
Post No. 9409
Date uploaded in London – – 22 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கற்க! கேட்க!! சொல்லுக!!! சொல்லற்க !!!!- வள்ளுவரின் கட்டளைகள்!
ச.நாகராஜன்
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முன்னேற நன்கு படிக்க வேண்டும், பெரியோர் பலரும் அவனிடம் சொல்வதை அவன் நன்கு கேட்க வேண்டும், பிறரிடம் பழகும் போது சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல வேண்டும்.
எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது, எங்கு சொல்லக் கூடாது என்பதை அறிய வள்ளுவரைத் தானே நாட வேண்டும்!
அவர் கட்டளைகளாகவும், அன்புரையாகவும், அறிவுரையாகவும் கூறுவது மனித குலத்திற்கே பொதுவான நீதிகளாகும்; வாழ்வாங்கு வாழ வேண்டிய வழிகளாகும்.
கற்க!
இரு குறள்களில் ‘கற்க’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர்!
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391)
ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க! அப்படிக் கற்றபின் அந்தக் கல்விக்குத் தக அந்த நூல்கள் சொல்லுகின்ற நெறியின் கண் நிற்கவும்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு (குறள் 725)
ஒரு அவையில் அஞ்சாது பேச, பதில் சொல்ல, சொல் இலக்கண நெறியினாலே கற்க வேண்டிய அளவை நூல் முதலியவற்றை அறிந்து கற்க வேண்டும்.
கேட்க!!
கேட்க என்ற சொல்லை நான்கு குறள்களில் பயன்படுத்துகிறார் வள்ளுவர்.
(குறள் பாக்கள் :-414,416,695,587)
கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)
ஒருவன் தானே கற்கவில்லை என்றாலும் கூட கற்றவர்களை அணுகி கேட்டுத் தெளிய வேண்டும். அது அவன் தளர்ச்சி வந்த போது அவனுக்கு ஊன்று கோல் போலத் துணையாக நிற்கும்.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் (குறள் 416)
இந்தக் குறளில் எதைக் கேட்க வேண்டும் என்பதை மிக அழகுறத் தெளிவு படுத்தி விடுகிறார் வள்ளுவர். நல்லவை கேட்க என்பது வாழ்நாள் இறுதி வரைக்குமான அற்புதமான ஒரு அறவுரை ஆகும். அதில் எனைத்தானும் என்று கூறி எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் கூட என்கிறார்.
சிறிய அளவு நல்லதைக் கேட்டாலும் கூட அது பயன்படுத்தப்படும் போது மிகப் பெரிய பெருமையைத் தரும் என்று பலனையும் கூறி விடுகிறார்.
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப் பொருளை
விட்டக்கால் கேட்க மறை (குறள் 695)
ஒரு அரசன் அல்லது ஒரு தலைவன் (Leader) அல்லது கம்பெனியின் தலைவன் (CEO) அல்லது உரிய மேலதிகாரி (Manager) நமக்கு இருக்கும் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
எந்தப் பொருளையும் செவி கொடுத்துக் கூர்ந்து கேட்காமலும் அப்பொருளை அறியத் தொடர்ந்து கேட்காமலும் அந்தத் தலைவன் தானே மனம் விட்டுச் சொன்னால் மட்டும் அந்த இரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனாவசியமாக மூக்கை நுழைக்காதே என்பது பொருள்!
மறைந்தவை கேட்க வற்றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று (குறள் 587)
சமூக சூழ்நிலையில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஒற்றாடல் அதிகாரத்தில் இடம் பெறும் இந்தக் குறள் சாமன்யனுக்கும் சாதாரண நிகழ்வுகளில் பயன் படும் ஒரு குறள் அறிவுரை ஆகும்.
(நமக்கு வேண்டாத, நமக்கு எதிராக) பிறரால் மறைக்கப்பட்டு செய்யப்படும் செயல்களை மற்றவரிடம் கேட்டு அறியக் கூடிய வல்லமை வேண்டும். தான் கேட்டதை சந்தேகமின்றி அது சரிதானா, உண்மை தானா என்று தானே ஆராய்ந்து முடிவிற்கு வர வேண்டும்.
சொல்லுக!!!
சொல்லுக என்று ஆறு இடங்களில் நமக்குக் கட்டளை இடுகிறார் வள்ளுவர்!
(குறள் பாக்கள் : 197, 200, 644,645,711, 712)
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று (குறள் 197)
நயனில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக; ஆனால் சான்றோர், பயனே தராத வெற்றுச் சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க;
சொல்லிற் பயனிலாச் சொல் (குறள் 200)
மிக மிகத் தெளிவாக எதைச் சொல்ல வேண்டும் என்பதற்கான அறிவுரை இது.
