Picture: Postage Stamps issued by Hong Kong
ச.நாகராஜன்
கலைகளின் தலைநகரம் உஜ்ஜயினி
ஜோதிடம், வானவியல் மற்றும் கணிதம் ஆகிய கலைகளுக்கு தாயகமாகவும் தலைநகரகமாகவும் திகழ்ந்த உஜ்ஜயினிக்கு மேலும் புகழ் சேர்த்த ஒரு பெரிய ஜோதிடமேதை பாஸ்கராசார்யர். இவரது காலம் 1114 முதல் 1185 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரில் (விஜயபுரம் என்னும் ஊரில்) அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.இவரது தந்தையார் மஹேஸ்வரர் ஒரு பெரிய ஜோதிட மேதை. உஜ்ஜயினியில் இவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஜோதிடம் வானவியல் கணிதம் ஆகிய கலைகளுக்குத் தன்னை அர்ப்பணித்து பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளைக் கண்டு உலகினரை வியக்க வைத்தார்.
சித்தாந்த சிரோமணி என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. கோள அத்யாயம் மற்றும் க்ரஹகணிதம் ஆகிய இரு பாகங்களைக் கொண்டுள்ள இதில் பூமி சூரியனைச் சுற்றி வரும் காலத்தை 9 தசமஸ்தான சுத்தமாக, 365.258756484 என்று கண்டுபிடித்துள்ளது பிரமிக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு.
லீலாவதியின் கதை
இவர் எழுதிய லீலாவதி என்ற நூலைப் பற்றிய சோகமான நிகழ்வு ஒன்று உண்டு! இந்த நூலை பின்னால் 1587ம் ஆண்டில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்த பைஜி என்பவர் இந்தக் கதையை விரிவாக எழுதியுள்ளார்.
லீலாவதி பாஸ்கராசார்யரின் அன்புக்கு உகந்த புத்திரி.அவள் ஜாதகத்தை கணித்த பாஸ்கராசார்யர் திடுக்கிட்டார். அவளுக்கு ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தால் மட்டுமே அவளால் தீர்க்க சுமங்கலியாக வாழ்க்கை நடத்த முடியுமே தவிர அது தவறி விட்டால் அவள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பே இல்லை என்பதை அவர் ஜாதக மூலம் கண்டார்.
உரிய காலத்தில் திருமணத்தை நிச்சயித்த பாஸ்கராசார்யர் குறிப்பிட்ட முகூர்த்தம் தவறி விடக் கூடாதே என்ற எண்ணத்தில் ஒரு புதிய சாதனத்தை அமைத்தார்.ஒரு சிறிய கோப்பையில் துவாரம் ஒன்றைச் செய்து அதை ஒரு பெரிய பாத்திரத்தில் மிதக்க விட்டார்.சரியான முகூர்த்த நேரத்தில் அந்த கோப்பை பெரிய பாத்திர நீரில் மூழ்கி விடும். அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தி விடலாம் என்பது அவரது எண்ணம். எல்லாம் சரியான படி அமைக்கப்பட்டது.
ஆனால் திருமண நாளன்று (ஆறு வயதே ஆன) லீலாவதி அந்த கோப்பையில் என்ன இருக்கிறது என்று ஆவல் மீதூற பார்க்கக் குனிந்த போது அவள் அணிந்திருந்த முத்து மாலையில் இருந்த ஒரு சிறிய முத்து நழுவி அவளை அறியாமல் அந்த கோப்பையில் விழுந்தது. அது சரியாக கோப்பையிலிருந்த துவாரத்தை அடைத்து விட்டது. நேரம் சென்று கொண்டே இருந்ததைக் கவனித்த பாஸ்கராசார்யர் ஏன் கோப்பை மூழ்கவில்லை என்று ஆராயப் போனார். துவாரத்தை ஒரு சிறிய முத்து அடைத்திருந்ததையும் அதனால் நல்ல நேரம் கடந்து விட்டதையும் அறிந்து விசனித்தார். திருமணம் செய்து கொண்ட லீலாவதி சிறிது காலத்தில் கணவனை இழந்து விதவையானாள். அவளுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அவள் பெயரில் லீலாவதி என்ற புகழ் பெற்ற நூலை அவர் தனது 30வது வயதில் எழுதினார்!
லீலாவதி நூலின் புகழ்
லீலாவதி ஒரு அபூர்வமான நூல் இதில் 13 அத்தியாயங்களில் கணிதம் ஜியோமிதி சூத்திரங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி உள்ளன.டிபரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்னாமெட்ரி உள்ளிட்ட கணிதத் துறைகளில் அவரது கண்டுபிடிப்புகள் மேலை நாட்டினரை வியக்க வைக்கின்றன. லீலாவதியைப் படிப்பவர்களுக்கு சந்தோஷமும், உற்சாகமும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று பாஸ்கராசார்யரே கூறி இருப்பது உண்மை என்பதை இந்த நூலைக் கற்பவர்களுக்கு நன்கு புரியும். பொது மக்கள் லீலாவதியைப் பற்றி, “லீலாவதியை நன்கு கற்றவர்கள் ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கிறது என்று நிச்சயமாகக் கூறி விடுவர்” என்று கூறி அதைப் புகழ்ந்தனர்.
லீலாவதியைத் தவிர பீஜ கணிதம்,சித்தாந்த சிரோமணி, வசனபாஷ்யம்,கரணகுதூகலம்,ப்ரஹ்மதுல்யா ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். பாஸ்கராசார்யர் தனக்கு முன் வாழ்ந்த வானவியல் நிபுணரான பிரம்மகுப்தரின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தினார். இவரது மகனான லோக்சமுத்ரரும் ஒரு பிரபல ஜோதிடராகத் திகழ்ந்தார்.லோக்சமுத்ரரின் மகன் பாஸ்கராசார்யரின் நூல்களைக் கற்பிக்க 1207ம் ஆண்டில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார்.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக சஞ்சாரங்கள் மிக முக்கியமானவை. அவை குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்களைக் கூற முடியும். இந்த வகையில் கிரகங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் விதத்தைத் தன் நூல்களில் பாஸ்கராசார்யர் விளக்கியுள்ளார் என்பதே இவரது தனிச் சிறப்பு.
மயிலின் உச்சி எனத் திகழும் மாமேதை
இந்திய கோவில் ஒன்றில் உள்ள மத்தியகால கல்வெட்டு பாஸ்கராசார்யரைப் பற்றிக் கூறுவது அவரைப் பற்றிய சரியான கணிப்பாக அமைகிறது. அது இது தான்: ‘‘அறிஞர்களாலும் மேதைகளாலும் மதிக்கப்படும் அபூர்வ திறமைகள் கொண்ட ஒப்பற்ற பாஸ்கராசார்யருக்கு வெற்றி! புகழ் கொண்டு ஆன்மீகத்தில் சிகரம் ஏறிய அந்தக் கவிஞர் மயிலின் உச்சி போலத் திகழ்கிறார்! ‘’
**********************