தமிழன் கண்ட 3 அற்புத “மை” (Post No.10,608)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,608

Date uploaded in London – –    29 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் வழி ……………………… தனீ…………………..வழீ……………………

தமிழன் கண்ட 3 அற்புத “மை”

வாய்மை, உண்மை, மெய்மை  — மூன்றும் அற்புதமான சொற்கள். ஸம்ஸ்க்ருதத்தில் ஸத்யத்திற்கு (TRUTH) இப்படி மூன்று அற்புத சொற்கள் இல்லை

உள்ளத்தால் பொய்யாது வாழ்வது உண்மை ;

வாயால் பொய் சொல்லாது , தீங்கு செய்யாது வாழ்வது வாய்மை ;

உடலால் தீங்கு செய்யாது வாழ்வது மெய்மை ;

இவை அற்புதமான சொற்கள்; தமிழனின் கண்டு பிடிப்பு. மனோ , வாக், காயம் (THOUGHT, WORD AND DEED)  ஆகிய மூன்றிலும் பொய்யாது வாழ்வது இந்துக்களின் சிறப்பு. இதை இன்றும் கூட பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் சந்தியா வந்தனத்தில் கடைசியில் சொல்கிறார்கள். ஆனால் இதற்கான விசேஷ சொற்களை — வாய்மை, உண்மை, மெய்மை — என்பதை திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் மட்டுமே காணலாம்.

(வாய்மை, உண்மை என்ற இரண்டு சொற்களை வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். மெய்மை என்பது சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில் வருகிறது ; தொல்காப்பியத்தில் வரும் ‘மெய்மை’ இலக்கணம் பற்றியது )

வாய்மை விஷயத்தில் வள்ளுவனின் கருத்து தனிச் சிறப்பு உடைத்து. பொய்யும் கூட உண்மைதான்; அது நன்மை விளைவிக்கு மாயின் !!

உண்மையும் கூட தப்புதான்; அது தீமை  விளைவிக்குமாயின்!!!

இதை முன்னரே மஹாபாரதக் கதைகள் மூலம்  விளக்கிவிட்டதால் இன்று பிரஸ்தாபிக்கப்போவது இல்லை.

நம்மில் பலர்க்கு உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் ; குமர குருபரர், சகல கலாவல்லி மாலை பாடினார் – அற்புதம் நிகழ்ந்தது .

அபிராமி பட்டர் அந்தாதி பாடினார் – அமாவாசையன்று சந்திரன் உதித்தது.

ஆதி சங்கரர் , ஏழை பாப்பாத்தி வீட்டு வாசலில் நின்று , தாயே, இப்படி ஒரு வறுமையா, இந்தப்பெண்மணிக்கு, என்று கதறி, கனக தாரா ஸ்தோத்திரம் பாடினார் . அந்தப் பார்ப்பனப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது .

அதெல்லாம் சரி ! இதை நானும் உள்ளன்போடு பாடுகிறேனே! ஏன் அற்புதம் நிகழ்வதில்லை என்று நம்மில் பலர் ஐயுறுகிறோம்.

ஒரே விடைதான் ! நமக்கு ‘திரிகரண சுத்தி’ இல்லை.

மனம், வாக்கு, உடல்/காயம் மூன்றும் உண்மையைக் கடைப்பிடிப்பதில்லை. நம்முடைய எண்ணங்களை காகிதத்தில் எழுதிப் படித்தால் நமக்கே வெட்கமாக இருக்கும். எழுதத் துணியவும் மாட்டோம்.. அதே போல கடும் சொற்களை, கொடும் சொற்களை வாயாலும் மனதாலும் வீசி எறிகிறோம். கடவுள் என்ன முட்டாளா? நம்மிடம் அவர் ஏமாந்து போக?

வள்ளுவன் பல இடங்களில் “எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்”  என்று நமக்கு சொல்கிறான்.கோபம், காமம் லோபம்/பேராசை/பிறர் பொருள் நயவாமை ஆகிய மூன்றையும் விட்டால் அற்புதங்கள் செய்ய முடியும் என்கிறான். நம்மால் முடிகிறதா?

இந்தக் கட்டுரை யார் இந்த திரிகரண சுத்தியை- மனம், சொல், நடத்தை — ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்?? என்பது பற்றியது.

