தானம் செய்தால் வானம் திறக்கும்-புறநானூறு (Post No.4395)

Written by London Swaminathan 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4395

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

புறநானூற்றுப் புலவர்  ஏணிச்சேரி முடமோசியாரும், அறநெறிச் சார ஆசிரியர் முனைப் பாடியாரும் சொல்லுவர்:

 

“தானம் செய்தால் வானம் திறக்கும்”.

 

வானம் என்ற சொல்லைத் தமிழ்ப் புலவர்கள் இரு வகையில் பயிலுவர்:

வானம் = மழை

வானம் = சொர்க்க லோகம் , இந்திர லோகம்

 

மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான திருவள்ளுவன் பகவத் கீதை பாணியில் (16-1) யாத்த தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம், வானம் வழங்காதெனின் (குறள் 19)” என்னும் இடத்தில் வானம் என்பது மழையைக் குறிக்கும்; வள்ளுவன் தானம், தவம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களை பகவத் கீதை ‘ஸ்டைலில்’ 19, 295 ஆகிய எண்ணிட்ட குறள்களில் பயன்படுத்துவான். சம்ஸ்கிருத ஸ்லோகக்ங்களில் இது நூற்றுக் கணக்கான இடங்களில், குறிப்பாக கீதையில், சேர்ந்தே பயிலப்படும் சொற்கள்; நிற்க

 

நாம் சொல்ல வந்த விஷயத்தைக் காண்போம். தானம் செய்தால் வானம், அதாவது சொர்க்க லோகம் திறந்து இருக்குமாம்!~

 

அறநெறிச் சாரம் என்னும் நீதி நூலில் முனைப்பாடியார் புகல்வது யாதெனின்,

ஒன்றாகநல்லது உயிரோம்பல் ஆங்கதன்பின்

நன்றாய்ந்தடங்கினார்க் கீத்துண்டல் – என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து

 

–அறநெறிச்சாரம்

பொருள்:-

ஒன்றாகநல்லது உயிரோம்பல் = அறங்களில் சிறந்தது பிற உயிர்களைப் பாது காப்பது ஆகும்

 

ஆங்கு அதன் பின்  நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்= ஞான நூல்களைக் கற்று, மனம் போன வழியில் செல்லாமல், அடக்கத்துடன் வாழ்வோருக்கு உணவு கொடுத்தல் மற்ற ஒரு சிறந்த தர்மம்; பிறகு தானும் உண்ணுதல் வேண்டும்.

 

என்ற இரண்டும் குன்றாப் புகழோன்= இவ்விரு தர்மங்களால் புகழ்பெற்று விளங்குபவர்களை

வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது =  வருக வருக என வரவேற்பதற்காக சொர்க லோகம் அதன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது.

 

அதாவது மாலையைக் கையில் வைத்துக்கொண்டு இந்திரனும் அப்சரஸ் அழகிகளும் மேள தாளத்துடன் காத்து  நிற்பர் என்பதாம்!

இந்திர லோகத்தில் டமாரம்!

ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடாமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (241)

 

திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,

அண்டிரன் வரூ உம்என்ன, ஒண்தொடி

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,

போர்ப்புறு முரசம் கறங்க,

ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே

 

சுருக்கமான பொருள்:

வறுமையில் வாடியோருக்கு அள்ளி, அள்ளித் தந்த ஆய் அண்டிரன் (அஜேந்திரன்) இறந்தவுடன் அவனை வரவேற்க இந்திர லோகத்தில், இந்திரன் கோவிலில், முரசுகள் முழங்கினவாம். வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில் என்பதற்கு பழைய உரைகாரர்கள் இந்திரலோகம் (சொர்க்கலோகம்) என்றே பொருள் கண்டுள்ளனர். பூமியில் உள்ள இந்திரன் கோயிலன்று.

 

அதாவது, பூமியில் தானம் என்னும் புண்ணிய கருமத்தைச் செய்தால் அவர்களை வரவேற்க இந்திரன் காத்திருப்பானாம்; அதுவும் எப்படி? ‘பாண்டு வாத்திய’க் குழுவுடன் வாசலில் நிற்பானாம்!

புற நூலுக்குப் பின் தோன்றிய அறநெறிச் சாரத்தில் முனைப்படியாரும் இதே கருத்தைச் சொல்லும் போது நம் ஐயமெல்லாம் பறந்தோடிப் போகின்றது.

 

–Subham, Subham–