ஜம்புத்வீபம்=நாவலந்தீவு

இந்து மதம் ஒரு ஒப்பற்ற மதம், ஈடு இணையற்ற மதம். இசை,நடனம்,,கோலம் போடுதல், பூ அலங்காரம் செய்தல், வித விதமான பலகாரங்கள், இனிப்புகள் செய்தல், அறிவியல், வரலாறு, நிலவியல், உளவியல், இயற்பியல், மருத்துவம், சுகாதரம், புறச் சூழல் பாதுகாப்பு—இப்படி எத்தனையோ விஷயங்களை அன்றாட வாழ்வில் கலந்து அதற்கு மதச் சடங்குகள் என்ற முத்திரையையும் குத்திவிட்டது. இதை உலகில் வேறு எந்த இனத்திலும், கலாசாரத்திலும், மதத்திலும் காணமுடியாது. இது பற்றி நான் ஒவ்வொரு கட்டுரையிலும்  ஒரு சில துறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லி வருகிறேன். இந்தக் கட்டுரையில் பூகோளம், சரித்திரம் ஆகிய இரண்டு அம்சங்களை மட்டும் தொட்டுக் காட்டுவேன்.

 

பிராமணர்கள் அன்றாடம் பூஜை, சடங்குகள் செய்யும்போதும் மற்றவர்களுக்கு செய்துவைக்கும் போதும் பூவையோ, மஞ்சள் அட்சதையையோ கொடுத்து வலது தொடையின் மீது இரு கைகளையும் வைக்கச் சொல்லி வடமொழியில் ‘’சங்கல்பம்’’ என்று ஒன்று செய்வார்கள். இது வட மொழியில் இருப்பதால் தற்கால மக்களுக்கு அர்த்தம் புரிவதில்லை. ஒரு காலத்தில் எல்லோருக்கும் பொருள் தெரிந்திருந்தது! சிலப்பதிகார கதாநாயகன் கோவலனுக்கும் கூட வடமொழி தெரிந்திருந்ததை வேறொரு கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

 

சங்கல்பம் என்பது, இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக, இந்த பூஜையை செய்யப் போகிறேன் என்ற அறிவிப்பதாகும். இப்படி பகிரங்கமாக உறுதி மொழி எடுப்பதால் அதிலேயே மனம் குவிந்திருக்கும். இந்த சங்கல்பத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது, இந்த மன்வந்தரத்தில், இந்த யுகத்தில் ,இந்த ஆண்டில், இந்த ருது, மாதம், நட்சத்திரம், திதியில் இதைச் செய்கிறேன் என்பதை அறிவிப்பார்கள். இப்படிக்கூறும் காலத்தைக் கணக்கிட்டால் பூமி தோன்றிய காலம் வரை செல்லும்! உலகில் அரசியல் கூட்டம் நடத்துவோரோ, வரலாற்றுப் புகழுடைய சுதந்திர பிரகடனத்தில் கை எழுத்திடுவோரோ கூட, அந்த தேதி வருஷத்தை மட்டுமே கூறுவர். ஆனால் இந்துக்களோவெனில் உலகம் தோன்றிய காலத்தைக் கணக்கிட்டு அது முதல் இன்றுவரை உள்ள காலத்தைப் பற்றிப் பேசுவர். இது உலக மஹா அதிசயம். பார்த்திவபுரம் கல்வெட்டில் கோ கருநந்தடக்கன் என்ற மன்னன் கலியுகம் தோன்றியது முதல் அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட தேதிவரையுள்ள காலத்தை நாட்கணக்கில் சொல்லுகிறான்!!!

எந்த இடத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதை பூகோள/ நிலவியல் குறிப்புகளுடன் அறிவிப்பர். இந்தப் பூமியில் உள்ள பல பிரதேசங்களீல், மேரு மலைக்குத் தெற்கில், ஜம்புத்வீபத்தில், பாரத வர்ஷத்தில், பரதக் கண்டத்தில், குறிப்பிட்ட……. இந்த நதிக்கரையில்……….. இந்த நகரத்தில்………. இந்த காட்டிற்கு அருகில் பூஜை/ ஹோமம் செய்கிறேன் என்பர். இது முழுதும் பூகோள விஷயங்கள்! என்ன அதிசயம்….காலாகாலமாக தங்கள் நதி ஊர் மலை, காடுகளின் பெயர்களை நினைவு கூறுகின்றனர். கடவுளுக்கு நாம் இந்த பூமியில் எங்கே இருக்கிறோம் என்று தெரியாதா என்ன? மக்களுக்கு பூகோளம், சரித்திரம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இத்தனையும்.