இது ஜராதுஷ்ட்ரர் / ஜொராஸ்டர் ஸ்தாபித்த பார்ஸி மதத்திலும் உளது. அவரது காலம் கி.மு 600ஆ அதற்கு முன்னமா என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. ஆனால் வேதத்திலும் கீதையிலும் இது தெளிவாக உள்ளது.

இதோ குறிப்புகள்

பகவத் கீதையில்

18-15

சரீர வாங் மனோபிர் யத் கர்ம ப்ராரபதே என்ற வரியில் உடல், சொல், மனது மூன்றும் குறிப்பிடப்படுகிறது .

தம்மபதத்தில் புத்தரும் இதைச் சொல்கிறார் . பிராமணர் பற்றிய 26ஆவது அத்தியாயத்தில் புத்தர் சொல்கிறார் “. எவன் ஒருவன் மனதாலும், வாக்காலும், செயலாலும் பாவம் செய்யவில்லையோ , திரிகரணங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறானோ அவனையே நான் பிராமணன் என்பேன்”.

மனு ஸ்ம்ருதி இதை மேலும் ஒரு படி மேலே தூக்கிச் செல்கிறது.(12-9)

உடலால் பொய்யாக வாழ்பவன், அடுத்த ஜன்மத்தில் மரம் செடிகொடிகளாக, கல், மண்ணாக பிறக்கிறான் ;

வாக்கால் பொய்யாக வாழ்பவன் பறவைகளாக, மிருகங்களாகப் பிறப்பான்;

எண்ணங்களில் பொய்மை உடையவன் மிகவும் கீழ்த்தரமான பிறவிகளாக (கடைசி ஜாதி) மாறுகிறான்

xxxx

பார்ஸி மதத்தில் திரிகரண சுத்தி

பார்சி மதத்தில் 3 நல்ல குணங்கள்

ஹுமதா , ஹுக்தா ,ஹ்வர்ஷ்டா = ஸு மதி , ஸு உக்த , ஸு வரிஷ்ட

பாரசீக மொழியில் ‘ஹ’ என்பது ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸ’ என்பதாகும்.

இதனால்தான் நம்மை சிந்து நதி மக்கள் என்று சொல்லாமல் ஹிந்து என்றழைத்தனர் .

இதற்கெல்லாம் மூலம் யஜுர் வேதத்தில் உள்ளது:-

யன் மனஸா த்யாயதி தத் வாச்சா வததி

யத் வாச்சா வததி தத் கர்மா கரோதி

ஒருவனுடைய எண்ணத்தில் உதிப்பது வாக்காக மலர்கிறது ;அதையே அவன் செயலாகச் செய்கிறான்.

மஹாபாரதம், கருட புராணம் முதலியவற்றில் இது  வந்தாலும் வேதத்தில் வருவதே முதலில் வந்தவை.

இதோ மேலும் சில வேத மேற்கோள்கள் –

யச் சக்ஷுசா  மனஸா யச்ச வாச்சா உபாரிம –அதர்வண  வேதம் 6-96-3

யன்மே மனஸா  வாச்சா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம் –தைத்ரீய ஆரண்யக 10-1-12

உபநிஷதங்களை சாக்ரடீஸூம் அவரது சீடரான பிளாட்டோவும் நன்கு படித்தமைக்குப் பல சான்றுகள் உண்டு. பிளாட்டோவும் இந்த திரிகரண சுத்தியைக் குறிப்பிடுகிறார்.

–SUBHAM—

TAGS —  வாய்மை, உண்மை, மெய்மை, வேதத்தில், பார்ஸி மதம், , தமிழன், அற்புத “மை”

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! (Post No.10,253)

WRITTEN BY B KANNAN

Post No. 10,253

Date uploaded in London – 25 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


தமிழா கவனி, தமிழகம் ஒப்பற்றது!                                                                                           பா.கண்ணன், தில்லி

அன்பார்ந்த ஞானமயம் தமிழ் நெஞ்சங்களுக்குத் தில்லியிலிருந்து கண்ணன் வணக்கம் பல.

தமிழ் மொழி மீது இணையிலாப் பற்று கொண்ட நம் “முண்டாசுக் கவிஞர்” பாரதியாரின் நினைவு நூற்றாண்டைப் போற்றும் வகையில் இக் கட்டுரையை எழுத முனைகிறேன்..


