பானையிலுள்ள காற்று பரவெளியில் கலப்பது போல, ஆன்மாவும் கலந்துவிடும்; உட லுக்குத் தான் அழிவு.
இன்னொரு உவமை பெருங்காயப் பெட்டியிலுள்ள வாசனைபோல, நம்முடைய கர்மங்களின் வாசனை தொடரும் என்றும் சொல்லியிருக்கிறது.
8.எண்களைச் சொல்கையில் ஒன்று முதல் பரார்த்தம் வரை சொல்லி யிருக்கிறார்கள்:-
ஒன்று முதல் மிகப்பெரிய எண் வரை எளிதில் நினைவு வைத்துக்கொள்ள ஒரு அருமையான ஸ்லோகமும் இதில் அடக்கம்:
தேவானாம் வக்ஷ்யதே கால: துட்யாதி ப்ரளயாந்தக:
துடி லவ நிமிஷஸ்ச காஷ்டா சைவ கலா ததா
க்ஷணம் முஹூர்த்தம் கடிகா சந்திர்யாம: அஹர்நிஸி திவச:
பக்ஷ மாசௌ ச ருதுஸ்து அயன வத்சரா: யுக
மன்வந்தரௌ கல்ப மஹாகல்பம் ப்ரளயஸ்ததா
மனிதர்கள்- தேவர்களின் கால வேறுபாடும் விளக்கப்பட்டிருக்கிறது.
9.ருத்ராக்ஷ மஹிமையை விளக்குகையில் ஒரு பெரிய செய்தி வருகிறது.
தர்பையைவிட மணிகளை வைத்து ஜபிப்பது பெரிது; மணிகளைவிட முத்து வைத்து ஜபிப்பது மேலும் பலன் தரும். அதைவிடப் பலன் தருவது தாமரை மணி. ருத்ராக்ஷத்தின் மஹிமையோ அளவிடற்கரியது.
இதிலுள்ள 75 படலங்களில் இப்படிச் சுவையான பல செய்திகள் உள்ளன. எல்லா ஆகமங்களிலும் உள்ள பூஜாக் க்ரம விஷயங்களோடு இவைகளும் இருக்கின்றன. ஆகையால் இது அனைவரும் படித்து இன்புறுவதற்கான ஒரு நூல் என்றால் அது மிகை யில்லை.
—Subham—
You must be logged in to post a comment.