ஔவையாரை மிரட்டிய பேய் !

ghost4

By London Swaminathan; Post No. 751 dated 19th December 2013.

தமிழ் உலகம் அறிந்த மூதாட்டி ஔவை. சங்க காலம் முதல் 16, 17 ஆம் நூற்றாண்டு வரை பல ஔவையார்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தது அவர்களின் மொழி நடையிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். பேயால் மிரட்டப்பட்ட ஔவைப் பாட்டி சமீப காலத்தில் வாழ்ந்த புலவர் என்பது அவரது பாடல்களில் தெரிகிறது. ஒருவேளை அவர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பிற்காலப் புலவர்கள் ஔவையாரின் பெயரில் எழுதியிருந்தாலும் வியப்பதற்கில்லை.

எது எவ்வாறாகிலும் ‘நெருப்பு இல்லாமல் புகையாது’, ஏதோ ஒரு ஔவையார் பேயைக் கண்டதால்தான் இந்தக் கதை இன்றுவரை நீடிக்கிறது. மேலும் ஔவை என்று சொன்னவுடன் தமிழ் மொழிப்பற்றும், தெய்வ பக்தியும் பளிச்சென மின்னுவதையும் காண்கிறோம். ஏற்கனவே சிந்து சமவெளியில் சில முத்திரைகளில் பேய் இருப்பதையும், நீலி என்ற பெண்பேய் 72 தமிழர்களைக் கொன்றதையும், விவேகானந்தர், பேய்கள் பற்றி சொன்னதையும் தனித் தனியே எழுதிவிட்டேன். இதே பிளாக்—கில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இதோ மற்றும் ஒரு சுவையான உண்மைக் கதை:

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குப் பிறந்த பிள்ளையோ மஹா மூடன். எவ்வளவோ வாத்தியார்கள் வந்தும் அவனுக்கு அரிச்சுவடி கூட கற்பிக்க முடியவில்லை ஆனால் உடல்வாகில் ஆண் அழகன். மனம் உடைந்த ராஜா, இவனிடம் அரசாட்சி போய்விடக்கூடாது என்று கருதி அவனை நாடு கடத்தினார்.

பக்கத்து நாட்டுக்குப் போன ராஜ குமாரன், தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த நாட்டு இளவரசி ‘தமிழறியும் பெருமாள் ஏலவார்குழலி’ உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்தபோது இந்த இளவரசன்- ஆண் அழகனைக் கண்டு காதல் வசப்பட்டாள். ஒரு ஓலையில் காதல் கடிதம் எழுதி அதை அவனிடம் சேர்ப்பிக்க தோழியை அனுப்பினாள். கடிதம் மூலம் இரவில் ஊரின் வடக்குப் புற சத்திரத்துக்கு வரும்படி அழைத்தாள்.

ghost-3

எழுதறிவில்லாத அந்த இளவரசன் ரோட்டில் பிச்சை எடுதுக் கொண்டிருந்த குஷ்டரோஹி ஒருவனிடம் ஓலையைக் காண்பித்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷம். சரியான ஏமாளி என்பதை உணர்ந்து, அந்தக் கடித வாசகத்தை மாற்றிச் சொன்னான். அந்த இளவரசன் ஒரு குற்றவாளி என்று ராஜா கருதுவதால் அவன் உயிர்பிழைக்க உடனே தலைநகரை விட்டு வேறிடத்துக்குப் போகவேண்டும் என்று கடித ஓலையில் இருப்பதாகப் பொய் சொன்னான்.

இளவரசன் ஓலையை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குஷ்டரோஹி அன்று இரவில் சத்திரத்துக்குச் சென்று இருட்டில் காத்திருந்தான். ராஜகுமாரி வந்தவுடன் அவளுடன் காதல் மொழி பேசிக் கட்டித் தழுவி இரவைக் கழித்தான். பொழுது புலர்ந்தது. உண்மையை அறிந்த ராஜகுமாரி மனம் உடைந்து அங்கேயே தற்கொலை செய்துகொண்டாள்.

