டேய் நில்லடா! சொல்லடா! கம்பனின் ஏகவசனம்! (Post No.5106)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  15-53  (British Summer Time)

 

Post No. 5106

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

டேய் நில்லடா! சொல்லடா! கம்பனின் ஏகவசனம்! (Post No.5106)

 

வாடா, போடா, ஏண்டா– என்பதெல்லாம் ஏக வசனப் பேச்சு; மரியாதைக் குறைவான பேச்சு. ஆயினும் கம்பன் அதை அழகாகக் கையாளுகிறான். இதன் மூலம் இராவணாதியர்களின் தரமும் ராம லஷ்மாணாதியர்களின் உயர்வும் தெள்ளிதின் விளங்கும்.

 

கம்பராமாயமண, யுத்த காண்டம், நாகபாசப் படலத்தில் இந்திரஜித் சொல்கிறான் அனுமனைப் பார்த்து:-

“அடேய் நில்லடா! சிறிது நேரம் நில்லடா! உன்னுடன் சண்டை போடத்தான் வந்துள்ளேன்; வெறும் பேச்சோடு போய்விடாதே. உனது வீரத்தைப் புகழ்ந்து கொண்டு இங்கு வந்திருக்கிறாயே; நீ உயிருடன் விளையாடுகிறாய். நீ எறியும் கற்களும் மரங்களும் என் வலிமையைக் கடந்து போகுமாடா! அடேய், சொல்லடா என்று ;போரிலே புகழ் வாய்ந்த இந்திரஜித் புகன்றான். உடனே அனுமன் மறு மொழி பகர்ந்தான்.

 

இந்திரஜித் சொன்னது:-

 

நில் அடா சிறிது உனை

நினைந்து வந்தேன் முனைக்கு நான்

வில் எடாமை நினது ஆண்மை பேசி உயி

ரோடு நின்று விளையாடினாய்

கல் அடா நெடு மரங்களோ வரு

கருத்தினேன் வலி கடப்பவோ

சொல் அடா என இயம்பினான்  இகல்

அரக்கன் ஐயன் இவை சொல்லினான்

 

அனுமன் பதில்

“டேய் மாப்ளே! நான் சொல்றதைக் கேளு!” என்று அனுமன் உரைத்தான்

 

“ஏய்! நாங்கள் எல்லாரும் கல், மரப் படை என்று நினைத்தயோ! எங்களிடம் வில் வீரர்களும் உண்டு; வில்லும் எடுப்போம், கல்லும் எடுப்போம். அதை இன்றோ நாளையோ காணப்போகிறாய். இந்திரன் முதலியோர் உன்னிடம் தோற்றுப் போய் புல்லைக் கவ்வியிருக்கலாம். இதுவரை காணாத புது வகைப்  போர்களை காணப் போகிறாய்

 

(இந்தப் பாடலுக்கு உரை எழுதியோர் போரில் தோற்றவர்கள் புல்லைக் கவ்வுதல் மரபு என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளனர். அதாவது பழங்காலத்தில் போரில் தோற்ற பின் அவர்கள் குனிந்து புல்லைக் கவ்வினால் பின்னர் யாரும் தாக்க மாட்டார்கள் போலும்!)

 

அனுமன் சொன்னது:

வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில

வீரர் இங்கும் உளர், மெல்லியோய்!

கல் எடுக்க உரியானும் நின்றனன்

அது இன்று நாளையிடை காணலாம்

எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு

இடைந்து உயிர்கொடு ஏகுவார்

புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில

போர் எடுத்து எதிர் புகுந்துளோம்

இத்தோடு அனுமன் சில கேள்விகளையும் கேட்கிறான்:

நீ என்னோடு போர் புரிகிறாயா ? அல்லது

இலக்குவனுடன் போர் புரிகிறாயா?

அல்லது உன் தலையை அறுத்து எறியப் போகின்ற ராமனுடன் போர் புரிகிறாயா?

 

இப்படி அழகாக அனுமன் பேசுகிறான்.

பாடல் தோறும் புதுப் புது செய்தியைக் கொடுப்பதாலும் போர்க் க ளத்தின் பல முனைகளுக்கு கம்பன் காமெராவைத் திருப்பி ராமாயணத் திரைப்படத்ததை நன்கு காட்டுவதாலும் சுவை அதிகரிக்கிறது

–சுபம்–