சமீபத்தில் செந்தமிழ்ச் செல்வர் திரு. பெரியசாமித் தூரன், பாரதியின் எண்ணங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் ஆகியவற்றைத் தொகுத்தளித்துள்ள இரு புத்தகங்களில் ஒன்றான “பாரதியும் தமிழகமும்” என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. மற்றொன்று “பாரதியும் உலகமும்” என்பது. அதிலுள்ள ஒரு அத்தியாயம் ” தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்” என்பதாகும். சுவாரசியமிக்க அதன் சாராம்சத்தையே இங்குத் தரவிருக்கிறேன்.

தூரன் அவர்கள் இந்நூலில் பாரதியார் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய இணையற்ற சேவையை எடுத்துக்காட்ட முனைந்துள்ளார். தாழ்வு உணர்ச்சியில் மூழ்கி, வீழ்ந்துக் கிடந்த தமிழர்களை, அவர்களின் பெருமையை உணர்ந்து வீறுகொண்டு எழுவதற்கு பாரதி ஓங்கி குரல் கொடுத்தது நன்றாகப் புலப்படுகிறது. அதனால் அல்லவோ தமிழர்கள்


தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தெழுந்து முழு வீச்சில் விடுதலை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தமிழர் கும்பகர்ணனைப் போல் தூங்கிக் கொண்டிருந்தனர். கையாலாகாத்தனமும், வருமுன் காப்பது எப்படி என்றுத் தெரியாமலும், வருவதைச் சமாளிப்பது எப்படி எனச் சோர்வுற்று, குனிந்த தலை நிமிராமல் உறங்கிக் கொண்டிருந்தனர். தமிழகத்தின் அருமைப் பெருமைகளை உணராதது போல், தமிழ் மொழியின் உயர்வையும் அறிந்துக் கொள்ளவில்லை. அந்நிய
மொழியின் ஆதிக்கத்தில் மகுடி நாதத்துக்குக் கட்டுண்டிருக்கும் நாகம் போல் கிடந்தனர். அன்றாட நடை, உடை பாவனை, பழக்க வழக்கங்களில் ஆங்கில மோகம் இழையோடிற்று. அவர்களை எப்படி எழுப்புவது, தமிழ் எங்கே? என்று அங்கலாய்ந்துப் போகிறார் கவிஞர்.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் ஆங்கில மோகத்தில் உழன்று அதற்கேற்ப பி.ஏ.படித்துத் தேர்ச்சிப் பெற்ற ஓர் இளைஞனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாரதி. அவனுக்கும், அவன் சந்திக்கும் ஒரு புலவனுக்கும் இடையேநடக்கும் வாதப் பிரதிவாதம் நம்மைச் சிந்திக்கவும், செயலாற்றவும் வைக்கிறது. தன்னையே அந்தப் புலவனாக உருவகப் படுத்திக் கொள்கிறார் பாரதி….
உரையாடல் இப்படி ஆரம்பமாகி முன்னேறுகிறது…..
 
இளைஞன் : ஐயா, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத மொழி உண்டென்றால் அது தமிழ் தான்! அது அழிந்தால்தான் நம் நாடு பிழைக்கும்
 
புலவர்: அப்பனே, தமிழின் மேல் உனக்கு ஏன் அப்படியோர் வன்மம், வெறுப்பு? அது என்ன செய்தது?
 
“நவீன நாகரிகத்தின் போக்கைப் பற்றி உமக்குத் தெரியாது போலிருக்கிறது, பாவம் அய்யா, நீங்கள்!. பரிணாம வளர்ச்சியில் காட்டு மனிதன்  உபயோகித்தக் காட்டுமிராண்டி பாஷை தமிழ். இப்போதோ உலகம் விஞ்ஞான ஆராய்ச்சியால் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அத்தகைய அரிய உத்திகளை உமது பண்டைக்காலத்துத் தமிழிலே கொண்டு நுழைப்பதுப் பிரம்மப் பிரயத்தனமாய் இருக்கிறது. ‘நாம்’ நாகரிகப் பாதையில் பயணிக்க வேண்டுமானால் தமிழ் மொழியை முழுவதும் கைவிட வேண்டியது மிகமிக அவசியம்”.

