31 முக்கிய கம்ப ராமாயணப் பாடல்கள்

ram nam, fb

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 ஜூலை மாத காலண்டர்
(( முக்கிய 31 கம்ப ராமாயணப் பாடல்கள் ))

Post No. 1139 Date: 30 June 2014
Prepared by London swaminathan (copyright)

கம்பன் பாடல்களில் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகியவற்றில் இருந்து முக்கிய 31 பாடல்கள் இந்த ஜூலை மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: ஜூலை 4 வெள்ளி ஆனி உத்தரம் ; 12 சனி வியாச பூஜை; 17 வியாழன் தட்சிணாயன புண்யகாலம்; 26 சனி ஆடி அமாவாசை; 29 செவ்வாய் ரம்ஜான்; 30 புதன் ஆடிப்பூரம்.
சுபமுஹூர்த்த நாட்கள்:– 7, 9, 11, 14, 16. பௌர்ணமி — ஜூலை 12, அமாவாசை– ஜூலை 26,; ஏகாதசி ஜூலை 8 & 22.

ஜூலை 1 செவ்வாய்
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–(பாலகாண்டம் பாயிரம் 1)

ஜூலை 2 புதன்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)

ஜூலை 3 வியாழன்
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே. –(பால. காப்பு 12)

ஜூலை 4 வெள்ளி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் —(பால.காப்பு 2)
hanuman with hill

ஜூலை 5 சனி
முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ –(பால. 8)

ஜூலை 6 ஞாயிறு
கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறைவளம் நல் மணி
பிலம் சுரக்கும்பெறுவதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம் –(பால. 70)

ஜூலை 7 திங்கள்
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை,பல் கேள்வி ஒங்கலால். –(பால. 85)

ஜூலை 8 செவ்வாய்
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய் வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்–(பாலகாண்டம் 481)

ஜூலை 9 புதன்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான் ;அவளும் நோக்கினாள் –(பால. 519)

ஜூலை 10 வியாழன்
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர்
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ –(பால. 522)

hey ram

ஜூலை 11 வெள்ளி
கருதல் அரும் பெருங் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரிபுவனம் முழுது ஆண்டு சுடர்நேமி செல நின்றோர்
பொருது உறை சேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன்–(பால. 590)

ஜூலை 12 சனி
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நான் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் –(பால. 648)

ஜூலை 13 ஞாயிறு
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்
–(பால. 1028)

ஜூலை 14 திங்கள்
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைத்தான்
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன்
நச்சுடை வடிக்க கண் மலர் நங்கை இவள் என்றால்
இச்சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ–(பால. 1099)

ஜூலை 15 செவ்வாய்
முப் பரம்பொருளிற்குள் முதலை மூலத்தை
இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை அப்பினுள் அமிழ்தை தன்னையே
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ
–(பாலகாண்டம் 1174)

ram on rock

ஜூலை 16 புதன்
சிலையொடு கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர்
முலை இடை முகிழ்ப்ப தேரின் மீமிசை முளைத்தது அன்னாள்
அலை கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள
மலையிடல் உதிக்கின்றால் போல் மண்டபம் அதனில் வந்தாள்.
–(பாலகாண்டம் 1185)

ஜூலை 17 வியாழன்
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ –(அயோத்தியா காண்டம் 20)

ஜூலை 18 வெள்ளி
“புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகழ்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்து, யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத் திறலோன். –(அயோத்தியா 36)

ஜூலை 19 சனி
மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்.– (அயோ.39)

ஜூலை 20 ஞாயிறு
ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழ் இருஞ் சடைகள் தாங்கித் தாங்க அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்–(அயோ.288)

ram targets

ஜூலை 21 திங்கள்
மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ என் பின்னவன்
பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்–(அயோ.291)

ஜூலை 22 செவ்வாய்
“குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும் என்றென்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்” –(அயோ.293)

ஜூலை 23 புதன்
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் –(அயோ. 313)

ஜூலை 24 வியாழன்
கண்ணோடாதே கணவன் உயிரோடு இடர் காணாதே
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்னப் புகல்வாய்
பெண்ணோ தீயோ மாயப் பேயோ கொடியாய் நீ இம்
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் –(அயோ.336)

ஜூலை 25 வெள்ளி
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத உரு அறியாப்
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் –(அயோ.388)

ram profile

ஜூலை 26 சனி
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது என்றான்–(அயோ.421)

ஜூலை 27 ஞாயிறு
நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்
தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்–(அயோ.428)

ஜூலை 28 திங்கள்
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையனொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் –(அயோ.610)

ஜூலை 29 செவ்வாய்
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்–(அயோ.677)

ஜூலை 30 புதன்
ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ (999)

ஜூலை 31 வியாழன்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா (1019)

contact swami_48@yahoo.com