
Post No. 8788
Date uploaded in London – – –8 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட கேள்வி-பதில்
YOU MAY LISTEN TO S NAGARAJAN ON FACEBOOK.COM / GNANAMAYAM
விரத காலங்களில் ஏன் அசைவ உணவை உண்ணக் கூடாது?
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்?
QUESTION ASKED BY MURUGADAS, CHENNAI.THANKS.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
நமது முன்னோர்கள் இயற்கை மாறுதல் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை வகுத்தவர்கள்.
திருமணமான ஒரு மணப்பெண்ணை ஆடி மாதம் வந்தால் பெண் வீட்டார் அழைத்துச் சென்று ஒரு மாதம் வைத்துக் கொள்வர்; பின்னர் திருப்பி மணமகன் வீட்டிற்கு அனுப்புவர். ஆடி மாதம் கர்ப்பமுற்றால் தலைப் பிரசவன் கொடுமையான கோடைக் காலமான சித்திரையில் ஏற்படுவதைத் தடுக்கவே இப்படி ஒரு ஏற்பாடு.
இதே போல உணவுத் திட்டத்திலும் அதை உண்ணும் முறைகளிலும் பல விதிகளை நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளனர்.
நம் மனதிற்கும் நாம் உண்ணும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நம் அறநூல்களும் வைத்திய நூல்களும் கூறுகின்றன. இதை அப்படியே நவீன விஞ்ஞானமும் ஆமோதிக்கிறது.
விரத காலங்களில் ஒருமுனைப்பட்ட மனதுடன் நாம் ஏற்றுக் கொண்ட விரதத்தின்படி இறைவனை தியானிக்க சத்வ உணவு பெரிதும் உதவுகிறது. தியானத்தின் போது மேலாம் நிலையை அடைய சத்வ உணவு பெரிதும் உதவுகிறது. ஆகவே விரத காலங்களில் சத்வ குணத்தைத் தரும் சைவ உணவு பரிந்துரைக்கப்படுகிறது. ஊன்றிய மனதுடன் விரதத்தை அனுஷ்டித்து சிறப்பான பலனைப் பெற இது உதவும்.
குறிப்பாக புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கும் காரணங்கள் உண்டு.

12 ராசிகளில் ஆறாவது ராசியாக அமைவது கன்னி ராசி. அதாவது மேஷ, ரிஷப, மிதுன, கடகம், சிம்மம் கன்னி – இது ஆறாவது ராசி. கன்னி ராசி புரட்டாசி மாதத்திற்குரிய ராசி. இதுவே இதன் அதிபதியான புதனுக்குரிய ராசி. புதன் விஷ்ணுவின் சொரூபம் என்பதாலும் சைவ கிரகம் என்பதாலும் இந்த மாதத்தில் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என நமது அற நூல்கள் கூறுகின்றன. மாதம் முழுவதும் பல விழாக்கள் வரும் மாதம் புரட்டாசி தான். ஆகவே புரட்டாசியில் அசைவ உணவைத் தவிர்த்தல் மரபாகு̀ம்.
பருவ மாறுதல்களால் புரட்டாசி மாதம் மழைக் கால ஆரம்ப மாதமாகும். இந்தக் காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால் நாம் உண்ணுகின்ற உணவானது லகு உணவாக அதாவது எளிதில் ஜீரண்மாகத் தக்க விதத்தில் இருக்க வேண்டும். ஆகவே அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என நமது நூல்கள் பரிந்துரைக்கின்றன.
எல்லாக் காலத்திலும் சைவ உணவு மேற்கொண்டிருப்பவனை எல்லா உயிரும் தொழும் என வள்ளுவர் கூறுவதும் இங்கு நோக்கத் தக்கது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்று குறள் எண் 260 கூறுகிறது. ஆகவே அவரவர் மனப் பக்குவத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தம் தம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ளலாம்; அசைவ உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் விரத காலத்திலும் புரட்டாசி மாதத்திலும் அதைத் தவிர்க்கலாம்!

அடுத்து இன்னும் ஒரு கேள்வியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.
tags– சைவ உணவு, அசைவ, விரத காலம்
***