9. ஒரு போதும் இதை நீ அவிழ்க்கக் கூடாது!

Metal_Buddha_Head__66092

by ச.நாகராஜன்

சோகோவை தன் அருகில் அழைத்த ரோஷி,”இதோ பார், குருவாக இருக்கப் பயிற்சி பெறும் ஒருவர் தனியாக இருத்தல் கூடாது. மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழக வேண்டும்.ஒரு குருவிடம் சிஷ்யனாக இருப்பது சரி தான், ஆனால் இப்போது நீ ஒரு புத்த மடாலயத்தில் சேர்ந்து அனைவருடன் பழக வேண்டும்” என்றார்.

ஜென் குருவாக ஆக வேண்டுமானால் ஒரு புத்த மடாலயத்தில் சேர்வது இன்றியமையாதது. ஜென் மடாலயங்களிலேயே மிகவும் பெரியதான டைடோகுஜி மடாலயத்தில் சோகோ சேர வேண்டும் என்று முடிவானது. அது க்யோடோ என்னும் இடத்தில் இருந்தது. அது இருந்த இடம் சோகோ நடந்து சென்றால் ஒரு மணி நேரத்தில் அடையக் கூடிய தூரம் தான்!

ஒரு புத்த மடாலயத்திற்குக் கிளம்ப வேண்டுமென்றால் துறவி அணியும் ஆடை அடங்கிய புங்கோ என்ற பெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உண்ணுவதற்கான கப்பரை, க்ஷவரம் செய்ய கத்தி, அதை தீட்டுவதற்கான சாணைக்கல், சூத்ரா புனித நூல்கள்,உள்ளாடைகள், மழைக்காலத்தில் அணியும் தொப்பி இத்யாதிகள் அடங்கிய இரண்டு மூட்டைகள் தோளிலிருந்து தொங்க பாரம்பரிய உடைகளை அணிந்து, சந்தனக் கட்டையால் ஆன காலணிகள், ஒரு தொப்பி ஆகியவற்றை அணிந்து நடந்து செல்வது துறவிகளின் வழக்கம்.

எல்லாவற்றையும் சோகோ சேகரித்தார். ரோஷி சோகோவின் அருகில் வந்து, “என்ன, எல்லாம் தயாரா.புங்கோ ரெடியா?” என்று கேட்டார்.
“இல்லை. அதைத் தான் தயார் செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் சோகோ.
“சரி,உன்னுடைய புங்கோ மூடியை என்னுடைய அறைக்குக் கொண்டு வா” என்று உத்தரவிட்டார் ரோஷி.

சோகோ புங்கோ மூடியை ரோஷியிடம் தந்த போது அதில் மூன்று ஆயிரம் யென் நோட்டுக்களை அதில் போட்டார் அவர். ஆயிரம் யென் என்பது அந்தக் காலத்தில் மிகவும் பெரிய தொகை!
”இது எதற்காகத் தெரியுமா?” ரோஷி கேட்டார்.

சோகோ அவரிடம் அடைக்கலம் ஆன சமயம் அவரிடம் தன்னிடம் அப்பா கொடுத்த பணம் கொஞ்சம் இருக்கிறது என்று சொல்லி இருந்தார். அதனால் இதுவரை கைச்செலவுக்கான பாக்கட் மணி அவருக்கு தரப்படவில்லை. ஆனால் இப்போதோ ஒரு மடாலயத்தில் சேரப் போகிறார். ஆகவே தான் அவர் இப்போது செலவுக்காக ரோஷி பணம் தருகிறார் என்று எண்ணினார் சோகோ. ஆனால் ரோஷி அடுத்தாற் போலச் சொன்ன சொற்கள் அவரைத் தூக்கிவாரிப் போட வைத்தது.

“இது உன் நிர்வாணப் பணம். உனது சவத்தை அடக்கம் செய்வதற்காக! நீ மடாலயத்தில் பயிற்சி பெறுவதற்காகச் செல்கிறாய். அதில் உன் உயிரையே கூட இழக்கக் கூடும்! பயிற்சி காலத்தில் ஒருவேளை வழியில் இருக்கும் சாக்கடையில் நீ இறக்க நேரிட்டால் உன்னிடம் இருக்கும் இந்தப் பணம் அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல் உன் சவத்தை அடக்கம் செய்ய உதவும்!” அவரது கூரிய பார்வை சோகோவின் உறுதியை அதிகரித்தது.

