Written by S NAGARAJAN
Date: 12 SEPTEMBER 2018
Time uploaded in London – 8-08 AM (British Summer Time)
Post No. 5420
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்; அதை வதை செய்யாதே!
ச.நாகராஜன்
பசு ஹிந்துக்களுக்கு வெறும் மிருகம் அல்ல; அது தெய்வம்.
ஆகவே தான் அதை வதை செய்யக்கூடாது என்கின்றனர் ஹிந்துக்கள்.
பசுவின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் பொருளாதார ரீதியாக வல்லுநர்கள் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தார்மீக ரீதியாக நமது இதிஹாஸ புராணங்கள் பசுவின் மேன்மையைப் பற்றிக் கூறுவதை நாம் முதலில் ஏற்கிறோம்.
பத்ம புராணத்தில் பாதாள காண்டத்தில் 18 மற்றும் 19 அத்தியாயங்களில் வரும் ஒரு சம்பவம் பசுவின் பெருமையைக் கூறுகிறது.
ஜனக மஹாராஜா தனது புவி வாழ்வை விட்ட உடனேயே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவர்களுடன் கூடிய ஒரு அழகிய விமானம் வந்தது.
அதில் ஏறிச் சென்ற ஜனகர் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் யமபுரியைக் கடக்க நேர்ந்தது.
அது யமபுரியைக் கடக்கும் போது தீனமான குரல் ஒன்று எழுந்தது.”ஓ ! ஜனக மன்னரே! தர்மவானே! இந்த இடத்தை விட்டுப் போகாதீர்கள். உங்கள் உடலைத் தொட்டுச் செல்லும் காற்று இந்தப் பக்கம் வீசும் போது எங்களது துன்பத்தை அது வெகுவாகக் குறைக்கிறது.”
இந்தக் குரலைக் கேட்ட ஜனகமன்னர் உடனே, “ஓ, அப்படியானால் நான் இங்கேயே இருக்கிறேன்” என்றார்.
அவரது இந்த முடிவைக் கேட்ட யமதர்ம ராஜன், “மன்னரே! இங்கு இருக்க வேண்டாம்.இது பாவிகள் இருக்கும் இடம். நாம் மேலே செல்வோம்” என்றான்.
ஆனால் ஜனகரோ, “ முதலில் இந்த துன்பத்திலிருந்து இவர்களை மீட்போம். அப்புறம் தான் என்னால் நிம்மதியாக சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்” என்றார்.
உடனே யமதர்மன், “ மன்னரே! இவர்கள் அனைவரும் பொய்யர்கள். கொள்ளையடித்தவர்கள். கற்பழித்தவர்கள். இவர்களை நிச்சயமாக நீங்கள் மீட்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் மர்யாதா புருஷோத்தமனான ராமனின் ராம நாமத்தை உச்சரித்ததால் கிடைத்த புண்ணியத்தை இவர்களுக்குத் தாருங்கள்” என்றான்.
உடனடியாக தனது புண்ய பலனை ஜனக மன்னர் அவர்களுக்கு அளித்தார். அவர்கள் துன்பம் தீர்ந்தது.
இப்போது ஜனகருக்கு ஒரு சந்தேகம் உதித்தது.
அவர் யமனை நோக்கி தான் ஏன் இந்த நரகத்தின் அருகில் வந்து இந்தக் குரலைக் கேட்க நேர்ந்தது என்று கேட்டார்.
அதற்கு யமன், “ ஜனகரே! ஒரு சமயம் ஒரு பசு புல்லை மேய்ந்து கொண்டிருந்த சமயம் அதை நீங்கள் தடுத்து விட்டீர்கள். இந்தச் செயல் தான் உங்களை நரகத்தைப் பார்க்கச் செய்து விட்டது” என்று பதில் கூறினான்.
பசு எவ்வளவு புனிதமானது என்பதை உணர்த்த பத்ம புராணம் இந்தச் சம்பவத்தை இப்படி விளக்குகிறது.
*
மஹாபாரதத்தில் ஒரு சம்பவம்.
திரௌபதி தனது ஐந்து கணவர்களில் ஒருவர் வீட்டில் வசிக்கும் போது மற்ற நால்வரும் அந்த வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.
இந்த விதியை யாரேனும் ஒருவர் மீறி விட்டால் அவர் 12 வருடம் வனவாசம் செய்ய வேண்டும் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஒருமுறை திரௌபதி தர்மரின் இல்லத்தில் இருந்தாள். அப்போது ஒரு பிராமணன் அர்ஜுனனிடம் வந்து தனது பசுவை திருடர்கள் திருடிச் செல்வதாகச் சொல்லி அதைக் காக்க வேண்டும் என்று வேண்டினான்.
உடனே பிராமணனின் பசுவை எப்படியேனும் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தர்மபுத்திரரின் இல்லத்தில் இருந்த தனது காண்டீவத்தை எடுக்க அர்ஜுனன் அங்கு நுழைந்தான்.
பசு காப்பாற்றப்ப்பட்டது.
ஆனால் விதியை மீறிய செயலுக்காக அர்ஜுனன் 12 வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.
ஆனாலும் கூட இந்த 12 வருடங்களில் அர்ஜுனன் பெறுதற்கரிய பல அஸ்திரங்களையும் பேரறிவையும் பெற்றான்.
பசுவைக் காத்த தர்மம் அவனைப் பின் தொடர்ந்தது.
இந்த அஸ்திரங்களின் உதவியாலேயே குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெல்ல முடிந்தது.
பசு தெய்வம். அதைக் காப்பது ஹிந்துக்களின் கடமை.
அதை வதை செய்வதைத் தடுப்பது நமது கடமையே!
***