சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்! (Post.9173)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9173

Date uploaded in London – –22 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!

ச.நாகராஜன்

ஜென் புத்தமதப் பிரிவில் ஏராளமான குட்டிக் குட்டி உபதேசங்கள் உண்டு. அவை அன்றாட வாழ்வில் எளிதில் கடைப்பிடிக்கக் கூடியவை; ஆனால் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை. பார்க்க எளிதாக சுலபமாக இருக்கும் அந்த அன்றாடப் பழக்க வழக்கங்கள் மிக பிரம்மாண்டமான பலனைத் தரும்!

அசோகன் மாமன்னனாக எப்படி ஆனான்?

மாமன்னன் அசோகன் முந்தைய ஜென்மத்தில் ஒரு குழந்தையாக இருந்த போது அவர் புத்தபிரானைச் சந்தித்தார். புத்தருக்குக் கொடுக்க குழந்தையிடம் என்ன இருக்கும்? ஆனால் அந்தக் குழந்தை ஒரு பிடி மண்ணை எடுத்து புத்தபிரானிடம் பயபக்தியுடன் கொடுத்தது. அதை புத்தர் அன்புடன் வாங்கிக் கொண்டார்.

அந்தச் சிறிய செயலின் பலன் அந்தக் குழந்தை மாமன்னன் அசோகனாக உருவெடுத்தது. பெரும் செயல்களைச் செய்தது!

இது தான் ஒரு சிறிய நல்ல செயலின் பலன்!

xxx

பென்னியைச் சேகரித்தவர் கெடிலாக் கார் வாங்கிய சம்பவம்!

ஜென் பழக்க வழக்கங்களைப் பற்றி விளக்கும் ஜென் மாஸ்டர் டைனின் கடகிரி

(Dainin Katagiri) நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றும் மதிப்பு மிக்கதே என்கிறார். “நமது வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் மதிப்பு வாய்ந்தவை. நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஞான மொழிகள் மதிப்பு மிக்கவை. ஒரே ஒரு வார்த்தையாக இருக்கலாம் அல்லது ஒரு சிறு சொற்றொடராக அது இருக்கலாம். ஒரு சின்ன பைசா கூட மதிப்பு மிக்கது தான்” என்று கூறும் அவர் தான் கண்ட ஒருவரைப் பற்றி விவரிக்கிறார் இப்படி:

“எனக்குத் தெரிந்த ஒருவர் பென்னி (Penny Coins) யைச் சேர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டவர். இப்படி பென்னிகளாகச் சேர்த்து வந்தவர் பல மூட்டைகளில் பென்னி நாணயங்களைச் சேகரித்தார்.  அந்த பென்னிகளைக் கொண்டு அவர் ஒரு கெடிலாக் காரையே வாங்கி விட்டார்.  ஆகவே பென்னி கூட மதிப்பு வாய்ந்தது தான் என்பது தெரிகிறது”

ஒரு புல் கூட மதிப்பு மிக்கது தான். புல் இல்லாமல் உரமான மண் உருவாகாது.

நமது வாழ்க்கைக்கு நாம் உண்மையானவராக இருந்தால் அது மிக்க மதிப்பு மிக்கதாக மாறி விடும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உன்னதமான எண்ணமும் நமக்கு உருவாகும்.

xxxxx

மன்னர் மந்திரிக்குத் தந்த தாடி!

டாங் (Tang Dynasty) வமிசத்தில் ஒரு மன்னர் இருந்தார். அவரது முக்கியமான மந்திரி ஒருவர் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு விட்டார். ராஜ வைத்தியர் அவரைப் பரிசோதித்தார். நல்ல ஒரு தாடியை வறுத்து அவரிடம் கொடுத்தால் அந்த வியாதியிலிருந்து அவர் விடுபடுவார் என்றார் வைத்தியர்.

மன்னர் ஆசை ஆசையாக பெரிய தாடியை வளர்த்து வந்தார். அவர் உடனே தன் தாடியை மழித்து அதை வறுத்து மந்திரியிடம் தந்தார். என்ன ஆச்சரியம், மந்திரியின் கொடிய வியாதி நீங்கியது; அவர் குணமடைந்தார்.

