Written by London swaminathan
Date: 13 June 2016
Post No. 2892
Time uploaded in London :– 17-59
( Pictures are taken by london swaminathan)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com
இங்கிலாந்தின் கார்ன்வாலில்(Cornwall) உள்ள ஜமைகா இன் (சத்திரம்) Jamaica Inn என்ற மியூசியத்துக்கு ஜூன் 11 (2016) போயிருந்தேன். அங்கு கடற் கொள்ளைக் காரர்கள், கடத்தல் காரர்கள் பற்றி ஒரு சிறிய மியூசியமும், ஹோட்டலும், மதுபான விடுதியும் உள்ளன. லண்டனிலிருந்து ஐந்து மணி நேரம் காரில் சென்றால் இந்த இடத்தை அடையலாம். கார்ன்வால் என்னும் பிராந்தியம் அழகான கடற்கரை, பழங்காலச் சின்னங்கள், நீர்வீழ்ச்சிகள் முதலியவற்றுக் கும் பெரிய மார்க்கெட்டுக்கும் பெயர் பெற்ற இடம். நாங்கள் இரண்டே நாள் விடுமுறையில் சென்றதால் ஜமைகா இன், நியூ கீ கடற்கரை, ஈடன் கார்டன் Eden Garden என்ற மிகப்பெரிய தாவரவியல் பூங்கா, செயின்ட் ஆஸ்டல் (St Austell) வாரச் சந்தை ஆகியவற்றை மட்டுமே பார்க்கமுடிந்தது.
ஒருகாலத்தில் கார்ன்வால் என்பது யாரும் அதிகம் வராத ஒரு பகுதியாக இருந்ததால் அது கஞ்சா முதலிய பொருட்களை கடத்துவோரின் சொர்கபூமியாக மாறியது. வெளி உலகிற்கே இப்படி ஒரு கடத்தல்காரர் பூமி இருப்பதும் அவர்கள் ஒரு ஹோட்டலில் வழக்கமாக சந்தித்து பண்டமாற்றம் செய்வதும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1936 ஆம் ஆண்டுகளில் இவ்விஷயங்களைக் கூர்மையாகக் கவனித்த டாப்னி டூ மோரியர் (Daphne du Mauriere) என்ற பெண்மணி கடத்தல்காரர், கடற்கொள்ளைக்காரர்கள் பற்றி நல்லதொரு நாவல் எழுதினார். அவர் வாயிலாக இந்த இடம் பற்றி எல்லோரும் அறிந்தனர். பின்னர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்.
அந்தத் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள், எப்படிக் கப்பல்களைக் கவிழ்த்து, மாலுமிகளைக் கொன்று பொருள்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று காட்டப்படுகிறது.
இப்பொழுது பாட்மின், லான்சஸ்டன் என்ற இரண்டு ஊர்களுக்கிடையேயுள்ள ஜமைகா இன், ஒரு சுற்றுலா இடமாக மாறிவிட்டது. ஒரு சின்ன மியூசியத்தில் கடத்தல் காரர்கள் பற்றிய நாவல்களின் தொகுப்பு, பழைய ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், அவர்கள் கடத்திய பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சணல் நாரினால் பின்னப்பட்ட பைகளில் சாமான்கள் வாங்குவோம். அது மாதிரிப் பையின் மீது கஞ்சா படம் போட்டு இத்தனை கிலோ என்று எழுதி இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இப்படி கிலோ கணக்கில் ஜமைகா தீவில் கஞ்சா விற்கப்பட்டது. அந்தப் பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாம்பாட்டிகள் வைத்திருக்கும் மகுடிகள் அங்கே பழங்கால இசைக்கருவிகள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஜமைகா என்னும் நாடு மேற்கிந்தியத் தீவு நாடுகளில் ஒன்று ஆகும்.
ஒரு தனி அறையில் பத்து நிமிட வீடியோ திரைப்படமும் காட்டப்படுகிறது. டாப்னி எழுதிய நாவல்களும் உள்ளன. ஜமைகா இன் என்ற பெயரில் பி.பி.சி.சீரியல், நாடகம் ஆகியனவும் வந்திருப்பதால், இந்தக் கதைகளை அறிந்தோருக்கு இது ஒரு நல்ல மியூசியமாகத் திகழும். ஒரு சிறிய நுழைவுக் கட்டணம் இருந்தபோதிலும், நாவலைப் படித்தவர்களும், திரைப்படத்தைப் பார்த்தவர்களும் ஜமைகா இன் – சத்திரத்தைப் பார்க்காமல் வரமாட்டார்கள். சுமார் 300 ஆண்டுப் பழமையான இடம் இது.
–சுபம்–
You must be logged in to post a comment.