
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8985
Date uploaded in London – – –1 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
தர்க்கம் பெரிதா, ஞானம் பெரிதா?
ச.நாகராஜன்
அந்த இளைஞன் மெத்தப் படித்தவன். ஊரே அவனை ஜீனியஸ் என்றும் மேதாவி என்றும் கொண்டாடுகிறது.
அவன் ஒரு நாள் தன் குருவிடம் சென்றான். “குருஜி! நான் வேதங்களைப் படிக்க விரும்புகிறேன்” என்றான்.
“உனக்கு சம்ஸ்க்ருதம் தெரியுமா?” என்று கேட்டார் குருஜி.
இளைஞன் : “எனக்குத் தெரியாது.”
குருஜி :“சரி, அது போகட்டும், இந்திய தத்துவமாவது நீ படித்திருக்கிறாயா?”
உரையாடல் தொடர்ந்தது.
“இல்லை. தத்துவம் எதையும் நான் படிக்கவில்லை. ஆனால் அதற்கும் மேலாக ஹார்வர்டில் தர்க்கத்தை அது தான் லாஜிக் பற்றி படித்து டாக்டர் பட்டம் பெற்றேன். இப்போது கொஞ்சம் வேதமும் படிக்கலாமே என்று உங்களிடம் வந்தேன்.”
“வேதம் படிக்க நீ தயாராக இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. மிக ஆழ்ந்த ஞான அறிவைக் கொண்டது அது. இருந்தாலும் உன் ஆசையை நான் பெரிதும் மெச்சுகிறேன். நீ படித்த தர்க்கம் – அது தான் ஹார்வர்டில் பெரிய பட்டம் வாங்கி இருக்கிறாயே – அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நீ தர்க்கத்தில், எனது சோதனையில் தேறி விட்டால் உடனே வேதத்தை ஆரம்பிக்கலாம், சரியா?”
“பூ! இவ்வளவு தானா! லாஜிக்கில் நான் தான் மாஸ்டர். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள். ஹார்வர்ட் ஆன்ஸர் தயார்!”
குருஜி இரண்டு விரல்களைக் காட்டினார்.

“இதோ பார்! இரண்டு பேர்கள்! இவர்கள் இருவரும் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?”
ஹார்வர்டு மாஸ்டர் டிகிரிக்கு ஒரே சிரிப்பாக வந்தது. இது ஒரு கேள்வியா?
குருவைப் பார்த்தான், ஏளனம் தொனிக்க, “ இது லாஜிக் டெஸ்டுக்குத் தகுதியான கேள்வி தானா, சொல்லுங்கள் குருஜி!” என்றான்.
குருஜி சொன்னார்: “அது கிடக்கட்டும், பதிலைச் சொல்லேன், மாஸ்டர்!”
இளைஞன்: “எவன் முகம் கரி படிந்திருக்கிறதோ அவன் தான் முதலில் முகத்தைக் கழுவுவான்.”
குருஜி : “தப்பு! சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவனே முதலில் முகத்தைக் கழுவுவான். ஏனெனில் கரி பூசிய முகத்தோடு இருப்பவன் சுத்தமான முகத்தைக் கொண்டிருப்பவனைப் பார்த்து தானும் சுத்தமாக இருப்பதாக நினைத்துக் கொள்வான். ஆகவே அவன் முகம் கழுவ மாட்டான். ஆனால் சுத்தமான முகத்தை உடையவனோ கரி பூசிய முகம் கொண்டிருப்பவனைப் பார்த்து தன் முகமும் இப்படி கோரமாக இருக்கும் என்று நினைத்து முதலில் முகம் கழுவப் போவான்!”
இளைஞனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “சரி இன்னொரு கேள்வி கேளுங்கள், குருஜி! இந்த முறை சரியாக பதிலைச் சொல்கிறேன்”
“சரி, இதோ எனது கேள்வி! இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?”
“அது தான், ஏற்கனவே பதில் இருக்கிறதே! யார் முகம் சுத்தமாக இருக்கிறதோ அவன் தான் முதலில் முகம் கழுவச் செல்வான்!”