மந்திரி தாடியைப் பற்றி, தாடி தானே என்று எண்ணவில்லை. அந்த தாடிக்குப் பின்னே அதை மழித்துத் தரும் மன்னரின் பேரன்பை நினைத்து உருகினார்.

தன் வாழ்நாள் முழுவதும் மன்னருக்குச் செருப்பாக உழைக்கத் தயார் என்று எண்ணிய அவர், அப்படியே வாழ்ந்து காட்டினார்.

ஒரு சிறிய தாடி, ஒருவரின் வாழ்நாள் உழைப்பைப் பெற்றது!

xxxx

ஒபாகுவின் தாழ்ந்த வணக்கம்!

ஒபாகு (Zen Master Obaku) என்பவர் சிறந்த ஜென் மாஸ்டர். அவர் புத்தபிரானைப் பார்த்தவுடன் தலை தாழ்த்திக் குனிந்து வணங்கினார். புத்தர், தர்மம், சங்கம் எதையும் அவர் பதிலாக புத்தரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இடுப்பளவு குனிந்து ஒரு வணக்கம்! அந்தச் சின்ன செயலிலேயே அவர் மிகவும் திருப்தி அடைந்தார். அந்த குனிந்து வணங்கிய சிறிய செயல் என்ன ஆனது? இன்று வரை அனைவராலும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது செய்யும் வணக்க முறையாகி விட்டது.

சிறிய செயல்; பெரிய பழக்கத்தை உருவாக்கி விட்ட பெரிய பலன்!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!

xxx

வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அன்றாடம் சிறிய சிறிய நல்ல செயல்களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – பயனை எதிர்பாராது!

ஆத்ம திருப்தியுடன் செய்யப்படும் அவை அதற்கு ஈடான சிறிய பலனைத் தராது; நேர்விகித பலனாக சரிக்குச் சரியான அளவாக இல்லாமல் அளவுக்கு மீறிய பிரம்மாண்டமான பலனை அது தரும்!

இது ஜென் பிரிவின் முக்கியமான ஒரு போதனை!

***

 tags- ஜென்,  சின்ன செயல், பெரிய பலன், 

இப்போது விழுகிறது ஒரு இலையுதிர்கால இலை!

Part 19 of History of Zen Buddhism written in Tamil by S Nagarajan
OLYMPUS DIGITAL CAMERA

Please click the link below

19.ஸ்வர்ண லோகம்

எது சொர்க்கம்? எது நரகம்?

12_11_17_heaven_hell

Part 14 of History of Zen Buddhism in Tamil by Santanam Nagarajan

Part 14. அப்படியா?! By ச.நாகராஜன்

ஹகுயின் வாழ்க்கை சுவாரசியம் ததும்பிய ஒன்று. அதில் ஏராளமான சுவையான சம்பவங்களைப் பார்க்க முடியும். மிகவும் பிரபலமான இரு சம்பவங்களைப் பார்க்கலாம்:

ஜப்பானிய இளம் பெண் ஒருத்தியின் பெற்றோர்கள் ஹகுயின் வாழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு உணவு விடுதியை நடத்தி வந்தனர். ஒரு நாள் தனது பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்தனர். தங்கள் பெண்ணிடம் அவளது கர்ப்பத்திற்குக் காரணமானவன் யார் என்று கேட்டுக் குடைந்தனர். அவளோ லேசில் பதில் சொல்வதாயில்லை. பெரும் முயற்சிக்குப் பின்னர் அவள் ஹகுயினே இதற்குக் காரணம் என்று சொன்னாள். பெரும் கோபம் அடைந்த பெற்றோர் ஹகுயினிடம் வந்து நடந்ததைச் சொல்லிக் கத்தினர்.

“அப்படியா?” என்று மட்டும் சொன்னார் ஹகுயின்!

