சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

 

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

என் பெயர் புலவர் நக்கீரன். “சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை’’ என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற மூன்று வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”, ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். கன கச்சிதமாக இருந்தது. அதே போல இன்றும் தலைப்பை ஒட்டி மட்டுமே பேசவேண்டும். வெளி நாட்டுக்காரர்களும் அரசியல்வாதிகளும் ‘’ஆரிய, திராவிட’’ என்ற சொற்களால் மக்கள் எல்லோரையும் குழப்பி வைத்துவிட்டனர். நீங்கள் எல்லோரும் இது பற்றிக் கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும்.

 

*முதலில் நான் பேசுகிறேன். என் பெயர் பரஞ்சோதி முனிவர். என்னுடைய திருவிளையாடல் புராணம் தமிழர்களுக்கு நன்கு தெரியும். நான் அப்போதே சொல்லிவிட்டேன் தமிழும் வடமொழியும் சிவ பெருமான் கொடுத்த கொடை என்று:

‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்

தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

திருவிளையாடல் புராணம்

‘’கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ’’

 

என்றும் பாடிவிட்டேன்

 

*என் பெயர் மாணிக்க வாசகன், என் திருவாசகத்தில்

‘தென் நாட்டுடைய சிவனே போற்றி’ என்றும்

‘பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே’ – என்றும் பாடியுள்ளேன்.

 

*என் பெயர் சிவஞானசுவாமிகள். நான் காஞ்சிப் புராணத்தில்

‘’இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப

இரு மொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பு

மிருமொழியுமான்றவரே தழீஇயனாரென்றாலிவ்

விருமொழியு நிகரென்னு மிதற்கையமுளதேயோ’’ என்று சொல்லிவிட்டேன்

 

என் பெயர் அப்பர். வாகீசர் என்றும் திருநாவுக்கரசு என்றும் என்னை அழைப்பர். நானும் தேவாரத்தில்…….

ஆரியந்தமிழோடு  இசையானவன் (6-132-3)

வானவர் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்

வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் (6-8-60)

கோல மா நீலமிடற்றான் தன்னை

செந்தமிழோடு ஆரியனை சீரீயானை (6-46-7)

இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலையுறயெம் அண்ணல் கண்டாய் (திருமறைக்காடு)

 

என்று எல்லாம் பாடி தமிழும் சம்ஸ்கிருதமும் தேவ பாஷை என்று உணர்த்திவிட்டேன். ஆரிய என்ற சொல்லை நான் சிவனுக்குப் பயன்படுத்திய பின்னரும் என்ன சந்தேகம்?

*என் பெயர் சம்பந்தன். சிறு வயதுப் பாலகன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் அப்பரின் ‘’டியர் ப்ரண்ட்’’. நான் கொஞ்சம் கடுமையான சொற்களைப் பிரயோகித்து இருக்கிறேன்:

மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா

அந்தகர்க்கு எளியேன் அலேன்”

தமிழ், வடமொழி நூல்கள் கூறும் கருத்துக்களை அறியாதோரை குரங்கு, குருடன் என்று சொல்லிவிட்டேன். இன்னுமா புரியாது?

 

*என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தைப் பட்டிமன்றங்களில் அலசுவதை நக்கீரன் அறிந்திருப்பீர்கள். நானும்

பல இடங்களில் ‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’ (அகத்தியன்) என்றும், ‘’தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்’’ என்றும்  ‘’என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’ என்றும் பாடிவிட்டேன் தமிழ், மொழி, அகத்தியன், சிவன் ஆகியோருக்குமுள்ள தொடர்பை தெளிவு படுத்திவிட்டேன்.

 

*என் பெயர் திருமூலர். நானும் எவ்வளவோ இது பற்றிப் பாடிவிட்டேன்

அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே! (திருமந்திரம்)

 

*என் பெயர் ஈசானதேசிகர். நான் இலக்கணக் கொத்துரையில்

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்

இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

 

என்று அப்போதே சொல்லிவிட்டேன். நான் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை என்று சொன்னபோது என்னை ஓரம்கட்டிவிட்டார்கள்.

 

என் பெயர் சுப்பிரமணிய தேசிகர். நானும் 70 முதல் 80 சதம் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று காட்டிவிட்டேன். என்னுடைய பிரயோக விவேகம் நூலைப் படிக்காமலேயே திட்டுகிறார்கள்.

 

என் பெயர் சுந்தரம் பிள்ளை. தமிழில் நாடகமே இல்லை என்ற குறையைப் போக்க  ஒரு ஆங்கில நாடகத்தைத் தழுவி மனோன்மணீயம் என்ற நாடகத்தை எழுதினேன். நான் சம்ஸ்கிருதத்தைக் குறைகூறி எழுதியதை தமிழ்நாடு அரசே நீக்கிவிட்டது. சிதைக்கப்பட்ட தமிழ் மொழி வாழ்த்தை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்: ‘’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’ என்ற வரிகளை நீக்கி என் பாட்டையே சிதைத்துவிட்டார்கள். எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் திராவிட (தமிழ் நாடு) அரசே இப்படிச் செய்திருக்கிறது. போகட்டும்.

 

எல்லோருக்கும் நன்றி. அடுத்த வாரத் தலைப்பு : ‘’கா, கா, கா! கா, கா, கா!!’’ சங்கப் புலவர் பாடல்கள் முதல் பராசக்தி திரைப் பாடல் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது நக்கீரன்..