மந்திரமும் யந்திரமும் யாருக்குப் பலன் தரும்? தமிழர் கண்டுபிடிப்பு! (Post No.3840)

Written by London swaminathan

Date: 22 APRIL 2017

Time uploaded in London:- 14-59

Post No. 3840

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

ஏழு விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதில் பலன் கிடைக்கும்; நம்பிக்கை இல்லாமற் செய்தால் பலன் கிடைக்காது. இது இந்துக்கள் கண்டுபிடித்த உண்மை. இப்பொழுது விஞ்ஞானிகளும் இதை மெதுவாக — ஜாக்கிரதையாக- ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு எனது இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கையில் இந்துக்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மையே என்று எழுதியிருப்பார்கள்!

 

மந்திரமுந்  தேவு மருந்துங் குருவருளு ந்

தந்திரமும் ஞானந்  தருமுறையும் — யந்திரமும்

மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியிற்

பொய்யெனிற் பொய்யாகிப் போம்

 

–நீதிவெண்பா

பொருள்:

மேதினியில்=உலகத்தில்

மந்திரமும் = மறை (வேத) மொழிகளும்

தேவும் = கடவுளும்

மருந்தும் = மருந்துகளும்

குரு அருளும் = ஆசார்யனின் அருளும்

தந்திரமும் = தந்திரம் பற்றிக்கூறும் நூல்களும்

ஞானம் தரும் முறையும் = வழிபாட்டு முறைகளும்

யந்திரமும் = மந்திர எழுத்துக்கள் எழுதிய தகடுகளும்

 

(ஆக இவ்வேழும்)

மெய்யெனில் = மெய்யென்று நம்பினால்

மெய்யாய் விளங்கும் = உண்மையாகவே பலன் கொடுக்கும்

பொய்யெனில் = பொய்யென்று நினைத்தால்

பொய்யாகிப் போம் = பலிக்காது

 

மந்திரம் என்றாலேயே “நினைத்தவரைப் பாதுகாப்பது” என்று பொருள். அப்படிப்பட்ட ஒன்றை நம்பிக்கை இல்லாமல் சொல்லவே முடியாது.

 

நம்பிக்கை இருந்தால் பலன் கிடைக்கும் என்பதை நான்கு வேதங்களும் சொல்லுகின்றன:-

 

நம்பினார் கெடுவத்தில்லை இதுநான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகம் வரம் பெறலாம்

-என்பது மஹா கவி பாரதியின் வாக்கு.

 

சம்யாத்மா விநஸ்யதி (சந்தேகப் படுபவன் அழிவான்) என்பது கண்ண பிரானின் வாக்கு (பகவத் கீதை 4-40)

 

வள்ளுவனும் சொல்லுவான்:-

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து (குறள் 353)

 

பொருள்:-

முதலி சந்தேகத்துடன் ஆரம்பித்து, பின்னர் ஐயம் தெளிந்து உண்மைப் பொருளை அறிந்தார்க்கு பூமியைவிட, தேவலோகம் மிக அருகில் வந்துவிடும்.

விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது!

 

சோதனை செய்யப் போகும் புதிய, மருந்துகளின் உண்மைப் பலனைக் கண்டுபிடிக்க நோயாளிகள் பல பேருக்கு போலி மருந்துகளைக் (Placebo)  கொடுப்பார்கள் இன்னும் பலருக்கு உண்மை மருந்துகளைக் கொடுப்பார்கள்; சோதனைக்குட்படும் நோயாளிகள் மட்டும் இதில் பங்கு பெறுவார்கள்; டாக்டர்களுக்கோ நோயாளிகளுக்கோ யார் போலி மருந்தை , யார் உண்மை மருந்தைச் சாப்பிட்டனரெ ன்று தெரியாதவாறு பெயர் இல்லாமல் நம்பர்கள் எழுதி ரகசியமாக இந்த சோதனையை நடத்துவர்.

 

இதில் சில நேரங்களில் போலி மருந்து சாப்பிட்டோர், உண்மை மருந்து சாப்பிட்டவர்களைவிட விரைவில் குணமடைந்தனர். இதற்கு அவர்களின் (Placebo Effect) நம்பிக்கையே காரணம்.

placebo effect

noun

  1. a beneficial effect produced by a placebo drug or treatment, which cannot be attributed to the properties of the placebo itself, and must therefore be due to the patient’s belief in that treatment.

 

புதிய இயற்பியல் துறையான பார்டிகிள் பிஸிக்ஸ், குவாண்டம் பிஸிக்ஸ் (Particle Physics, Quantum Physics)  துறையில் கூட ஒருவர் கவனிப்பதால் சப் அடாமிக் பார்டிகிள்ஸ் (Sb Atomic Particles) பாதிக்கப்படுகின்றன என்று கண்டுள்ளனர். ஆக இந்தத் துறை வளர வளர இந்துமத உண்மைகள் மேலும் வலுப்படும்.

 

அறிவியலில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் சேர்த்தால் தண்ணீர் உருவாகும். இது எல்லோருக்கும் பொது. ஆனால் ஆன்மீகத்தில் அப்படியல்ல. எவ்வளவு நம்பிக்கையுடன், மனம் மொழி மெய் ஆகிய மூன்று வழிகளில் — எவ்வளவு உண்மையைக் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு அது பலன் தரும். இதை நாலே வரிகளில் விளக்குகிறது நீதி வெண்பா.

சுபம்–