உலகப்போரின் போது சோகோவின் சகாக்கள் போர்க்களம் சென்ற போது சாவு என்றால் என்ன என்பதைப் பற்றி சோகோ நன்கு சிந்திப்பார். ஆனால் இப்போது ரோஷி, ‘இது உன் சவத்தை அடக்கம் செய்வதற்காக’ என்று கூறிய போது சாவு என்பது இப்போது ஒரு புதிய அர்த்தத்தை சோகோவிற்குத் தந்தது.

ivory 3

அது அவரது உடல் அடையும் மரணத்தைக் குறிக்கவில்லை “நான்” என்ற அகங்கார எண்ணத்தின் சாவையே ரோஷி குறிப்பிட்டிருந்தார்.
என்னதான் பேசினாலும், எவ்வளவு தான் பேசினாலும் “நான்”என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு இனிமையான ஒரு விஷயம்! நம்மைச் சுற்றியுள்ள தளைகளைத் தீவிரப் பயிற்சியினால் அகற்றினாலன்றி நமது அறிவை மேகமூட்டம் சூழ்ந்து நமது உ::ள்ளார்ந்த தயை எனும் பண்பு அடைக்கப்படுகிறது.ஆகவே நான் என்ற அகங்காரத்தை அழிக்க வேண்டும்! சோகோ மனமார்ந்து உறுதி பூண்டார்.

இந்தக் காலத்தில் சோகோ தனது சிஷ்யர்களை ஒரு மடாலயத்திற்கு அனுப்பும் போது அவர்களின் சவங்களை அடக்கம் செய்வதற்காக பல ஆயிரம் யென்களைத் தர வேண்டியதாயிருக்கிறது. மறு நாள் அதிகாலை நேரத்தில் ரோஷியின் அறைக்குச் சோகோ சென்றார்.
“உங்கள் அனுமதியுடன் நான் விடைபெற்றுச் செல்கிறேன்” என்றார் பணிவுடன் சோகோ.

சமையலறைப் பக்கமாகச் சென்று அங்கிருந்த வாயிலின் வழியே அழுக்குப் படிந்த தரையை மிதித்தார் சோகோ. கற்றுக்குட்டியாகப் பயிற்சியில் இருப்பவர் முன் வாயில் வழியாகச் செல்ல எப்பொழுதுமே அனுமதி இல்லை!

தனது சந்தனக் காலணிகளை சோகோ எடுத்த போது ரோஷி தன் பின்னால் வந்திருப்பதை அறிந்து சோகோ திடுக்கிட்டார். ஒரு கற்றுக்குட்டியை வழியனுப்ப வருபவர் அல்ல அவர். அவரது உயரிய நிலை மிக மிக மேலானது.

ஆனால் அவரோ சோகோவின் முன்னால் வந்து கீழே அமர்ந்து சோகோவின் காலணிகளில் இருந்த கயிறுகளைக் கட்டலானார்.திகைத்துப் போன சோகோ,” வேண்டாம் வேண்டாம், நானே செய்து கொள்கிறேன்” என்று அலறிவாறே கால்களைப் பின்னால் இழுத்துக் கொண்டார்.

ஆனால் அவரோ,”வா, இந்தப் பக்கம்” என்று சோகோவை அழைத்துக் காலணிக் கயிறை நன்கு முடிச்சுப் போட்டு, “ஓரு போதும் இதை நீ அவிழ்க்கக் கூடாது” என்றார்.போய்ச் சேரப் போகும் மடாலயத்தின் வாயிலில் காலணிகளைக் கழற்றி வைக்க அந்த முடிச்சை அவிழ்த்துத் தான் ஆக வேண்டும். ரோஷி சொன்னதன் பொருள் அது அல்ல, ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்ட ஒன்று. ஜென் துறவியாக வேண்டும் என்ற உறுதியை என்றுமே அவிழ்த்து விடாதே என்பதைக் பூடகமாக ரோஷி அப்படிச் சொன்னார்.
மனமெல்லாம் நிறைய, உறுதி கெட்டிப்பட ரோஷியைக் குனிந்து தலை வணங்கி அந்த புலர்காலை இருளில் சோகோ மெல்ல நடக்கலானார்.

சின்ன உண்மை
புத்த மதம் தோன்றிய தாயகமான பாரதத்தில் இன்று 772 புத்த தலங்கள் உள்ளன. பீஹாரில் 250, ஆந்திராவில் 200, ஒரிஸாவில் 100, மத்ய பிரதேசத்தில் 53, ஜம்மு-காஷ்மீரில் 30, மஹராஷ்டிரத்தில் 28, குஜராத்தில் 20, ஆகிய இவற்றோடு ஏனைய மாநிலங்களில் மீதமுள்ள 91 தலங்கள் உள்ளன.

-தொடரும்