“ஆமாம், ‘நாம்’ என்று யாரைச் சேர்த்துச் சொல்கிறாய்? உன்னைப் பார்த்தால் தான் ‘அப்பாவி’ போல் தோன்றுகிறது! ஏதோ எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்த மேதாவி என்ற எண்ணத்தில் மிதக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் போன்று ஆங்கிலம் படிக்காத ஜனங்கள் உள்ளூர் மொழியானத் தமிழில் தானே பேச முடியும். காலங்காலமாய் அவர்கள் பேசி வரும் தமிழ் பாஷை அவர்களின் உயிருடன் ஒன்றிவிட்டது. மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு பாஷை என்பது ஒரு கைக்கண்ணாடி போன்றது. நாட்டு மக்களின் அறிவுத் திறன் உயர அதற்குத் தகுந்தாற்போல் அந்நாட்டின் மொழியும் தேர்ச்சிப் பெறுகிறது. அந்நிய ஆதிக்கத்தினால் சுணங்கிப் போயிருக்கும் தமிழர்களால் வேற்றுத் தேசத்தவர்களுக்கு இணையாக முன்னேற முடியவில்லை என்பது உண்மை தான். அதற்குப் பாஷையை மட்டுமே குற்றம் காண்பது எவ்விதத்தில் நியாயம்? ‘ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல் என்றாளாம்’ என்பது போலல்லவோ கதைக்கிறாய்!”

“ஐயா, சாமி! போகாத ஊருக்கு ஏன் வழி தேடிக் கொண்டிருக்கிறீர்? விஷயத்துக்கு, வாரும்! ஐரோப்பிய விஞ்ஞானிகள் மனிதகுலத்துக்குத் தேவைப்படும் பற்பல புது இயந்திரங்களையும், புதியக் கருத்துக்களையும் கண்டுப்பிடித்துக் கொண்டி ருக்கிறார்கள். அதுக்கெல்லாம் தமிழில் பெயரும் கிடையாது ஒரு மண்ணும் இல்லை! என்ன அவலம்! இதற்கு என்ன சொல்கிறீர், மகானுபாவரே?”

“ஆகா, சாதுரியமாகப் பேசுவதாக நினைப்போ? நீ சொல்லும் கருத்துக்கள் எல்லாம் மக்களிடையே அறிமுகமாகி, வழக்கத்தில் வந்த பிறகல்லவா தமிழில் இடம் பெறும்? அந்நிய ஆதிக்கத்தில் நம்மவற்குப் படிப்பறிவு கிடைப்பதே குதிரைக் கொம்பாய் இருக்கிறதே! அறிவு சுருங்கிப் போயிருக்கிறார்கள். ஆனாலும்,தந்தி மூலம் அனுப்பும் செய்திகளுக்கு வார்த்தைகளை அமைத்துக் கொள்ளவில்லையா? ஆடை அணியாத அநாகரீக மக்களின் பாஷையில் பட்டுத்துணிக்குப் பெயர் இல்லை யென்றால் அவர்களின் மொழியைக் குற்றம் சொல்ல முடியுமா? அதற்குக் காலம் பிடிக்கும். கண்களில் கோளாறு என்றால்
மருந்தினால் சரி செய்துக் கொள்ளாமல் அதற்குப் பதில் ஓர் அயல்நாட்டுக் கண்ணைப் பொருத்திக்கொள்வேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?”

“ஐயா, நிறுத்தும்! ஏன் இப்படிக் கதை அளக்கிறீர்? தமிழ் பாஷைக்கு இயற்கையிலேயே நவீன விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதே உண்மை. விஞ்ஞானம் எதற்கு, கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள். பிரபல கவிகள் பிரபு டென்னிசன், மில்டன் எங்கே, ஆங்கிலப் புலமையற்ற உங்கள் தமிழ்ப் புலவர்கள் எங்கே,ஒப்பிடவே முடியாதே?” பாவம், அவனுக்கு எங்கே தெரியும், அந்தப் புலவருக்கும் ஆங்கிலக் கவிஞன் பி.சி.ஷெல்லிக்கும் இடையேயுள்ள கவிதை ரசனை?



