திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2 (Post No.3266)

1935-valluvar

Written by S. NAGARAJAN

Date: 19 October 2016

Time uploaded in London: 6-31 AM

Post No.3266

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் வள்ளுவர், பிறப்பு ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி அறுப்பது என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறார். மறுபிறப்புத் தத்துவம் பற்றிய இறுதிக் கட்டுரை இது. முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு பின்னர் தொடரவும்.

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

ச.நாகராஜன்

 

punul-valluvar

திருக்குறளில் திருவள்ளுவர் ஹிந்துக்களின் மறுபிறப்புத் தத்துவத்தை மட்டும் சுட்டிக் காட்டி நின்று விடவில்லை. பிறவிச் சுழல் ஏன் ஏற்படுகிறது, அதை எவ்வாறு போக்குவது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறார்.

ஒரு பெரிய மஹரிஷியின் போதனைகளாக அவை அமைந்துள்ளன.

 

 

தத்துவஞானிகள் பெரிய விளக்கவுரைகளில் பல நாட்கள் பேசுவதையெல்லாம் அவர் சூத்திர வடிவில் தந்து விடுகிறார்.

ஆகவே தான் உபநிடத, வேதத்திற்கு சரி நிகராக தமிழ் மறை போற்றப்பட்டு வருகிறது.

 

 

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி                   விழிப்பது போலும் பிறப்பு       (குறள் 339)

 

உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!

 

பிறப்பு என்பது துன்பம்.  எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது  தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.

 

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை  மற்றது

வேண்டாமை வேண்ட வரும்       (குறள் 362)

 

பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?

அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!

 

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                                 இறைவனடி சேராதார்        (குறள் 10)

 

 

இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர  முடியும்.

இல்லையேல் இல்லை தான்!

 

 

பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார்.

முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:

 

 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை    (குறள் 345)

 

 valluvar-iyengar

பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?

 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்    (குறள் 349)

 

 

ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

 

பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:

 

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்                     மருளான் ஆம் மாணாப் பிறப்பு     (குறள் 351) 

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால்  தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

 

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு    (குறள் 357)

 

உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.

 

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு   (குறள் 358)

 

பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.

 

பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது?

இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு என்னும் வித்து   (குறள் 361)

எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்

 valluvar-gold

முத்தான ஒன்பது குறள்கள்!

பிறப்பிற்குக் காரணம் அவா.

அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு.

 

அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி!

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது.

இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும்.

 

பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான்.

பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும்.

 

இந்த உலகில் நீ  ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு!

ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!

 

சிறந்த தத்துவஞானியான ம்ஹரிஷி வள்ளுவரின் பிறப்பறுக்கும் உபநிடத மொழிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

 

இரகசியத்திற்கெல்லாம் மேலான இரகசியத்தை தெளிவாக எளிய பாக்களில் தருகிறார் வள்ளுவர்; அதை அமிழ்தினும் இனிய தமிழில் பெறுகிறோம் நாம்!

 

எவ்வளவு பாக்கியசாலிகள்!

 

ஹிந்துப் பண்பாட்டின் ஆணிவேரை இதை விட வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சூத்திர வடிவில் தர முடியும்.

வாழ்க வள்ளுவர், வாழ்க தமிழ்!

****************