“தப்பு! இருவருமே முதலில் முகம் கழுவச் செல்வர். சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவனை கரி பிடித்த முகம் கொண்டவன் பார்த்து தனது முகம் சுத்தம் என்று நினைப்பான். கரி பிடித்த முகத்தைக் கொண்டவனைப் பார்த்து சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவன் தன் முகமும் கரி பிடித்திருக்கிறது என்று நினைப்பான். ஆகவே சுத்தமாக இருக்கும் முகத்தைக் கொண்டவன் தன் முகத்தைக் கழுவச் செல்வான். அவனைப் பார்த்த கரிபிடித்த முகக்காரனும் தன் முகத்தைக் கழுவச் செல்வான். இருவருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்வர்!”
“இப்படி நான் நினைக்கவில்லையே! தர்க்கத்தில் இப்படி ஒரு தப்பை நான் செய்வேன் என்று நினைக்கவே இல்லை, குருஜி, தயவு செய்து இன்னும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு என்னைச் சோதியுங்கள்!”
“சரி, இதோ எனது கேள்வி! இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?”
“இரண்டு பேருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்வர்.”
“தப்பு! இருவரில் யாருமே தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ள மாட்டார்கள்! கரி பிடித்த முகம் கொண்டவன் சுத்தமான முகம் கொண்டவனைப் பார்த்து தானும் அதே போல் இருப்பதாக நினைப்பதால் அவன் முகம் கழுவச் செல்ல மாட்டான். சுத்தமான முகம் கொண்டவன் கரி பிடித்த முகக் காரனைப் பார்த்து அவனே தன் முகத்தைக் கழுவச் செல்லாத போது தான் ஏன் முகம் கழுவச் செல்ல வேண்டும் என்று நினைத்து சும்மா இருப்பான். ஆகவே இருவருமே சும்மா தான் இருப்பார்கள்!”
ஹார்வர்ட் மாஸ்டர் வெறுத்துப் போனான். தன் படிப்பு என்ன ஒரு படிப்பு என்று அவனுக்குத் தோன்றியது; “குருஜி! கடைசி சான்ஸ்! தயவு செய்து கடைசி கடைசியாக ஒரே ஒரு முறை ஒரு கேள்வியைக் கேளுங்களேன்!”
“சரி, இதோ எனது கேள்வி! இரண்டு பேர்கள் ஒரு புகைக்கூண்டிலிருந்ந்து இறங்கி வந்தனர்.ஒருவன் முகம் கரி படிந்திருந்தது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருந்தது. இந்த இருவரில் யார் முதலில் முகத்தைக் கழுவிக் கொள்வான்?”
இளைஞன் நன்கு முழித்துக் கொண்டான். பெருமையாக, “இருவருமே முகம் கழுவிக் கொள்ள மாட்டார்கள்” என்றான்.
குருஜி சிரித்தார் :”தப்பு! உனது தர்க்க அறிவு ஏன் வேதம் படிக்கப் போதாது என்று கூறுகிறேன் என்பதை எண்ணிப் பார்! ஒரே புகைக் கூண்டிலிருந்து ஒரே சமயத்தில் இறங்கும் இருவரில் ஒருவன் முகத்தில் மட்டும் கரி படிந்திருக்கும், இன்னொருவன் முகம் சுத்தமாக இருக்கும் என்பதை நீ நம்புகிறாயா? அது சாத்தியம் தானா?! இந்தக் கேள்வியே சுத்த மடத்தனமான கேள்வி! அதைச் சுட்டிக் காட்டுவதற்கு பதில் விடை வேறு கூறிக் கொண்டிருக்கிறாய்! இப்படி உனது வாழ்க்கை முழுவதும் முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நீ வேதம் படிக்கத் தகுதியானவன் தானா! உண்மையில் எண்ணிப் பார்த்துப் பதிலைச் சொல்லு! நீ தகுதியானவன் தானா?!
இளைஞன் விக்கித்துப் போனான். குருஜி சொன்னார்: “அதனால் தான் தர்க்கத்தை விட ஞானம் பெரிது. அதைக் கொண்டிருப்பவனே வேதம் படிக்கத் தகுதியானவன் என்று ஆகிறது, இல்லையா?!”
ஆங்கில மூலம் FROM TRUTH Vol 88 No 10 Dated 11-9-20
நன்றி : ட்ரூத் வார இதழ்
வருடச் சந்தா ரூ 100 மட்டுமே! வாரம் தோறும் சந்தாதாரரைத் தேடி தவறாமல் வரும் ட்ரூத்! தொடர்பு மின்னஞ்சல் : sdps_us@yahoo.com
editor : drsnsen@gmail.com
tags–தர்க்கம், பெரிதா, ஞானம்,
***
You must be logged in to post a comment.