பூமியில் புதைந்துள்ள தங்கமும் வைரமும் தருக : புலவன் வேண்டுகோள் (Post 10,624)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,624

Date uploaded in London – –    3 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 14

3000 ஆண்டுகளுக்கு முன்னர் வேத காலப் புலவன் ஒருவன் பூமியைக் குறித்து பாடிய அதர்வண  வேத ‘பூமி சூக்த’ துதியில் 43 பாடல்களைக் கண்டோம். 44 முதல் உள்ள பாடல்களில் காணும் சுவையான செய்திகள் இதோ:

பொருள் 44

எந்த பூமியானது பல ரஹசிய இடங்களில் செல்வத்தை மறைத்து வைத்திருக்கிறதோ அந்த பூமா தேவியானவள் தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் பிற செல்வங்களையும் எனக்கு அளிக்கட்டும். தயாள குணமுள்ள அவள் அன்புடனும் கருணையுடனும் எங்களுக்குச் செல்வத்தை அளிப்பாள் ஆகுக.-44

இந்தப் பாடல், பூமியின் சுரங்க வளத்தை ( Mineral wealth) வேத கால இந்துக்கள் நன்றாக அறிந்து இருந்ததைக் காட்டுகிறது. இதற்கு முந்தைய ரிக் வேத துதிகளிலேயே தங்க இரத்தின நகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். உலகில் பழங்கால நாகரீகங்களில் எகிப்திலும் இந்தியாவிலும் மட்டுமே நகைகளைக் (Jewellery)  காண முடிகிறது . அதிலும் குறிப்பாக உடல் முழுதும் ‘முடி முதல் அடி’ Head to foot Jewels வரையுள்ள நகைகளின் படங்களும் வருணனைகளும் நம்மிடம் மட்டுமே உள்ளன. துருக்கி முதலிய இடங்களில் நகைகளுடன் பெண்கள் இருந்தால், அவர்கள் இந்திய பெண்களாகவே உள்ளனர் . பூமாதேவி தங்கத்தையும் வைரத்தையும் வாரி வழங்குவதால் அவளை தயாள குணம் மிக்கவளே என்று புலவர் புகழ்கிறார்.

நிதிம் பிப்ரதீ பஹுதா குஹா வசும் மணிம் ஹிரண்யம் ப்ருதிவீ ததாது மே

வஸூனி நோ வஸுதா ராஸமாநா தேவி ததாது – 44

XXXX

பொருள் 45

பல்வேறு மொழிகளைப்  பேசும் மக்கள் வாழும் பூமி இது. பல்வேறு தர்மங்களைப் பின்பற்றுவோர் வாழும் இடம் இது . அவரவர் வசிக்குமிடங்களுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது . அப்படிப்பட்ட  சிறப்புடைய பூமா தேவியானவள் நல்ல பசு மாடு அளிக்கும் பால் போல ஆயிரம் தாரைகளாக — அருவிகளாக – எனக்கு செல்வத்தைப் பொழிவாள் ஆகுக

இந்தப் பாடல் நமக்கு பல விஷயங்களைத் தெரிவிக்கிறது .முதலில் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் இடம் இந்தப் பூமி. வேத கால மக்களுக்கு வேற்று மொழி பேசுவோர் பற்றியும் தெரிந்துள்ளது. சிந்து சமவெளி எழுத்துக்களுடன் ஒருவர் பாபிலோனியாவில் காணப்படுகிறார். அவருடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இருக்கிறார். இதை பார்க்கையில் வேதகால இந்து ஒருவரே அங்கு சென்றதையும், அவர் சென்ற பாபிலோனியாவில் வேற்று மொழி பேசப்பட்டதையும் அறிகிறோம்.

பாணி என்று ரிக்வேதம் முதலிய வேதங்கள் குறிப்பிடும் மிலேச்சர்கள் Phoenecians = Panis பீனீஷியன்கள் ஆவர். அவர்களை பணத்தாசை கொண்ட (niggards)  பேய்கள் என்று வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

மேலும் பலவகை தர்மங்களைக் கடைப்பிடித்தவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. யாகம் செய்யாத ஒரு கும்பல் (Vratya, Dasyu) பற்றி வேதம் தொடர்ந்து குறிப்பிடுகிறது. இந்துக்களுக்குள்  இருந்த 90-க்கும் அதிகமான பிரிவுகள் ஆதிசங்கரர் காலம் வரை நீடித்தது. அவர்தான் பல விரும்பத் தகாத சடங்குகளை ஒழித்து இந்து மதத்தை ஆறு வகை வழிப்பாட்டுடையதாகச் செய்தார் .

மேலும் யார் யார் எப்படி எப்படி வணங்குகிறார்க்ளோ அவரவர்களுக்கு அப்படியே அருள் பாலிக்கிறேன் என்று கண்ணா பிரானே பகவத் கீதையிலும் நமக்கு உ று தி கூறுகிறார்.

