
Post No. 8398
Date uploaded in London – – –25 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நினைத்தது நடக்கவில்லை, ஆனால் விபத்தில் சிக்காமல் உயிரைக் காத்தது!
ச.நாகராஜன்

மிக பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது. இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனிலிருந்து நியூயார்க் நோக்கிய நெடும் பயணம்; உல்லாசப் பயணம் அது!
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14-15 தேதிகளில் அது கடலில் மூழ்கியது. 1500 பயணிகள் கடலில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வந்து விட்டன.
இது எதனால் மூழ்கியது என்ற நீண்ட நெடும் சர்ச்சையும் ஆராய்ச்சியும் இன்றளவும் தொடர்கிறது.
அந்தக் கப்பல் விபத்தில் சிக்காமல் பிழைத்தவரின் ஒரு உண்மை சம்பவம் இது:
ஸ்காட்லாந்தில் க்ளார்க் குடும்பத்திற்கு ஒரே ஒரு கனவு தான்! க்ளார்க்கும் க்ளார்க்கின் மனைவியும் தங்கள் ஒன்பது குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று செட்டில் ஆகி விட வேண்டும் என்று நினைத்தனர், அவர்களின் ஒரே கனவு அது தான்! கப்பல் பயணத்திற்காக ஆகும் செலவிற்காக வெகு சிரமப்பட்டு பணத்தை அவர்கள் சேமிக்கலாயினர். வருடங்கள் பல ஓடின. தேவையான பணமும் ஒரு வழியாகச் சேர்ந்தது. பாஸ்போர்ட் ரெடி. அமெரிக்கா செல்லும் கப்பலில் அனைவருக்கும் டிக்கட் ரிஸர்வும் செய்தாகி விட்டது.
குடும்பத்தினருக்கு ஒரே உற்சாகம்; பரபரப்பு. எப்போது கப்பலில் ஏறப் போகிறோம் என்ற தவிதவிப்புடன் அவர்கள் இருந்தனர். புதிய நாடு, புதிய இடம், புதிய வாழ்க்கை … நிறைய கனவுகள்!

கப்பல் கிளம்ப இன்னும் ஏழே தினங்கள் மட்டுமே இருந்தன. துரதிர்ஷ்டவசமாக க்ளார்க்கின் ஒரு மகனை நாய் ஒன்று கடித்து விட்டது. டாக்டர் நாய்க்கடிக்குத் தையல் போட்டார்; அத்துடன் வீட்டு வாசலில் ஒரு மஞ்சள் அட்டையையும் தொங்க விட்டார். ‘இது நாய் கடித்த பையன் உள்ள வீடு, ஜாக்கிரதை” என்று அர்த்தம் அதற்கு!
யாருக்கும் ரேபிஸ் நோய் வந்து விடக்கூடாது என்று குடும்பத்தினருக்கு 14 நாள் தனிமை அடைப்பை – க்வாரண்டைனை அவர் அறிவித்தார்.
குடும்பத்தின் கனவு பொடிப்பொடியாக நொறுங்கிப் போனது. எவ்வளவு வருடங்கள் காத்திருந்தனர், ஒரு கணத்தில் அனைத்தும் கலைந்து போனது. க்ளார்க் மனமுடைந்து போனார். தன் இளைய குழந்தையின் மீது அடங்காத கோபம் கொண்டார்.
கப்பல் கிளம்பும் நாளன்று அது கிளம்புவதைப் பார்க்க க்ளார்க் துறைமுகம் சென்றார். என்ன ஒரு ஆர்ப்பாட்டம், கப்பல் கிளம்பியது. அங்கேயே அவர் கண்ணீர் சிந்தினார். தன் மகனைச் சபித்தார்; இறைவனிடம் முறையிட்டு நொந்து போனார்.
ஐந்து நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நியூஸ். அமெரிக்காவிற்குப் பயணப்பட்ட பிரம்மாண்டமான அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது என்று வந்தது பரபரப்புச் செய்தி!
ஆயிரத்திற்கும் மேலானோர் கடலில் மூழ்கி மாண்டனர் என்ற செய்தி பரவி நாடே பரபரத்தது!
அந்தக் கப்பலின் பெயர் டைட்டானிக்! அதில் தான் அமெரிக்கா செல்ல க்ளார்க் தன் குடும்பத்தினர் அனைவருக்கும் ரிஸர்வ் செய்திருந்தார்.
சின்னப்பையனுக்கு நாய் கடித்ததால் அவர் ஸ்காட்லாந்திலேயே இருக்க வேண்டி வந்தது.
நியூஸைக் கேள்விப்பட்ட க்ளார்க் ஓடோடி வந்து தன் குழந்தையை அள்ளி அணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் ஆரம்பித்தது போல குடும்பத்தினர் அனைவருமே மகிழ்ந்தனர்.
விதியா, மதியா எது எப்போதும் வெல்லும்?
‘மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ விதி சில சமயம் விபத்தையும் கூட வேண்டத்தக்கதாக்கி விடுகிறது!


tags — நினைத்தது ,நடக்கவில்லை, டைட்டானிக்