மலர் மருத்துவம் (Post No.9061)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9061

Date uploaded in London – – 22 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 20-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று  நமக்கு முன் இருக்கும் கேள்வி மலர் மருத்துவம் பற்றிய உண்மைகளைச் சொல்லுங்கள் என்பது தான்.

மலர் மருத்துவம் என்பது அற்புதமான ஒரு துறை.

மலர்கள் உலகின் அனைத்து நாகரிக மக்களும் போற்றியவை. மலர்களின் கவர்ச்சியில் மயங்காதவர்களே கிடையாது.

ஹிந்து வாழ்க்கை முறையில் பல்வேறு மலர்களையும் பூஜைக்காகவும், அழகு அலங்காரத்திற்காகவும், நறுமண தைலத்திற்காகவும், ஆயுர்வேத மருத்துவப் பயன்பாட்டிற்காகவும், பல்வேறு வைபவங்களில் பயன்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவது வழக்கமாயிற்று. நேரம் கருதி, ஒரே ஒரு எடுத்துக் காட்டை மட்டும் இங்கு சொல்லலாம்.

வெற்றி வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றவன் வாகையைச் சூடினான் என்று அர்த்தம்.

இந்த மலர்களைப் பற்றிய அரிய உண்மைகளையும் இரகசியங்களையும் அரவிந்த அன்னை அவர்கள் எடுத்துரைக்கின்றார். பெரும் ஆத்மீக சக்தியை அளிக்க வல்ல பல மலர்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மலர் மருத்துவம் பற்றி கேள்வி இருப்பதால் அதைப் பார்ப்போம்.

டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach, M.B. B.S., M.R.C.S., L.R.C.P., D.P.M.,  (CAMB) என்பவர் ஒரு சிறந்த மருத்துவர். 1886ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்த அவர் 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி மறைந்தார். லண்டனில் மருத்துவராக இருந்த அவர் தனது அருமையான மருத்துவத் தொழிலை விட்டு விட்டு மலர்கள் மூலமாக நோய்களைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கினார். இதற்காக தாவரங்கள், மரங்கள், எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் சென்று தன் தீவிர ஆய்வை மேற்கொண்டார். ஆய்வு முடிவில் மனித நோய்களைத் தீர்க்கும் 38 அருமருந்து மலர்களை வரிசைப்படுத்தி உலகிற்கு மலர் மருத்துவத்தை அறிமுகப்படுத்தினார். அதைத் தான் வாழ்நாள் முழுவதும் பலருக்கும் தந்து பயனடையச் செய்தார்.

இதில் ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம், இன்றைய நவீன மருத்துவத்தில் மனோ வியாதிக்கான மருந்துகளைக் கையாளுவதில் மிகவும் கஷ்டம் உள்ளது. ஏனெனில் மனம் ஒரு மர்மம்.

ஆனால்  மலர் மருந்துகளோ மனம் என்னும் மாயத்தை இனம் கண்டு அதன் பல்வேறு அம்சங்களையும், பரிமாணங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து இன்ன விதமான வியாதிக்கு இதுவே மருந்து என்று சுட்டிக் காட்டுகிறது.

பாச் மலர் மருந்துகளின் பட்டியலில் எந்த மலர் எதற்காக எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தெளிவான வரையறை, குறிப்பு உள்ளது.

அக்ரிமனி, ஆஸ்பென், பீச், செண்டாரை, செராட்டோ, செஸ்ட்நட் ப்ளம், செஸ்ட்நட்பட், சிக்கரி, க்ளெமடிஸ், க்ராப் ஆப்பிள்,  எல்ம். ஜென்ஷன், கார்ஸ், ஹீதர், ஹால்லி,  ஹனிசக்கிள், ஹார்ன்பீம், இம்பேஷன்ஸ், லார்ச், மிமுலஸ், மஸ்டர்ட், ஓக், ஆலிவ், பைன், ரெட் செஸ்ட்நட், ராக் ரோஸ், ராக் வாட்டர், செலெராந்தஸ்,  ஸ்டார் ஆஃப் பெத்லஹேம், ஸ்வீட் செஸ்ட்நட், வெர்வெய்ன், வைன், வால்நட், ஒய்ட் செஸ்ட்நட், வைல்ட் ஓட், வைல்ட் ரோஸ், வில்லோ ஆகிய இந்த 38 மலர் மருந்துகளே அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துகின்றன.