 

இதில் வரும் ஜம்புத்வீபத்தைப் பார்ப்போம். தமிழ்ப் புலவர்கள் இதை அழகாக நாவலந்தீவு என்று மொழி பெயர்த்துள்ளனர். ஜம்பூ பழம் என்பது, நாவல் பழம் என்பதாகும். இது நாடு முழுதும் வளரும் மரம். பிள்ளாயாருக்கும் முருகனுக்கும் பிடித்த பழம். ஒரு தாவரம் எங்கே அதிகம் விளைகிறதோ அதன் பெயரில் அந்த நாட்டிற்குப் பெயரிட்டனர் இந்தியர்கள். ஜம்பூ, சால்மலி என்றும் அது இல்லாவிடில் கிரவுஞ்ச என்று பறவையின் பெயரில் அல்லது அதிகமாக வசிக்கும் மக்கள் இனத்தின் பெயரில் (காம்போஜ) என்றும் பெயரிட்டனர். தமிழரும் கூட குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் என்று தாவரங்களின் பெயரையே பயன் படுத்தினர்.

புறநானூறு 397 (எருக்காட்டூர் தாயங்கண்ணனார்= தாசன்+கண்ணனார் =கண்ணதாசன்)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய தாயங்கண்ணனார் கூறுகிறார்:

 

அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த

தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள்

வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்

என்று பாடுகிறார். வலம்படு தீவு என்பதற்கு வெற்றிகொண்ட தீவின் என்று உரையாசிரியர்கள் எழுதுவர். இது உண்மையில் ஜம்பூத்வீபம் என்னும் தீவில் கிடைக்கும் சம்பூநதம் என்னும் ஒருவகைத் தங்கமாகும்.

திருமுருகாற்றுப்படையின் வரி 18, இதை உறுதி செய்கிறது:சம்பூநதம் என்னும் பொன்னைக்குறிக்க நாவலொடு பெயரிய பொலம்புனை என்று பாடுகிறார்.

 

நாவலொடு பெயரிய பொலம்புனை அவரிழைச்

சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி

கடுவன் இளவெயினனார் பாடிய ஐந்தாம் பரிபாடலில் (5-8/9) நேரடியாகவே குறிப்பிடுகிறார்:

 

‘’ நாவல் அம் தண்பொழில் வட பொழில் ஆயிடை’’—என்று. மேலும் நாட்டின் வடக்குப் பக்கத்தில் கிரவுஞ்ச மலை உள்ளது என்ற பூகோள உண்மையயும் வெளிப்படுத்துகிறார். இன்றும் இமய மலையில் ஒரு குறிப்பிட்ட கணவாய் வழியாக வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. தற்போது இது லடாக் பகுதியில் நீதி கணவாய் என்று அழைக்கபடுகிறது

தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் ‘’நாவல் அம் தண்பொழில்’’ (வரி 465) என்று சொல்கிறார்.

 

ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிகிழான் காரியாதி மேல் பாடிய பாடலில் (புறம் 177) தேன் சிந்தும் நாவல் கனி பற்றிக் கூறுகிறார்.

சங்ககாலத்துக்குப் பிற்காலத்திய நூல்களான சிலப்பதிகாரம் (17-1), மணிமேகலை(25-2-12/16)ஆகிய நூல்களில் நாவலந்தீவு பற்றிய தெளிவான குறிப்புகள் வருகின்றன.

நாவல் ஓங்கிய மாபெருந் தீவு (மணி 2-1) நாவலந்தீவு, நாவலொடு பெயரிய பெருந்தீவம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தேவாரம் (அப்பரின் மறுமாற்றத் தாண்டகம்) முதலிய பல இடங்களிலும் நாவல் தீவைக் காணலாம்.

 

காளிதாசன் கவிதைகள்

காளிதாசனுடைய 1000க்கும் மேலான உவமைகளில் நூற்றுக் கணக்கானவற்றை சங்க காலப் புலவர்கள் பயன்படுத்துவதால் காளிதாசன் அவர்களுக்கு முன் வாழ்ந்தவன் என்பதை ஆறு ஏழு கட்டுரைகளில் எழுதிவிட்டேன். ஜம்பூத்வீபம் பற்றியும் காளிதாசன் பாடியிருக்கிறான். மேகதூதம் 19-ஆம் பாடலில் நாவல் மரக் காடுகள் பற்றிப் பாடுகிறான்.

 

ரகுவம்சம் 18-44 இல் ஜாம்பூநதம் என்னும் தங்கவகை பற்றிப் பாடுகிறான். இதையே மேற்கூறிய புறப் பாடல் 397—லும், திருமுருகாற்றுப்படை வரி 18—லும் கண்டோம்.

Pictures are taken from various websites. Thanks.