அவளுக்குக் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையை எடுத்து வந்த இளம் பெண்ணின் பெற்றோர் ஹகுயினிடம் தந்தனர். அதைச் செல்லமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஆரம்பித்தார் ஹகுயின். இதற்குள் இந்தச் சம்பவம் ஊரெல்லாம் பரவி ஹகுயினின் பெயர் மிகவும் கெட்டு விட்டது. ஒரு வருடம் கழிந்தது. அந்தப் பெண்ணால் இனியும் பொறுக்க முடியவில்லை.தனது பெற்றோரிடம் அவள் உண்மையைக் கூறினாள்.அந்தக் குழந்தையின் நிஜமான தந்தை மீன் சந்தையில் இருக்கும் ஒரு இளைஞன் தான் என்று! உடனே அவளது பெற்றோர் ஹகுயினிடம் ஓடி வந்தனர். நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டனர். குழந்தையைத் தங்களிடம் திருப்பித் தருமாறு வேண்டினர்.

எல்லாவற்றையும் கேட்ட ஹகுயின் “அப்படியா?” என்று மட்டும் சொன்னார். குழந்தையை அவர்களிடம் மனமுவந்து திருப்பிக் கொடுத்தார். இதனால் அவர் புகழ் எல்லா இடங்களிலும் பரவி எப்படிப்பட்ட உன்னதமான குரு அவர் என்று அவரைப் போற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர்.

heaven-hell

இன்னொரு சம்பவம்:
ஒரு நாள் போர்வீரன் ஒருவன் ஹகுயினிடம் வந்தான். “உண்மையிலேயே நரகமும் சுவர்க்கமும் இருக்கிறதா?” என்று கேட்டான்.
“நீ யார்?” என்று கேட்டார் ஹகுயின்.
“நான் ஒரு சாமுராய்” என்றான் அந்தப் போர்வீரன்.
“நீ ஒரு சாமுராயா” என்று வியந்து கூவினார் ஹகுயின்.
“உன்னைக் காவலனாக எந்த மன்னன் தான் வைத்திருக்கிறானோ! உன்னுடைய முகம் பிச்சைக்காரன் போலத் தோற்றமளிக்கிறதே!” என்றார் ஹகுயின்.

இதைக் கேட்டு வெகுண்ட அவன் தன் வாளை உருவினான். ஆனால் ஹகுயினோ பயப்படவில்லை.தொடர்ந்து பேசலானார்.”ஓ! உன்னிடம் ஒரு கத்தி இருக்கிறதா! உன்னுடைய ஆயுதம் உன் புத்தியைப் போலவே மழுங்கி இருக்கிறது!”

அந்தப் போர்வீரன் வாளை ஓங்கவே, “இதோ நரகத்தின் வாயில் திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அவரது பெருமையையும் அவர் போதிக்கும் விதத்தையும் உணர்ந்த அந்த வீரன் தன் வாளை இடையில் செருகினான்.

“இதோ சொர்க்கத்தின் கதவு திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.
அந்த வீரனுக்கு எது சொர்க்கம், எது நரகம் என்று இப்போது புரிந்து விட்டது!ஹகுயினுக்குத் தலை வணங்கி அவன் விடை பெற்றுச் சென்றான்.

ஹகுயின் அதிகம் பேச மாட்டார்.சில சொற்களிலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுவார். மௌனமாக இருப்பதே அவரது இயல்பு. இதை விளக்கி ஓஷோ (முன்னாளில் ஆசார்ய ரஜனீஷ்) ஹகுயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கியுள்ளார்.

hell-heaven

ஒரு முறை ஜப்பானிய மன்னன் ஹகுயினை ஒரு உபதேச உரை நிகழ்த்துவதற்காக அழைத்தான். ராணி, மன்னன், ராஜ குரு,மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசவையில் அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் குழுமினர். ஹகுயின் அங்கு வந்தார். ஒரு நிமிடம் நின்றார்.சபையிலிருந்தோரை சுற்றிப் பார்த்தார். பின்னர் சபா மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

மன்னன் மந்திரியிடம், “ இது என்ன? நாம் இவர் சொல்லப் போவதைக் கேட்பதற்காக வந்திருக்கிறோம். ஒன்றுமே பேசாமல் போகிறாரே!” என்றான்.

