
Post No. 9770
Date uploaded in London – – –24 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜோதிட மேதை ஸ்ரீ சூர்யநாராயண ராவ்!
ச.நாகராஜன்
பிரபல ஜோதிட மேதை ஸ்ரீ சூர்ய நாராயண ராவ் வேத ஜோதிடத்திற்கு ஒரு புது மஹிமையைத் தந்து அதை உயரத்தில் ஏற்றி வைத்தவர்.
ஸ்ரீகாகுளத்தில் 1856ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பகல் 12.10க்கு அவர் பிரந்தார். பிரபல ஜோதிட இதழான ‘தி அஸ்ட் ராலஜிகல் மாகஸைன்’ – ஐ நிறுவியவர் இவரே. 1895இல் இந்த இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ராவ் அவர்களின் உடல் நலக் குறைவு காரணமாக 1923இல் அந்த ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் இது வெளி வரவில்லை. ஆனால் இவரது பேரன் புகழ் பெற்ற பி.வி.ராமன் உதவிக்கு வந்தவுடன் இதுப் புதுப் பொலிவுடன் வெளி வர ஆரம்பித்தது. சூர்யநாராயண் ராவ் பங்களூர் சென்ட்ரல் காலேஜில் படித்துப் பட்டம் பெற்றார். பெல்லாரியில் ஒன்பது ஆண்டுகள் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். அப்போது அவருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
(இவர் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளில் இது பற்றிக் காணலாம்).
ஆங்கிலத்தில் சூர்யநாராயண ராவ் எழுதியுள்ள ஜோதிட நூல்கள் இன்றளவும் போற்றிப் படிக்கப்படுகின்றன. 1882இல் இவரது முதல் நூல் வெளி வந்தது. தொடர்ந்து வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகத்தை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்துள்ளார்.
‘The Autobiography of a Vedic Astrologer’ என்ற தலைப்பில் தன் சுய சரிதையை மிக அருமையாக பி.வி.ராமன் அவர்கள் எழுதியுள்ளார். அதில் தனது பாட்டனாரான ஸ்ரீ சூர்யநாராயண ராவ் பற்றி நிறைய விவரங்களைத் தந்துள்ளார். ஜோதிட சாஸ்திரத்தையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் அவரிடம் கற்றுத் தேர்ந்தார் பி.வி.ராமன்.
தனது சுயசரிதையில் 19ஆம் அத்தியாயத்தில் தனது பாட்டனாரின் இறுதி நாள் பற்றி மிக விவரமாக அவர் பதிவிட்டுள்ளார்.
1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி!
மிக அவசரமான செய்தி ஒன்று பி.வி.ராமன் அவர்களுக்கு வந்தது, உடனடியாக கிராமத்திற்கு வருமாறு! அவரது பாட்டனாரைப் பார்க்க உடனடியாக அவர் கிராமத்திற்கு விரைந்தார். தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த சூர்ய நாராயண ராவ் பேரனை அழைத்தார். சுமார் 3 மணி நேரம் அவருடன் அந்தரங்கமாகப் பேசினார். அது புத்தரின் உபதேசம் போல இருந்தது என்று பி.வி.ராமன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
“எந்த ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதே”.
“பெரியவரோ, சிறிய ஆளோ, அவரை மதிப்புடன் நடத்து.”
“முடிந்த போது மற்றவருக்கு உதவி செய். ஆனால் ஒரு போதும் எவருக்கும் தீங்கிழைக்காதே”.
“உனது தொழிலில் எந்த உயரத்தை நீ எட்டினாலும் கூட எப்போதும் அடக்கமாகவே இரு”.
“ஜாதகத்தை ஒரு போதும் திட்டவட்டமாக அர்த்தம் கொண்டு சொல்லாதே”.
“ஒருபோதும் மற்றவரிடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்காதே”.
“உனது சுய மரியாதையை எப்போதும் காப்பாற்றிக் கொள்”.
“பற்றற்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்”.
“உன்னை ஆத்திரமூட்டும் சந்தர்ப்பங்களில் பொறுமையாக இரு”.
“தனிப்பட்ட சந்திப்பிலோ அல்லது பொது மேடைகளிலோ யாரையும் குறைத்து எடை போடாதே”.
“கதை சொல்பவர்களுக்கு (வதந்தி அல்லது வம்புப் பிரியர்களுக்கு) காதைக் கொடுக்காதே”.
“உனது குறிக்கோளை உன் முன்னே வைத்துக் கொள், அதை அடைய முயற்சிகள் எடு”.
ஆனால் நீ செய்யும் கர்மாவானது நிஷ்காம்யமாக (பலனை எதிர்பார்க்காத ஒன்றாகவே) இருக்கட்டும்”.
“கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக”!
இந்த மொழிகள் தான் தன் பேரனுக்கு இறுதியாக சூர்யநாராயண ராவ் செய்த உபதேச மொழிகள்.
பாட்டனாரைச் சந்தித்து விட்டு பங்களூர் திரும்பிய ராமன் தனது மனைவி ராஜேஸ்வரியிடம் நடந்த விஷயத்தைக் கூறினார். உடனே அவர், “பெரியவர் ‘கிளம்பத்’ தயாராகி விட்டார் போல இருக்கிறது. உடனே கிராமத்திற்குச் செல்வோம்” என்று கூறினார்.
1937, மார்ச் 12ஆம் தேதி கிராமத்திலிருந்து பெரியவர் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகச் செய்தி வந்தது. நல்ல ஒரு டாக்டரையும் கூடவே கூட்டிக் கொண்டு ராமன் தம்பதியினர் கிராமத்திற்கு விரைந்தனர். டாக்டர் பெரியவரைப் பரிசோதனை செய்து விட்டு உடனடியாக பெங்களூருக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்று அறிவுரை பகர்ந்தார். இதைக் கேட்ட சூர்ய நாராயண் ராவ் கூறினார்:” இன்று அமாவாசை. இது பற்றி நாளைக்கு யோசிப்போம்”
கங்கை ஜலத்தைக் கொண்டு வரச் சொல்லி அதை அருந்தினார் அவர். ‘தலைவலி தாங்க முடியவில்லை’ என்ற அவர் ஓய்வற்றுக் காணப்பட்டார். சரியாக பகல் 1.10க்கு தனது ஆவியை அவர் துறந்தார்.
இப்படியாக ஒரு மகோன்னத ஜோதிட மேதையின் வாழ்வு முடிந்தது.
1937 ஏப்ரல்- ஜூன் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் இதழில்’ ஜோதிட சூரியன் அஸ்தமித்தது” (“The Astrological Sun has set”) என்று தலையங்கம் எழுதினார் ராமன்.
பாட்டனாரைத் தொடர்ந்து அவர் காட்டிய வழியில் அதே மேதைத் தன்மையுடன் தனது பணியைத் தொடர்ந்தார் பி.வி.ராமன். உலகப் புகழ் பெற்று உச்சத்திற்கு ஏறினார்.
வாழ்க வேத ஜோதிடம்! வாழ்க ஜோதிட மேதைகள்!!
***
Index
சூரிய நாராயண் ராவ்,
பி.வி.ராமன்
இறுதி உபதேசம்
மறைவு
அஸ்ட்ராலஜிகல் மாகஸைன்
ஆதாரம் : The Autobiography of a Vedic Astrologer

tags – ஜோதிட மேதை, சூரிய நாராயண் ராவ்,