அதிகமான பயமா, ரெட் செஸ்ட்நட் சாப்பிட வேண்டும்; வேலை செய்து செய்து உடலும் மனமும் களைத்து விட்டனவா, ஆலிவ் எடுத்துக் கொள்ளலாம். குற்ற உணர்ச்சி இருப்பவர்கள் பைன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே டென்ஷன் என்றால் வெர்வெய்ன் சாப்பிடலாம். இப்படி ஒவ்வொரு மனநிலைக்கும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மலர்  மருந்து உண்டு. இதைத் தேர்ந்த மலர் மருத்துவரை அணுகி தங்கள் நிலையைச் சொன்னால் அவர் தகுந்த பரிந்துரையைச் செய்வார். ஒருவர் பேசுகின்ற வார்த்தைகளை வைத்து அவரது உண்மை நிலையை அறிவது தான் ஒரு சிறந்த மலர் மருத்துவரின் அடையாளமாகும்.

இந்த 38 மலர் மருத்துவத்தின் மூலமாக ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு வந்த பல்வேறு விதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மலர் மருந்துகளின் விலை நம்பமுடியாத அளவு மிகவும் குறைவு. இதை யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இதன் இன்னொரு சிறப்பு இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இதை உட்கொள்வதும் மிக எளிது. சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு துளிகளாகவோ தரப்படும் இவற்றை உட்கொண்டு சிறிது நீரை அருந்தினால் போதும்.

மலர் மருந்துகள் உலகிற்குத் தந்த   அற்புதமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி! (Rescue Remedy)

இந்த மருந்து அவசரகால உதவி மருந்து. திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி போன்றவற்றால் ஏற்படும் மோசமான பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தான் இந்த ரெஸ்க்யூ ரெமடி!

38 மலர் மருந்துகளில் ஐந்தின் கலவை இது.

ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlahem) For Shock

ராக் ரோஸ் (Rock Rose) For terror and panic

இம்பேஷன்ஸ் (Impatiens) For mental stress and tension

செர்ரி ப்ளம் (Cherry Plum) For desperation

க்ளமேடிஸ் (Clematis) For the bemused, faraway, out-of-the body feeling which often precedes fainting or loss of consciousness

ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படுவது ரெஸ்க்யூ ரெமடி.

இதை எப்படிச் செய்வது?

மேற்கண்ட ஐந்து மருந்துகள் உள்ள பாட்டில்களிலிருந்து இரண்டு இரண்டு துளிகளை எடுத்துச் சேர்த்துக் கொண்டு அத்துடன் ஒரு அவுன்ஸ் – அதாவது 30 cc –  ஆல்கஹாலைச் சேர்க்க வேண்டும். இது தான் ரெஸ்க்யூ ரெமடி.

பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டு அவசரகாலங்களில் உபயோகப்படுத்தலாம்.

டாக்டர் பாச்  இந்த அவசரகால மருந்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பார். இன்று உலகில் ஏராளமானோர் இதைக் கைவசம் வைத்திருக்கின்றனர்.

ஏனெனில் விபத்து எப்போது எந்த ரூபத்தில் எங்கு வரும் என்பது யாருக்குத் தெரியும்?

அதிர்ச்சியில் உறைந்த யாருக்கேனும் இதைக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டம்ளர் நீரில் மூன்று துளி ரெஸ்க்யூ ரெமடியைக் கலக்க வேண்டும். இதைப் பாதிக்கப்பட்டவர் சிறிது குடிக்க வேண்டும். அவர் கலக்கம் நீங்கி அமைதியை அடைய அடைய ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு வாய் இந்த நீரைக் குடிக்க வேண்டும், அவ்வளவு தான்.

