திருவாசக வெளியீடு: டாக்டர் போப் தரும் அதிசயத் தகவல்! (Post No.3399)

Written by London swaminathan

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 8-43 AM

 

Post No.3399

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு டாக்டர் ஜி.யூ. போப். வெளிநாட்டினராகப் பிறந்தும், கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு வாழ்நாளை அர்ப்பணித்தும் கூட திருவாசகத்தாலும் தமிழாலும் ஈர்க்கப்பட்டு அதில் கரைந்தவர் அவர். மாக்ஸ்முல்லர் எப்படி சம்ஸ்கிருதக் கடலில் சங்கமித்தாரோ அதே போல தமிழ்க் கடலில் சங்கமித்த்வர் ரெவரெண்ட் ஜி.யூ. போப் (Rev G U Pope). இருவரும் வேறு உள்நோக்கத்தோடு இந்துமதக் கடல் பார்க்க வந்தனர். அதிலுள்ள முத்துக்களையும் கொஞ்சம் எடுப்போமே என்று கடலில் நுழைந்தவர்கள் கரைந்து விட்டனர். ராம கிருஷ்ண பரம ஹம்சர் சொன்ன உப்பு பொம்மை கதைதான் நினைவுக்கு வருகிறது. கடலின் ஆழத்தைக் காணப் புறப்பட்ட உப்பு பொம்மை, சில அடி ஆழத்துக்குச் செல்வதற்குள் கரைந்து விட்டது. யாரே இந்து மதக் கடலின் ஆழத்தை அறியவல்லார்?

 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு. போப், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர். அவர் 1900 ஆம் ஆண்டில் திருவாசகப் புத்தகத்ததை எப்படி வெளியிட்டார் என்ற அதிசயச் செய்தியை அவரே அப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார். இதோ அந்த முன்னுரை:–

“இன்று என்னுடைய எண்பதாவது பிறந்த தினம். நான் எழுதி வைத்த குறிப்புகளைப் பார்க்கப் போனபோது நான் 1837 ஆம் ஆண்டில் தமிழ் கற்கத் துவங்கினேன் என்பது தெரிந்தது. நீண்டகாலத்துக்கு தமிழ் அன்னையின் பக்தனாக இருந்தேன்; அது முடிவுக்கு வருகிறது என்றே தோன்றுகிறது. என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான இலக்கியப் படைப்பை சமர்ப்பணம் செய்து இப்பணியை முடிக்கும்போது மிகவும் உணர்ச்சி வசமாகி விட்டேன்.

 

பல ஆண்டுகளுக்கு முன், நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அப்போது இப்படி ஒரு புத்தகம் வெளியிடும் திட்டம் என் மனதில் இல்லை. ஒரு நாள் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன், என் கல்லூரித் தலைவருடன் (பாலிலோல் கல்லூரி மாஸ்டர்) நடந்து கொண்டிருந்தேன். எக்களுடைய சம்பாஷனை திடீரென்று தமிழ் வரலாறு, இலக்கியம், தத்துவம் பற்றித் திரும்பியது. நீண்ட உரையாடலின் நடுவே ஒரு இடைவெளி நேரிட்டது. என்னுடைய மாஸ்டர் எப்போதுமே வேகமாகப் பேசக்கூடியவர். திடீரென்று ‘அதை நீ அச்சிட்டே ஆகவேண்டும்” என்றார்.

 

நான் 80 வயதுக்காரன் என்ன பதில் சொல்லுவானோ அதையே அவரிடம் சொன்னேன்: மாஸ்டர் நான் என்ன சாகாவரம் வாங்கி வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா? இதை வெளியிடத் துவங்கினால் அதை முடிக்க நீண்ட காலம் ஆகும். இப்போது அவர் முகத்தை பார்த்தேன்; அவர் என்னை நோக்கித் திரும்பினார். அவருடைய வெண்தாடி மீதும் அன்பே உருவான முகத்தின் மீதும் நிலவொளி பட்டொளி வீசிப் பரவியது. அவர் அன்போடு என் தோளின் மீது கைகளைப் போட்டார் — ஒரு நீண்ட பணியை எடுத்துக்கொண்டுவிட்டால் அது முடியும் வரை நீ மரணம் அடைய மாட்டாய். இது நீண்டகாலம் வாழவுள்ள ஒரு வழி! அது நிறைவடையும் வரைக்கும் நீ வாழ்வாய்” என்று சொல்லி முடித்தார்.

இதை அவர் சொன்னபோது எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் சொன்ன சொற்கள் மட்டும் என் மனதில் அசரீரி போல எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நான் களைபுற்றபோதெல்லாம் அந்த ஆரூடச் சொற்கள் எனக்கு உத்வேகம் ஊட்டின. அவர் இப் பூவுலகில் இருந்து மறைந்துவிட்டார். ஆனால் அவர் சொன்ன காரியம் நிறைவேறிவிட்டது.

 

அந்த அன்பான ,சிறந்த, பொறுமை மிக்க பெஞ்சமின் ஜோவெட் அவர்களை இன்று நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இது எல்லாம் அவருக்கே சமர்ப்பணம். என்னுடைய நன்றியையும் மரியாதையையும் தெரிவித்து வணங்குகிறேன்.

 

குற்றம் குறையுள்ள இந்தப் புத்தகத்துக்கு என்னுடைய, அவருடைய, தலைவன் (GOD) ஆசி கூறட்டும்”.

 

பாலிலொல் கல்லூரி

ஏப்ரல் 24, 1900                                                   ஜி யூ போப்