2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!

arumuga navalar
Sri Lanka stamp on Arumuga Navalar, great Tamil scholar.

மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 2
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1293 தேதி: 17 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஐந்தாவது கட்டுரை.

கட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது இரண்டாம் பகுதி.

17.யானை மூலம் குழந்தைக் கொலை
அத்தியாயம் 35:– சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” — என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை முதுகிலேற்றிக் கொண்டு சென்று அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. மூர்த்தி நாயனாரையும் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனையும் யானையே மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறது.

சங்க இலக்கியத்திலும் இதை ஒட்டிய ஒரு காட்சி உண்டு.

புறநானூறு பாடல் 46 (கோவூர்க்கிழார் பாடியது)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தனது எதிரியான மலையமான் குழந்தைகளை யானையின் காலடியில் வைத்து நசுக்குங்கள் என்று உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு பதறிப்போய் கோவூர்கிழார் என்னும் புலவர் ஓடோடி வருகிறார்.
“மன்னா, என்ன காரியம் செய்கிறாய்? ஒரு புறாவுக்காக தன்னுயிரையே கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் நீ. இவர்களோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகள். பூதாகார கருப்பு உருவம் உடைய யானையைக் கண்டு மகிழக்கூடிய வயது. புது முகங்களைக் கண்டால் மருளுவர். உடனே இந்த இழி செயலை நிறுத்து” — என்கிறார். மன்னனும் புலவனின் நல்லுரைக்குச் செவி சாய்க்கிறான். இதோ அப்பாடல்:—

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்டு அழூ உம் அழா அல் மறந்த
புன் தலைச் சிறார்; மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்மே! (புறப் பாடல் 46)

ganesh
Sri Lanka stamp with Lord Ganesh

18.நாகர் பட்டியல்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—
நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்):
கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.
(( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க))

19.கஜபாகு
இலங்கை வரலாறு தமிழர்களுக்குச் செய்த பெரிய உதவி கஜபாகு பற்றிய குறிப்பாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலம்பு. இதன் மூலம் சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது உறுதி ஆயிற்று.
கஜபாகு ஆட்சி மகாவம்ச 35 ஆம் அத்தியாயத்தில் உளது

new year stamp
Sri Lanka Stamp on New Year

2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!

20.மதுரைப் பாண்டியன்
மகாவம்சத்தில் மிகவும் சுவையான விஷயம் பாண்டிய நாட்டு இளவரசிகள் இலங்கைக்கு வந்ததாகும்; இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து வந்த விஜயன், குவென்னா என்ற ஒரு யக்ஷிணியைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை ( ஒரு மகன், ஒரு மகள்) ஆகிறான். ஆனால் உயர்குலத்து (க்ஷத்ரிய) மங்கை ஒருவளை ராணியாகப் பெறும்வரை மன்னன் ஆக முடிசூட்ட மாட்டேன் என்கிறான். உடனே மந்திரிமார்கள், ஒரு தூதர் குழுவை அமைத்து, முத்துக்களையும் விலை உயர்ந்த நகைகளையும் கொடுத்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்க அனுப்புகின்றனர்.

தூதர்களும் கப்பல் மூலம் சென்று மதுரை மாநகரை அடைகின்றனர். (இது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பதால் முதல் தமிழ் சங்கம் கொலு வீற்றிருந்த தென் மதுரையாக இருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய மதுரை அல்ல)

மதுரையில் பாண்டிய மன்னனும் மந்திரிகளைக் கலந்தாலோசித்து தன் பெண்ண அனுப்ப முடிவு செய்கிறான். உடனே மதுரை நகர தெருக்களில் தண்டோரா போடுகிறார்கள்:

“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…… மதுரை மாமன்னனின் மகள் — இளவரசியை — விஜனுக்கு மணம் முடிக்கப் போகிறோம். அங்குள்ள மந்திரிமார்களுக்கும் பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெண்கள் தேவை. இதுவரை நூறு பெண்கள் வந்து இருக்கிறார்கள். இன்னும் யார் யார் இலங்கைத் தீவுக்குப் போக விருப்பமோ அவர்கள் அனைவரும் இரண்டு மாற்று உடைகளுடன் வீட்டு வாசலில் நின்றால் மன்னரின் ஆட்கள் அழைத்துச் செல்வர். பெண்களை அனுப்புவோருக்கு மாமன்னன் நஷ்ட ஈடும் வங்குவார். தகுதிக்கு ஏற்ப இலங்கை செல்லும் பெண்களுக்கு யானை, குதிரை, தேர் வாகன வசதிகளும் அனுப்பப்படும்” — இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமான தமிழ்ப் பெண்கள் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்த இரண்டு உடைகளுடன் மன்னனும் ஆடை அணிகலன்களை வழங்கி கப்பலில் ஏற்றி விடுகிறான்.

AnandaCoomaraswamy
Sri Lanka Stamp on Ananda Coomaswamy, great art historian

கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு முன்கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இவர்கள் இலங்கையில் மகாதிட்டு என்னும் இடத்தில் கரை இறங்கினர்.

((ஆதாரம்: மகாவம்சம் அத்தியாயம் 7))

பின்னர் பழைய மனைவி குவென்னாவை, விஜயன் கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுத்து வழியனுப்பியதையும், அவளை யக்ஷர்களில் ஒருவனே, ஒரே குத்தில் கொன்றதையும் மஹாவம்சப் படுகொலைகள் கட்டுரையில் தந்துவிட்டேன்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மஹாவம்ச வரி “18 குடிகள்”. தமிழ்நாட்டில் அகஸ்தியர் குடியேறியபோது வடக்கில் இருந்து 18 குடிகளை அழைத்துவந்தார் என்பது நச்சினார்க்கினியர் உரைதரும் விஷயம்!!

மஹாவம்சத்தை எல்லா தமிழர்களும் படிக்கவேண்டும். இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இன்னும் சில சுவையான விஷயங்களைத் தருவேன்.

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

contact swami_48@yahoo.com