இதை நீடித்து ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டீ ஸ்பூன் நீரில் மூன்று துளிகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை தண்ணீர் அருகில் கிடைக்கவில்லை எனில், இந்த ரெமடியின் துளிகளை மட்டும் பாதிக்கப்பட்டவரின் உதடுகள், நாக்கு, பல் ஈறுகளில் தடவி விட்டால் போதும்.

இதை வெளிக் காயங்களுக்கு மருந்தாகக் கூடப் பயன்படுத்தலாம். காயம் பட்ட இடத்தில் ஆயின்மெண்டாக (Ointment) – பூச்சு மருந்தாகப் – பூசலாம். ஆறு துளிகளை 16 அவுன்ஸ் நீரில் கரைத்தால் ஆயின்மெண்ட் ரெடி!

தீராத துக்கமா, திடீரென்று வரும் துயரச் செய்தியா அதிலிருந்து மீள இதைப் பயன்படுத்தலாம்.

1930இல் முதன்முதலாக இந்த மருந்தை டாக்டர் பாச் உபயோகப்படுத்தினார்.

அப்போது  அவர் ராக் ரோஸ், க்ளமேடிஸ் மற்றும் இம்பேஷன்ஸ் ஆகிய மூன்றை மட்டுமே கலந்து இதை உருவாக்கிப் பயன்படுத்தினார். மற்ற இரண்டை அவர் அப்போது கண்டுபிடித்திருக்கவில்லை.

பின்னால் இது ஐந்து மலர் மருந்துகளின் கூட்டுச் சேர்க்கை கலவையானது.

ரெமடி பற்றிய சுவையான சம்பவம் ஒன்று இது:-

திடீர் புயலில் படகு ஒன்று சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் படகில் சிக்கிக் கொண்ட இருவர் ஒருவாறாக மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்டவருள் ஒரு இளைஞன் நினைவிழந்திருந்தான். அவன் உடம்பு நீலம் பாய்ச்சியிருந்தது. அவனது உடைகளோவெனில் கடல் உப்பினால் விரைப்பாகி இருந்தது.

டாக்டர் பாச் வேகமாக அவர்களிடம் ஓடினார். உடனடியாக ரெஸ்க்யூ ரெமடியை அவர்கள் உதடுகளில் தடவி விட்டார். தொடர்ந்து இதை அவர் பயன்படுத்தினார்.

அந்த இளைஞனை பீச்சிலிருந்து அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றிற்குக் கொண்டு சென்றனர். ஹோட்டலை அடையுமுன்னரே அவனுக்கு சுயநினைவு திரும்பி விட்டது. ஹோட்டலை அடைந்த போது அவன் ஒரு சிகரட் இருக்கிறதா என்று கேட்டான்!

இது போல உலகெங்கும் ஆயிரக்கணக்கான வியப்பூட்டும் கேஸ்கள் இன்றளவும் இந்த ரெஸ்க்யூ ரெமடியினால் குணப்படுத்தப்பட்டுள்ளன; பிரமிக்க வைக்கும் சம்பவங்களை பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் சொல்லி வருகின்றனர்.

மலர் மருந்துகள் மிக மிக எளிமையானவை.

“ஆகவே இந்த சிகிச்சைமுறை பற்றி தவறாக அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம். இன்னும் ஆய்வுகள் அதிகமாக ஆக, படைப்பின் எளிமையை இன்னும் அதிகமாக நீங்கள் உணர்வீர்கள்” என்று டாக்டர் பாச் கூறி இருப்பது எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்று.

அவரது கூற்று இது: “Let not the simplicity of this method deter you from its use, for you will find the further your researches advance, the greater you will realize the simplicity of the Creation.”

மலர் மருத்துவம் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டோமெனில் நமது வீட்டிலும் ஒரு மலர் மருந்து – கிட் (Kit)  – பெட்டி தேவையாக இருக்கும் என்பது உண்மை!

நன்றி, வணக்கம்.

tags –மலர் மருத்துவம்,  மலர் மருந்து, டாக்டர் எட்வர்ட் பாச்