இப்போது நிஜமாகவே புலவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விட்டது. “அப்பனே! ஏன் இப்படி ஒரு புரிதலுமின்றி உளறுகிறாய்? தற்போதையச் சூழ்நிலையில் நம் மக்களின் உடல், மனம் எல்லாம் துவண்டுப் போய்க் கிடக்கிறது. மரம் ஒன்றில் பற்றியுள்ள நோயைத் தீர்த்தப் பிறகுதானே அதன் பழம் ருசிக்கச் செய்யும்? முதலில் அதைச் செய்ய வேண்டும். தமிழ்ப் புலவர்களான இளங்கோ அடிகள், கம்பர், திருத்தக்க தேவர் ஆகியோரது அருமையானப் பாடல்களைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்க ஞாயமே இல்லையே!”

“சும்மா தமிழ், தமிழ் என்று இந்தப் ‘பெனிடிக்டரி வெர்ஸ்’ எல்லாம் என்னிடம் பாடிக் காட்டாதீர்கள். கம்பன்,டம்பன் எல்லாம் கொஞ்சம் காலேஜில் படித்திருக்கிறேன் நானும்!”

“அவர்கள் சொல்லிக் கொடுத்து, நீ அறிந்துக் கொண்டதைத் தான் கண்கூடாகப் பார்க்கிறேனே! அதனால் தான் உனக்குத் தமிழ், தமிழ் பேசும் மக்கள் மீது இப்படியொரு காட்டம்! நீ போற்றும் ஆங்கிலக் கவிஞர்களுள் அலெக்சாண்டர் போப் மற்றும் பல வித்துவான்கள் தமிழ்ப் புலவர்களின் கவித் திறமைகளைப் பற்றி வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா?”

இந்தப் பித்தனிடம் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று இளைஞன் நினைத்துவிட்டான், போலும். மௌனியாகி விட்டான். அதற்காகப் புலவரும் ஓயவில்லை.

“கம்பனைப் பற்றிப் படித்திருக்கிறேன் என்கிறாயே, கம்பராமாயணத்தின் மகிமையை அறிவாயோ? சொல்கிறேன், கேள்… சீதா தேவி அசோகவனத்தில் வைக்கப் பட்டிருந்த சமயம், ராமபிரானைப் பற்றியபழைய நினைவுகளில் மூழ்கி வருத்தப்படுவதாகச் சில பாடல்களைக் கம்பர் இயற்றியிருக்கிறார். அவற்றுள் ஒன்றை விளக்கிக் கூறுகிறேன், கேள். அரியாசனம் ஏறி, ராஜ்ஜியப் பாரத்தை ஏற்றுக் கொள் என்று கட்டளை இடப்பட்டச் சமயத்திலும், அயோத்தியை விட்டு காட்டுக்குச் செல் என்றுச் சொல்லப்பட்ட போதும், ஒரே மாதிரி மலர்ந்த முகத்துடன் விளங்கினான் என்பதை ஜானகி நினைத்துப் பார்க்கிறாளாம்.

அந்தப் பாடல் இதோ….
 மெய்த் திருப்பதம் மேவு’ என்ற போதினும்,
 ‘இந்திருத் துறந்து ஏகு’ என்ற போதினும்,
 சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
 ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். 20  (சுந்தர காண்டம். காட்சிப் படலம்)

அப்பனே! இதில் ஓசை, சொல் நயம், பொருள் இன்பம் எல்லாம் பொதிந்திருப்பதைக் காணலாம். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இதுபோல் இன்னும் பல பாடல்கள் நூல் பூராவும் விரவிக் கிடக்கின்றன. மேலும் ஒன்று, கேளப்பா! ( இது அந்தப் புலவன் குறிப்பிடாததுதான். இருந்தாலும் அந்த இளைஞனுக்கு உறைக்கும் “வண்ணம்” மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம் எனும் அனுமானத்தில் இந்த இடைச் செருகலை நேயர்களின் ரசனைக்காக முன் வைக்கிறேன்).

கவி புனையும் கம்பரிடம் தமிழ்ச் சொற்கள் ஓடி வந்து எம்மையும் கவிதையில் சேர்த்து விடு, சேர்த்து விடு என்று கெஞ்சுமாம். இவ்வாறு ஒரு நாட்டுப்புற வழக்கு உண்டு. கம்பரின் கவிதையில் சொற்சேர்க்கை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இடத்திற்கும், சூழலுக்கும், காலத்திற்கும் தக்கவாறு சொற்கள் கவிதையில் அமைந்த விதம் படித்து இன்பம் அடைவதற்கு உரியது, நண்பரே!