இது பகவத் கீதையிலும் (4-11 மற்றும் 7-21)நம்மாழ்வார் பாசுரத்திலு ம் வருகிறது

அவரவர் தமதம தறிவறி வகை வகை

அவரவரிறையவ ரெனவடி யடைவர்கள் — நம்மாழ்வார்

முதல் திருவந்தாதியிலும் ஒரு பாசுரத்தில் இக்கருத்து வருகிறது ..

தமர் உகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே

தமர் உகந்த தெப்பேர்  மற்றப் பேர் – தமர் உகந்தது

எவ்வண்ணம் சிந்தித் திமையாதிருப்பரேல்

அவ்வண்ணம் ஆழியானாம் –

திவ்யப் பிரபந்தம் , முதல்திருவந்தாதி 44

ராமகிருஷ்ண பரம ஹம்சரும் இதை ‘யதா மத் ததா பத்’ – என்பார். ‘மதி எப்படியோ அப்படியே பாதை/ வழி’ என்பது இதன் பொருள்.

பகவத் கீதையில் (7-21) கிருஷ்ணன் கூறுகிறார் – ‘யார் யார் எந்தெந்த கடவுள் உருவத்தை  சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ  அவரவர்க்கு அந்த அந்த நம்பிக்கையே அசையாத படி செய்கிறேன்’ என்கிறார்.

கீதையின் நாலாவது ( 4-11 ) அத்தியாயத்திலும் ‘எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை நான் அவ்வாறே அனுக்கிரஹிக்கிறேன்’ என்று உறுதி அளிக்கிறார் .

ஆக வேத காலத்திலேயே மனம் போனபடி வாழ்ந்த விராத்யர்கள் இருந்ததை ரிக் வேதம் மூலம் நாம் அறிகிறோம். இவர்கள் எல்லோரும் வாழும் பூமி என்று அதர்வண வேதப் புலவன் பாடுவது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது .

ஜனம் பிப்ரதீ  பஹுதா நிவாசராம் நாநாதர்மாணம் ப்ருதிவீ யதெள கசம்

சஹஸ்ரம் தாரா த்ரவிணஸ்ய மே துஹாம் த்ருவேவ தேனுரனபஸ்ப்ருவந்தீ -45

XXXX

46– ஆவது மந்திரத்தின் பொருள்

குளிர்காலத்தில் விஷக் கொடுக்குள்ள தேளும் விஷப் பாம்பும் குகை, பாறை இடுக்குகளில் மறைந்து வாழ்கின்றன.  மழை வந்தவுடன் கிருமிகளும் புழுக்களும் ஊர்ந்து வரத் தொடங்கும். அத்தகைய  விஷ ஜந்துக்கள் எங்கள் பாதையில் குறுக்கிடாவண்ணம் அருளுக தாயே.

இது இன்றும் கிராமப்புறங்களில், கானகங்களில் காணப்படும் உண்மை நிலை. மழைக்காலம் முதல் 4 மாதங்களுக்கு வணிகர்கள் வெளியே செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதை சங்கத் தமிழ் அகத்திணைப் பாடல்கள் காட்டும். அதே போல சந்யாசிகள், 4 மாதங்களுக்கு ஒரே இடத்தில் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ அனுஷ்டிப்பர். நகர மக்களுக்கு இப்போது இது புரியாது; தெரியாது. ஒரு புறம் நன்மைகள் நிறைந்த பூமியில் இவையும் உள்ளன என்பதைப் புலவன் நினைவுபடுத்துகிறான்.

யஸ்தே ஸர்போ வ்ருஸ்சிகஸ்த்ருஷ்ட தம்ஸ்மா ஹேமந்த ஜப்தோ ப்ரு மலோ குஹா சயே

க்ரிமிர் ஜின்வத் ப்ருத்வி யத்யதேஜதி ப்ரா வ்ருஷி  தன்னஹ

ஸர்பன்மோப ஸ்ருபத் யச்சிவம் தேனை நோ ம்ருட -46 

Xxx

மந்திரத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் படிப்போருக்கு நிதி, மணி, தேவி, ஜனம், சஹஸ்ரம், நானாவித, தர்மம், தாரா , த்ரவிணம்/திரவியம் ,சர்ப்பம், விருச்சிகம், குகை, கிருமி, பிருதிவி  போன்றவை எளிதில் விளங்கும் .எளிய சொற்கள், பெரிய கருத்துக்கள்!!

தொடரும்

XXXX subham xxxx

tags- தங்கம் ,வைரம், தேளும் பாம்பும், அவரவர் தமதம ,தமர் உகந்த தெவ்வுருவம், பூமி சூக்த கட்டுரை 14,