டொண்டொண்டொடென்னும் பறை!

குரல்

வாழ்வியல் அங்கம்

டொண்டொண்டொடென்னும் பறை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 12 September  2015

Post No. 2149

Time uploaded in London: –   காலை 6-37

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

வழக்கம் போல திருக்குறளைப் புரட்டினேன். பார்வைக்கு வந்த குறள்:

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ் வுலகு (குறள் 336)

நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்லும் பெருமையைக் கொண்டது இவ்வுலகு.

என்ன இவர், உலகிற்குப் பெருமையாக இதைத்தானா சொல்வது? ஒரு ஐஸ்வர்யா ராயை அல்லது க்ளியோபாட்ரா அல்லது சித்தூர் ராணி பத்மினி போன்ற பிரமாதமான அழகியைப் பெற்றது இவ்வுலகு என்று சொல்லக் கூடாதா, அல்லது நிலவில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற ‘மனிதனைக்’ கொண்டது இவ்வுலகு என்றாவது சொல்லக் கூடாதா, காலத்தால் முற்பட்டவர் தான், புரிகிறது! இது போல எதையாவது சொல்லி இருக்கலாமில்லையா,

நாலயிர2

சரி, போகட்டும், பார்வை மேலே போக கண்ணில் பட்ட அடுத்த குறளைப் பார்த்தேன்.

நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்   (குறள் 334)
நாள் என்பது கால அளவையைப் போலக் காட்டி உங்கள் உயிரின் வாழ்நாளை அறுக்கும் வாள்!

என்ன ஒரு நெகடிவ் திங்கிங் (Negative thinking) எத்தனை கோர்ஸ்களிலும் செமினார்களிலும் இளைஞர்களையும் இளைஞிகளையும் சந்தித்து, “இன்றைய நாள் பொன்னாள். இது ஒரு வாய்ப்பு! நேர மேலாண்மை – அது தான் டைம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொண்டு சரியாக அதைப் பயன்படுத்துங்கள் என்று வாய் கிழியப் பேசி இருக்கிறேன்.

இவரோ நாள் என்பதை உயிரைப் போக்கும் வாள் என்று நினை என்கிறார்.

குறளை மூடினேன். பட்டினத்தாரை எடுத்து புரட்டினேன். வந்த பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்

கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்

எட்டி அடி வைப்பரோ? இறைவா, கச்சி ஏகம்பனே!

இதென்னடா சங்கடம் என்று இன்னொரு பக்கத்தைப் புரட்டினால் அங்கு கண்ட பாடல்:

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்

கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

அட, வார்த்தைகள் பிரமாதம் தான்!

காலத் தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால் …

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாகப் போகும் பிணங்கள் கத்தும் கணக்கு, என்ன கணக்கு!!!!

பின்னால் டி.வியில் வேறு கண்ணதாசன் பாடல் கனமாக, “வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்று ஒலித்தது.

divyasprabandam1

ஒன்றும் சரிப்படவில்லை?!

பஜகோவிந்தம் நூலில் எடுத்த பாடல்:  புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் (மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு என்ற அழகிய தமிழ் மொழி பெயர்ப்பு வேறு) என்று வர அதையும் மூடினேன்.

இன்று நேரம் சரியில்லை நமக்கு.

நாலடியாரையாவது ஒரு புரட்டு புரட்டி வைப்போம் என்று அதை எடுத்தால்!!

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்றலறப்

பிணம் கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் –

மனம் கொண்டீண்டு  உண்டுண்டுன் டென்னும் உணர்வினால் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை  (நாலடியார் பாடல் 25)

தூக்கி வாரிப் போட்டது. எங்கோ ஒரு ஓசை கேட்பது போல இருந்தது.

நாலடியார்

டொண் . டொண்.. டொண்..

உண்டுண்டுன்டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண் டொண் டொண்.. பறைச் சத்தம்!

எங்கேயாவது பறை அடிக்கப்படுகிறதா? இல்லை, இல்லை!

‘மனப்பிரமை தான்!

பறையும் பாடையும் போன நவீன காலம் இது. பாம் பாம் என்று ஹார்ன் அடிக்க ஆம்புலன்ஸே அமரர் ஊர்தி ஆகிச் செல்ல, ஐந்து நிமிடத்தில் எலக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் சில நொடிகளில் உடலே பிடி சாம்பலாகும் ‘ஒளிமயமான’ காலம்!

பாட்டிகளே பாடையிலே போக என்ற வசவை வாபஸ் வாங்கி, பல்லாயிரம் வாட்ஸில் சாம்பலாகிப் போக என்று மாடர்னாகச் சொல்லும் காலம் அல்லவா இது!

என்ன செய்வது, என்று நெஞ்சம் கொஞ்சம் அஞ்சியது!

எல்லா புத்தகங்களையும் மூட்டை கட்டி மூடினேன். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொப்பென்று விழுந்தது.

விழுந்த பக்கத்தில் இருந்த பெரியாழ்வாரின் பாடல் இது:-

துப்புடையாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே

கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்த கருணையாளன். எய்ப்பு வந்து பேச முடியாமல் இருக்கும் போது அப்போது உன்னை நினைக்க மாட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் – கொஞ்சம் பார்த்து செய்யப்பா!

ஆழ்வாரின் அற்புதப் பாடல் மின்னலென உள்ளத்தில் பளிச்சிட்டது. மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பளிச்சென எரிந்தது!

AZHWARGROUP

நெகடிவ் திங்கிங் இல்லையடா, முட்டாளே, திருவள்ளுவருக்கு! அப்போதைக்கு இப்போதே சொல்லி வை என்று சொல்ல அல்லவா அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எல்லாப் பெரியோரும் சொல்ல வந்தது ஒரே ஒரு கருத்தைத் தான்:-

கையும் காலும் கண்ணும் செவியும், மெய்யும் செயல்பாட்டுடன் இருக்கும் போதே நினைக்க வேண்டிய ஒன்றை நினை!!

டொண் டொண் டொண். அப்போதைக்கு இப்போதே! செத்த பிணத்தை இனி சாம் பிணங்கள், காலத் தச்சன் வெட்டி விட்ட மரம் போல!

அட, ஒரு மாதிரியாக நெஞ்சைப் பிசைகிறதே. குரல் எழும்பவில்லை.

அ.. ர..ங்க மாநகருள் ளா ஆ ஆ ஆ …..?!

*****************