நரகத்தின் வாயிலும் சொர்க்கத்தின் வாசலும் (Post No.5639)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –15-24
Post No. 5639

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ், ஸம்ஸ்க்ருதம், பாலி மொழிகளில் பகவான் க்ருஷ்ணர், புத்தர், திருவள்ளுவர் ஆகியோர் ஒரே கருத்தை மொழிவது கண்டு இன்புறத்தக்கது. திருக்குறள் ,பகவத் கீதை, தம்மபதம், ஹிதோபதேசம், யோக வாசிஷ்டம் ஆகியவற்றில் ஒரே கருத்தைக் காண்பது மகிழ்ச்சி தரும்; அவற்றைப் படித்து ஞானம் பெறுவோம்.

காமம், வெகுளி, மயக்கமிவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய் (குறள் 360)

பொருள்

விருப்பு, வெறுப்பு, அஞ்ஞானம் (காமம், க்ரோதம்,லோபம்) இவை மூன்றும் ஒருவன் மனதில் கூட வராத நிலயில் மெய்யுணர்வு தோன்றும்; வினை கெடும்; பிறவிப் பிணி என்னும் நோய் அகலும்—

என்று மெய்யுணர்வு அதிகாரத்தில் வள்ளுவர் பகர்வார்.

இதை முன்னரே பகவத் கீதையில் கண்ணனும் செப்பினான்:

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனம் ஆத்மனஹ

காமஹ க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் (16-21)

பொருள்

ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும் இந்த நரக வாயில் மூவகைத்து– காமம், கோபம், லோபம் என்பன; ஆகையால் இம்முன்றையும் தள்ள வேண்டும்.

இதை புத்தர் ‘தம்மபத’த்தில் இவ்வாறு புகல்வார்:

யஸ்சசேதம் சமுச்சின்னம் மூலகச்சம் சமூஹதம்

ச வந்ததோஷோ மேதாவி சாதுரூபோ தி உச்சதி (தம்மபதம் , 263)

பொருள்

யார் ஒருவனிடத்தில் பொறாமை, பேராசை,கெட்ட குணம் ஆகியன களையப்படுகிறதோ, வேருடன் அகற்றப்படுகிறதோ, அவனே மேதாவி/ அறிஞன்; அழகன்.

xxx

 

ஸம்ஸ்க்ருதப் பொன் மொழி

காமோலோபஸ்ததா க்ரோதோ டம்பஸ் சத்வார இத்யமீ

பொருள்

ஆசை, கோபம், பேராசை/கருமித்தனம், டாம்பீகம்/தற்பெருமை ஆகிய நான்கும் நரகத்தின் வாசல்கள்

ஹிதோபதேசம் மொழிவது என்னவென்றால்,

மரணத்தின்  வாசல்கள் 4

அனுசித கார்யாரம்பஹ ஸ்வஜன விரோதோ பலீயஸா ஸ்பர்தா

ப்ரமதாஜன விஸ்வாசோ ம்ருத்யோர் த்வாராணி சத்வாரி

பொருள்

பயனற்ற வேலை செய்தல்,சொந்தபந்தங்களைப் பகைத்தல், தன்னைவிட வலியவனுடன் மோதல், இளம்பெண்களிடம் நம்பிக்கை வைத்தல் ஆகிய நான்கும் மரணப் பாதையின் வாசல்கள்.

 

மோக்ஷத்துக்கான 4 வாசல்கள்

மோக்ஷத்வாரே த்வாரபாலாஸ் சத்வாரஹ பரிகீர்த்திதாஹா

சாமோ விசாரஹ ஸந்தோஷஸ் சதுர்த்தஹ ஸத்ஸங்கமஹ

–யோக வாசிஷ்டம் 2-11-59

மோட்சத்தின் (வாசலில் நிற்கும்) காவல்காரர்கள் நால்வர்:

மனக் கட்டுப்பாடு, ஆத்ம விசரணை, திருப்தி (போதும் என்ற மனம்), சாதுக்களின் சஹவாசம் (தொண்டருடன் கூட்டு)

ஆக நல்ல வழி, கெட்ட வழி என்பதை எவரும் நினைவிற்கொள்ள வசதியாக ஆன்றோர்கள் கூறிவிட்டனர். பின்பற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

Tags– நரக வாசல், சொர்க்க வாசல்,மோக்ஷ வாசல்

–சுபம்–