மந்திரி கூறினார்-””அரசே! நான் இதுவரை கேட்ட பிரசங்கங்களிலேயே இது தான் அற்புதமானது! நீங்கள் உபதேச உரை கேட்டீர்கள். அவர் அதைச் செய்து காண்பித்து விட்டார். அவர் மௌனமாக சில விநாடிகள் நின்றார். அவரே மௌனமாக ஆனார். ஒரே மௌனம்! உபதேசித்ததை விட்டு விட்டீர்கள். ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களே”

மௌனத்தை எப்படி விளக்க முடியும்! மௌனத்தினாலே தான் விளக்க முடியும்!
அரசன் புரிந்து கொண்டான். எதையும் ஹகுயின் வாழ்ந்து காட்டிப் புரிய வைப்பார்.

பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்ட ஹகுயின் 31ஆம் வயதில் ஷோயின்-ஜி மடாலயத்திற்குத் திரும்பி வந்தார். அங்கே தலைமை குருவாக ஆனார். முதல் குரு என்று பொருள் படும் தாய்-இசிஸா என்ற வார்த்தையால் அவர் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். ஹகுயின் என்ற அவரது பெயருக்கான அர்த்தம் ‘வெண்மையில் ஒளிக்கப்பட்டது’ என்பதாகும். 1768ஆம் ஆண்டுஜனவரி 18ஆம் தேதியன்று 83ஆம் வயதில் அவர் நிர்வாணம் அடைந்தார். பக்குவ நிலையுடன் ஞானம் அடைந்த 90 வாரிசுகளை அவர் உருவாக்கியது ஒன்றே அவர் எப்படிப்பட்ட மாபெரும் குருவாகத் திகழ்ந்தார் என்பதை உணர்த்தும்.

சின்ன உண்மை
ஹகுயின் தியானப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மிகவும் பிரபலமான அந்தப் பாடலில் நீங்கள் ‘முழுமை’ அடைந்து விட்டால் கடவுளின் அருள் கிடைக்கும்.கடவுள் அங்கு இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப் பாடியே ஜென் பிரிவினர் தியானத்தைச் செய்தல் மரபு.
-தொடரும்

8.ஆலயத்தை விட்டு வெளியே போ!

ivory buddha2

ஜென் பிரிவு பற்றி எஸ்.நாகராஜன் எழுதும் தொடரில் எட்டாவது பகுதி.

ச.நாகராஜன்

குரு-சிஷ்ய பரம்பரையில் சோகோ கடைசியாக இருந்தார். முதல் குரு இமாகிடோ கோஸென் (1816-1892) அடுத்தது ஷாகு சோயென் (1859-1919), அடுத்து டெட்சுவோ சோகாட்ஸு.(870-1954), அடுத்து கோடோ ஜுய்கன் (1879-1965), அடுத்து ஒடா செஸொ (1901-1966) அவருக்கு அடுத்தபடியாக கடைசியில் சோகோ.

இந்த வரிசையை இன்னும் தொடர்ந்து வரலாற்று ரீதியாக பார்த்துக் கொண்டே போனால் அது முதலாவதாக இருந்த சாக்யமுனி புத்தரில் முடியும்.சாக்யமுனி புத்தரின் போதனைகளின் பெயர் இங்கா. அது பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானது. இந்த இங்கா முத்திரையை குருவிடம் முறையாகப் பெற்றவர்களே உள்ளொளி பெற்றதற்கான அங்கீகாரத்தை குருவிடம் பெற்றவர்களாவர். ஜென் பிரிவில் ரின்டாய் உட்பிரிவில் இப்படிப்பட்ட அதிகாரபூர்வமான குருமார்களை ரோஷி என்று அழைப்பர்.

முதல்குருவாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இமாகிடோ கோஸென் பிரம்மாண்டமான குரு. இவரது சிஷ்யராக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஷாகு சோயென் தான் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு ஜென் புத்தமதப் பிரிவை அறிமுகப்படுத்திய பெரிய மாஸ்டர்.