சொல்ல வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் பயன் தரும் சொற்களை மட்டுமே சொல்லுக; பயன் தராத சொற்களை ஒருபோதும் சொல்லாதே.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல் (குறள் 645)
அறம் பொருள் ஆகியவற்றை அடைய நமது நாக்கே வழி. அதைப் பயன்படுத்துவது எப்படி? சொல்லும் திறன் அறிந்து முறைப்படி அழகுற இனிமையாகச் சொல்ல வேண்டும். அதுவே அறத்தையும் செல்வத்தையும் சேர்க்கும்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (குறள் 645)
ஒரு சொல்லைச் சொல்வதற்கு முன் அந்தக் கருத்தை வெளிப்படுத்தச் சிறந்த சொல் எது என்று நன்கு ஆராய்ந்து இன்னொரு சொல் அதை விட நல்லது இல்லை என்ற தன்மையில் அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி.
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் (குறள் 711)
சொல் மூன்று வகைப்படும்.செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச் சொல். இதில் நமக்கு ஆகாதனவற்றை விடுத்து எந்த இடத்தில், எந்த அவையில் பேசுகிறோமோ அந்த இடத்தின் நிலையையும் அப்போதைய சூழ்நிலையையும் அறிந்து உரிய சொல்லைச் சொல்ல வேண்டும்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மை யவர் (குறள் 712)
இடை, நடை! ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு நடை உண்டு. சொற்களின் நடையினை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டு. அதையும் நினைத்த இடத்தில் சொல்லக் கூடாது. எங்கு பேசுகிறோமோ அந்த நடையை – அதாவது அவையை – அறிந்து ஒரு குற்றமும் இன்றி சொல்ல வேண்டும். கேட்பவர் அதைக் கேட்க விருப்பப்படும் படி செவ்வி அறிந்து அதாவது சொல் வழு, பொருள் வழு இன்றிச் சொல்ல வேண்டும்.
சொல்லற்க!!!!
இவ்வளவு சொன்ன வள்ளுவர் எதைச் சொல்லக் கூடாது என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறார் மூன்று குறள்களில்! (குறள் பாக்கள் 184, 200, 719)
இவற்றுள் குறள் 200 பற்றி மேலே பார்த்து விட்டோம்.
கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்காச் சொல் (குறள் 184)
ஒருவனின் எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் எதை வேண்டுமானாலும் கடுமையாகப் பேசி விடலாம். ஆனால் அவன் எதிரில் இல்லாத போது, பின் விளைவை அறியாமல் புறம் கூறும் சொற்களைச் சொல்லாதே.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லுவார் (குறள் 719)
புல்லவை – புல்லர் கூடி இருக்கும் அவை
நல்லவை – நல்லோர் இருக்கும் அவை
ஒரு நல்லோர் கூடிய அவையில் அவர்கள் மனம் கவரும் படி பேச வல்லமை உடைய ஒருவன் மறந்தும் கூட புல்லர்கள் குழுமிய அவையில் தன் வாயைத் திறக்கக் கூடாது.
பொச்சாந்தும் என்று ஏன் சொல்கிறார் வள்ளுவர்? நல்லவையில் பேசும் ஒருவன் புல்லர்கள் கூட்டத்தில் பேசினால் இப்படிப்பட்டவர் இந்தக் கூட்டத்தில் பேசலாமா என நல்லோர் அங்கலாய்ப்பர். ஆகவே தான் பொச்சாந்தும் – மறந்தும் கூட – புல்லர்கள் கூட்டத்தில் பேசாதே என்கிறார் வள்ளுவர்.
எதை, எப்படி, எப்போது பேச வேண்டும் என்பதை இதை விட வேறு எப்படிச் சொல்ல முடியும்?
சொல்வது, சொல்லாமல் இருப்பது ஆகியவை பற்றிய உலகிற்கான திரண்ட கருத்தே இவை தாம்!
ஆக, கற்க, கேட்க, சொல்லுக, சொல்லற்க ஆகிய நான்கு கட்டளைகளை சிரமேற் கொண்ட ஒருவன் பெயரும் புகழும் பெறுவான். அறம் ஆற்றியவன் ஆவான். அவனுக்கு மாபெரும் செல்வம் தானே வந்து சேரும்!
***

tags – கற்க, கேட்க, சொல்லுக, சொல்லற்க, வள்ளுவன், கட்டளைகள்,