இதற்குள் ராஜகுமாரன், வேறு ஒருவனிடம் ஓலையைக் காண்பிக்க, அவன உண்மையைக் கூறினான். இளவரசன் ஓடோடி சத்திரத்துக்கு வந்தான். ராஜகுமாரி சடலத்தைக் கண்டு அவனும் தற்கொலை செய்துகொண்டான். இருவரும் இளமையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதால் பேயாகி சத்திரத்தில் அலைந்தார்கள். வருவோர் போவோருக்கு எல்லாம் தொல்லையும் கொடுத்தார்கள்.

ஒருநாள் நமது தமிழ் மூதாட்டி ஔவையாரும் அந்தப் பக்கம் வந்து சத்திரத்தில் இரவில் ஓய்வெடுக்கப் போனார். அதைப் பார்த்த பொது மக்கள் அங்கே அலையும் பேய்களின் சேட்டைகளை எடுத்துரைத்தனர். அவரோ ‘என்னை ஒரு பேயும் ஒன்றும் செய்யமுடியாது’ என்று துணிச்சலாக பாயை விரித்துப் படுத்தார்.

முதல் ஜாம முடிவில் ஒரு பெண் பேய் அலறிக்கொண்டு வந்தது. ஔவையாரை ‘எற்று எற்று’ என்று சொல்லிக்கொண்டு எற்ற வந்தது. ஔவையார் ஒரு வெண்பாப் பாடலைப் பாடியவுடன் அது ஓட்டம் பிடித்தது.
Ghosts-spirits2

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப்—பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை என்பது முதல் பாட்டின் பொருள்.

மீண்டும் இரண்டாம் ஜாம முடிவில் இதே போல நடந்தது. ஔவையார் மீண்டும் ஒரு வெண்பா ஆயுதத்தைப் பிரயோகித்தார். பெண் பேய் ஒட்டம் பிடித்தது.

கருங்குளவி சூளுரைத்து ஈச்சங்கனி போல்
வருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே
இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று

விஷக் குளவி வசிக்கும் ஈச்ச மரம் யார்க்கும் உதவாதது போல, வருந்தியவர்களுக்கு தானம் செய்யாதவன் வைத்திருக்கும் பொருள், இறுதியில் சுற்றத்தார்க்குப் போய்ச் சேரும். அத்தகைய கருமிகளை எட்டி உதை என்பது இரண்டாம் பாட்டின் பொருள்.

மூன்றாம் ஜாம முடிவிலும் இதே கதை. மேலும் ஒரு வெண்பா குண்டு!! பேய் ஓட்டம்!!

வானம் உளதால் மழையுளதால் மண்ணூலகில்
தானம் உளதால் தயை உளதால்—ஆனபொழுது
எய்த்தோம் இளைத்தோம் என்றே ஏமாந்திருப்பாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

வானமும் தானமும், மழையும் இவ்வுலகில் உண்டு. இதனை எண்ணி சோம்பித் திரிவாரை எத்தி உதை என்பது மூன்றாம் பாட்டின் பொருள்.

நான்காம் ஜாம முடிவிலும் மேலும் ஒரு வெண்பாவை வீசவே பேய் அவர் காலில் விழுந்து விமோசனம் வேண்டவே, அடுத்த ஜன்மத்தில் நீ புலவனாகப் போவாய் என்று வாழ்த்தினார்.

எண்ணாயிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையே போல் – பெண்ணாவாள்
பொற்றொடி மாதர் புணர்முலை மேல் சேராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

எட்டாயிரம் ஆண்டுகள் நீரில் கிடந்தாலும் ஈரப்பசையே ஏறாத நெட்டிமரம் போல சிலர் உள்ளனர். மாதர் இன்பம் என்பதையே அனுபவியாத அத்தகைய மரக்கட்டை போன்றோரை போய் எத்தி உதை என்று சொல்லவே, பேய் ஔவையார் காலில் விழுந்தது.
ghost 1

பேய்கள் எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
2.சிந்து சமவெளியில் பேய் முத்திரை
3.வள்ளுவன் சொன்ன பேய்க்கதை
4.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

எனது பிளாக்—கில் ஆங்கிலத்திலும் இக்கட்டுரைகள் கிடைக்கும்.
தொடர்பு முகவரி swami_48@yahoo.com