ஒரு நாள் காலை மிஸ் ஒகோமோடோ ரோஷியிடம் வந்து அமர்ந்தார். “ரோஷி! குருவில் யார் பெரியவர் கோஸெனா அல்லது அவர் சிஷ்யர் ஷாகு சோயெனா?” என்று அவர் கேட்டார்.எப்போதுமே விஷயங்களை ஜோக் அடிக்காமல் தீவிரமாகப் பேசும் ரோஷி, “கோஸென் தான் பெரியவர்” என்று பதிலிறுத்தார். பிறகு மிஸ் ஒகோமோடோ,” ஷாகு சோயென் பெரியவரா அல்லது அவர் சிஷ்யர் சோகாட்ஸுவா?” என்று கேட்டார்.

”மாஸ்டர் சோயென் தான் பெரியவர்!” என்றார் ரோஷி.இதைக் கேட்ட மிஸ் ஒகோமோடோ,” நீங்கள் சொல்வதைப் பார்த்தால் குரு-சிஷ்ய பரம்பரையில் ஒவ்வொரு சிஷ்யரும் சற்று கீழான தரத்தைக் கொண்டிருப்பது போல இருக்கிறதே! அப்படியானால் இந்த பரம்பரை கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து வருவது போல இருக்கிறதே!” என்றார்.

“சரி,இப்போது சொல்லுங்கள், உங்கள் குரு சோகாட்ஸு பெரியவரா அல்லது நீங்களா? என்று மெதுவாகக் கேட்டார் மிஸ் ஒகோமோடோ. மின்னல் போலப் பளீரென்று,” இருவரில் நான் தான் பெரியவன்” என்றார் ரோஷி. மிஸ் ஒகோமோடோவுக்கு இந்த பதிலைக் கேட்டு ஒரே சந்தோஷம்! உடனே மிஸ் ஒகோமோடோ மெதுவாக,” ரோஷி! இன்னும் ஒரு கேள்வி. நீங்கள் பெரியவரா அல்லது உங்களின் சிஷ்யரான செஸோ பெரியவரா?” என்று கேட்டார்.

அருகிலிருந்து இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சோகோவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.வாய்விட்டு ஹா,ஹா என்று சிரித்தார். ரோஷியோ ஜென் உலகின் முடி சூடா மன்னராக பிரம்மாண்டமான நிலையில் குருவாக இருக்கிறார். ஆனால் செஸோவோ எந்த ஒரு அதிகார பதவியிலும் இல்லை. அவரைப் பெரிய மாஸ்டரான ரோஷியுடன் ஒப்பிடுவதா! சோகோவுக்கு சிரிப்பு தான் வந்தது. உண்மையில் உள்ளொளியின் அடிப்படையில் மனிதனைத் தரம் பிரிக்க வேண்டும் என்றே சோகோவுக்குத் தெரியவில்லை. சமூக அந்தஸ்தை வைத்தே மனிதனின் அந்தஸ்தை இனம் காண வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆகவே தான் அந்தச் சிரிப்பு!

ஆனால் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், ”அது இன்னும் தெரியவில்லை!” என்று பதில்சொன்னார் ரோஷி! சோகோவின் சிரிப்பு இதைக் கேட்டுச் சட்டென அடங்கியது.அவர் கண்களில் வெள்ளமென கண்ணீர் பொங்கியது.எப்படிப்பட்ட அற்புதமான குருவைத் தான் கொண்டிருக்கிறோம்!” “அவன் இன்னும் பல பேர் மத்தியில் பேசவே அருகதை அற்றவன்” என்று அவர் சொல்வதற்கு எத்தனை விநாடிகள் வேண்டும்!