கம்பர் வண்ணம் என்ற சொல்லை வேறுவேறு பொருள்களில் கையாண்டு ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். இச்சொல்லை வைத்தே பாதி இராமாயணக் கதையைக் கூறி முடித்து விடுவதாக அறிஞர்கள் கூறுவர்.   அப்பாடல் வருமாறு:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
     இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
     துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
     மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
     கால்வண்ணம் இங்குக் கண்டேன்

(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

(இவ்வண்ணம் = இப்படி; நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்தபடி; உய்வண்ணம் = நற்கதி பெறும் வழி; துயர்வண்ணம் = துன்பம்; மைவண்ணம் = கருநிறம்; மழைவண்ணம் = மேக நிறத்தை ஒத்த கரிய நிறம்; கைவண்ணம் =கையின் திறமை; கால் வண்ணம் = காலின் திறம்)

இராமனுடைய திருவடி பட்ட அளவில் கல்லாகக் கிடந்த அகலிகை உயிர் பெற்ற பெண்ணாக மாறுகிறாள்; சாப விமோசனம் பெறுகிறாள். அதனைக் கண்ட விசுவாமித்திர முனிவர் இராமனைப் புகழ்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. “கரிய நிறத்தை உடைய இராமனே! இனி இந்த உலகிற்குத் துன்பம் உண்டோ? நின் வில் ஆற்றலால் தாடகை என்ற அரக்கி மாண்டாள். உன் கைத்திறமையை அங்குப் பார்த்தோம். உன் பாதம் பட்டவுடன் அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். உன் காலின் திறமையை இங்குப் பார்த்தோம்” என்று விசுவாமித்திரர் இராமனைப் புகழும் பாடலில் வண்ணம் என்ற ஒரு சொல் நிறம், திறம்  (திறமை)
என்னும் இரு பொருளில் திரும்பத் திரும்ப வந்து கவிதையைச் சிறப்படையச் செய்துள்ளதைப் படித்து மகிழலாம். கம்பரின் வர்ணனையைப் படிக்கையில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உனக்கு ஞாபகம் வரவில்லை என்பது துரதிருஷ்ட வசமானது!

சாப்பிட்ட ஓரு மாம்பழம் அழுகிய நிலையில் இருந்தால் அவ்வகை மாங்கனியே உண்ண அருகதை அற்றது என ஒதுக்கிவிடுவாயோ? தமிழ் பாஷையும், தமிழ் மக்களும் தாழ்மையுற்றிருக்கும் நிலை அறிந்தும் ஒரு மொழியையே குற்றம் கூறுவது எவ்விதத்தில் நியாயம்? கோபாலகிருஷ்ண கோகலே, பால கங்காதர திலகர் ஆகியோரின் வழிகாட்டுதலில் நம் பாரத தேசம் அந்நியரின் பிடியிலிருந்துச் சுதந்திரம் பெற்று, அனைத்துச் செல்வங்களையும் அடைந்த பிறகு, நம் தமிழ் மொழிக்கு கிடைக்கும் மேன்மையைப் பார்க்கத்தான் போகிறாய். அப்போது ஆச்சரியப்பட்டுப் போவாய் என்பது சர்வ நிச்சயம்!” என்று மடைதிறந்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்தார்.

அதுதான் எத்தனை நிதர்சனமான உண்மை! அதைத்தான் கண்கூடாகப் பார்க்கிறோமே!

அந்தப் புலவர் உரைத்த அறிவுரையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் வீண்தானோ? ஆங்கில மோகம் பீடிக்கப்பட்ட இளைஞனோ எதற்கும் கவலைப்படாமல்,’இழந்த சொர்க்கம்’, ‘மீண்ட சொர்க்கம்’ கனவுகளில் ஆழ்ந்து தனி ஆளாக மனதில் ஆங்கிலக் கவிதைகளை அறுவடை (THE SOLITARY REAPER) செய்து கொண்டிருந்தான் !

 “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
 இனிதாவ தெங்கும் காணோம்
 யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
 வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
 பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
 உண்மை ஒன்றும் புகழ்ச்சியில்லை!” என்ற பாரதியின் முழக்கம் நம் காதுகளில் ரீங்காரமிட்ட வண்ணம் உள்ளது!

 தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!

 ஓம் பராசக்தி!   ஜெய்ஹிந்த்!

tags – தமிழன் , சொல்லடா, தலை, தமிழா கவனி