Written by London swaminathan
Date: 24 JULY 2018
Time uploaded in London – 18-46 (British Summer Time)
Post No. 5254
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஆங்கில நாட்டை ஆண்ட அரசர்கள் பலர்; ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பது போல மன்னர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!
நாலாவது ஹென்றி (1367- 1413) ஒரு உத்தரவு போட்டார். ‘’இது என்ன கோரம்! பெண்கள் கன்னா பின்னா என்று நகை அணிந்து வருகிறார்கள்; பொது நிகழ்ச்சிகளில் இப்படி அவர்கள் அணிவது நன்றாக இல்லையே’’ என்று போட்டார் ஒரு சட்டம்.
‘’இனிமேல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் ஆடம்பரமாக நகை அணிந்து வரக்கூடாது’’ என்று போட்டார் ஒரு சட்டம்.
பெண்களோடு உடன் பிறந்தது நகைகள் அதைப் பிரிக்க முடியுமா? அவர்கள் மன்னன் உத்தரவை மதிக்கவில்லை; நன்றாக மிதித்தார்கள்.
மன்னனுக்கோ அதிக கோபம்; நான் போட்ட உத்தரவை மதிக்காத குடி மக்களை மடக்குவேன்; புது சட்டம் போட்டு அடக்குவேன் என்றார்.
போட்டார் ஒரு சட்ட திருத்தம்!
நான் போட்ட சட்டத்துக்கு முக்கிய திருத்தம்– விபசாரிகளும் பிக்பாக்கெட்டுகளும் , நகை அணியக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவார்கள்.
(அதாவது வேசி மகள்களும் பிக்பாக்கெட்டுகளும் தாராளமாக நகை அணியலாம்)
அவ்வளவுதான் எல்லா பெண்களும் நகைப் பெட்டிக்குள் பகட்டான அணிகளை முடக்கி வைத்தார்கள்!
அட்டஹாசமான மன்னன் நாலாம் ஹென்றி!
XXXX
என்னப்பனே! பொன்னப்பனே!
அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு தான்தோன்றித் தத்துவராயர். உலகே தன்னைச் சுற்றி நடக்கிறது என்பவர். அவரது மகனே, அப்பனை நன்கு அளந்து வைத்திருந்தான். அழகாகச் சொன்னான்:-
“என் தந்தை கல்யாணத்துக்குப் போனால் அவர்தான் மணமகன் என்று நினைத்து அத்தனை கௌரவங்களையும் எதிர் பார்ப்பார். அது மட்டுமல்ல. அவர் மரண ஊர்வலக் கூட்டங்களுக்குச் சென்றால், சவப் பெட்டீக்குள் இருக்கும் சவமாகத் தன்னை கருதி அத்தனை மரியாதைகளையும் எதிர்பார்ப்பார்!”
XXX
டிஸ்ரேலி ஐடியா!
டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்; அவரிடம் ஒருவர் வந்து அனத்தினார்; “ஐயா எனக்கும் ஒரு பட்டம் கொடுங்கள்; டிஸ்ரேலிக்குத் தெரியும் அந்த ஆள் அவர் எதிர் பார்க்கும் பட்டத்துக்கு அருகதை அற்றவர்” என்று.
“இந்தோ பாருங்கள்; எவ்வளவுதான் கெஞ்சினாலும் உங்களுக்கு நான் பட்டம் கொடுக்க முடியாது. ஒரு ஐடியா (idea) சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் பிரதமர் என்னைக் கூப்பிட்டு உங்களுக்குப் பட்டம் தரப்போகிறேன் என்று சொன்னார். உங்கள் பட்டம் எதையும் ஏற்க மாட்டேன் என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்; என்று தம்பட்டம் அடியுங்கள்.
நானும் ‘கம்’மென்று இருந்து விடுகிறேன். நான் கொடுக்கும் பட்டத்தைவிட அது இன்னும் புகழ் கூட்டும்- என்றார்.
வந்தவருக்கு பரம திருப்தி: வெறும் சர்க்கரை கேட்கப் போன இடத்தில் கோதுமை அல்வா கிடைத்த திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.
xxx
சாவதற்கு முன் மரண அறிவித்தல்!
பி.டி பர்னம் (P T Barnum) என்பவர் புகழ்பெற்ற அரசியல்வாதி; அமெரிக்க வர்த்தகர்; ஒரு சர்கஸ் கம்பெனி துவங்கியவர். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார். தற்பெருமை அதிகம். அவர் சாகக் கிடந்தார். இவரது தற்பெருமை பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் பி டி பர்னமின் காரியதரிசியை அணுகி, “ஐயா, உங்கள் தலைவரைப் புகழந்து நாலு பத்தி எழுதியுள்ளோம் அவர் இறந்தவுடன் காலமானார் (மரண அறிவித்தல்) பத்தியில் போட எழுதியுள்ளோம். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை வெளியிட்டால் அவரும் அதைப் படித்துவிட்டுச் சாகலாமே” என்றனர்.
காரியதரிசி சொன்னார்; தயவு செய்து மரண அறிவித்தலை அவர் சாவதற்கு முன் வெளியிடுங்கள்; அவர் அதைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றார்.
பத்திரிக்கையாளர்களும் அதை அவர் இறப்பதற்கு முன்னர் நாலு பத்தி வெளியிட்டனர். பி டி. பர்னமுக்கு ஒரே சந்தோஷம்; அடடா. என்ன அருமை; நான் எவ்வளவு பெரியவன் என்று மகிழ்ச்சியுடன் செத்தார்.
–subham–
You must be logged in to post a comment.