அந்த அற்புத மனிதர் தன் சிஷ்யர்களின் மேம்பாட்டிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்னும் ஒன்று,ஐந்து அல்லது பத்து வருடங்களில் தன் சிஷ்யன் தன்னை வென்று பெரியவனாகி விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே தான், ”அது இன்னும் தெரியவில்லை” என்ற பதிலை அவர் அளித்தார்! அப்படிப்பட்ட பெரிய மகான் சோகோவுக்கு குருவாக வாய்த்திருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ivory buddha

பயிற்சிக் காலத்தில் ஒரு சமயம் சோகோ தப்பு ஒன்றைச் செய்து விட்டார். உடனே ரோஷி சம்பிரதாய வழக்கப்படி சோகோவை டைஷுயின் ஆலயத்திலிருந்து உடனடியாக வெளியே செல்லுமாறு “ஆலயத்தை விட்டு வெளியே போ” என்ற கட்டளையைப் பிறப்பித்தார். மனம் வருந்திய சோகோ சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட போதும் அவர் மனம் இரங்கவில்லை. கெஞ்சிக் கெஞ்சி முழு உடலையும் கீழே கிடத்தி சோகோ நமஸ்காரம் செய்து மன்னிப்புக் கேட்ட போதும், ‘முடியாது’, என்ற பதிலையே ரோஷி சொல்லிக் கொண்டிருந்தார்.

கடைசியில் தன் தலையை மட்டும் தூக்கி அழுது வீங்கி இருந்த கண்களுடன் ரோஷியைப் பார்த்தார் சோகோ!
அவரது தீவிரமான பார்வையைக் கண்ட சோகோவுக்கு தொண்டை அடைந்த்தது.

இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த குரலை எழுப்பி,” என்ன நடந்தாலும் சரி,நீங்கள் என்ன சொன்னாலும் சரி,எப்படி என்னை வெளியேற்ற நீங்கள் முயன்றாலும் சரி, நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.போகவே மாட்டேன்.போகவே மாட்டேன்”என்றார் சோகோ.
அப்போது ரோஷியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி அவர் கன்னம் வழியே வழிந்தது. அதைப் பார்த்த சோகோவின் மெய் சிலிர்த்தது. சோகோ எப்பொழுதுமே ரோஷியின் சிஷ்யர் தான்! அவருக்கும் தன் சிஷ்யன் எப்படிப்பட்டவன் என்பது புரிந்துவிட்டது.

சோகோவுக்கும் ரோஷிக்கும் இருந்த குரு-சிஷ்ய அன்புப் பிணைப்பு வலுவாக இருந்தது. ஜென் பிரிவில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இருக்கும் அன்புப் பிணைப்பின் இடையில் ஒரு சிறு மயிரிழை கூட நுழைய முடியாது. அப்படி ஒரு பிணைப்பு இருக்கும்!!
முந்நூறு பவுண்டு உள்ள இரண்டு மல்யுத்த வீர்ர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டி உருண்டு புரண்டு அலாக்காகத் தூக்கி கீழே போடும் போது தாங்கள் சண்டையிடும் மல்யுத்த மேடை நிச்சயம் உடைந்து போகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தானே அவர்கள் சண்டை போடுகிறார்கள் அந்த அடிப்படையான நம்பிக்கை ஜென் பயிற்சிக்கு அவசியம்!

ஜென் பிரிவில் “நான்” என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.இந்த நான் என்ற எண்ணம் லேசில் அழியாது.’வெளியே போ’ என்ற அச்சுறுத்தல், திட்டல் இவற்றிற்கெல்லாம் பயந்தால் ஜென் பயிற்சி பூர்த்தி பெறாது!

ஒரு வருட காலம் ரோஷியின் கீழ் பயிற்சி பெற்ற சோகோவுக்கு ஒரு நாள் அந்தப் பயிற்சி முடிவுக்கு வந்தது.
ஒரு நாள் ரோஷி சோகோவை அன்புடன் தன் அருகில் அழைத்தார்.

சின்ன உண்மை
இன்று ஜப்பானில் ஜென் மடாலயங்கள் சுமார் 72 உள்ளன! சாதாரண சிறிய ஜென் ஆலயங்கள் சுமார் இருபதினாயிரம் உள்ளன. ஆனால் மடாலயங்களில் ஜென் குருமார்களுக்கான பயிற்சியில் இருப்போர் ஆயிரத்தை என்றுமே தாண்டியதில்லை!

-தொடரும்