ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

Written by S NAGARAJAN

Post No.2216

Date: 5   October 2015

Time uploaded in London: 16-21

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

தேவார சுகம்

தமிழாகரனின் அருட்செயல்கள்!

.நாகராஜன்

தமிழாகரன்

தமிழக வரலாற்றில் பொன்னேட்டினால் பொறிக்க வேண்டிய ஏடுகள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வாழ்ந்த காலம்!

அறம் தலை நிறுத்த, மறத்தை நீக்க அவதாரங்கள் தோன்றுவது இந்து மத கொள்கையின் படி இடைவிடாத சுழற்சி கொண்ட ஒரு தத்துவமாகும்.

இப்படிப்பட்ட அவதாரங்களுள் முருகனே தோன்றியது போல வந்த இளம் பாலகன் திருஞானசம்பந்தர்.

முருகனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் ‘எண்ணி’ மாளா. எண்ணி, நினைக்கவும் அதிசயம், எண்ணிக்கையிலும் அதிசயம். (இரண்டு ‘எண்ணி’ போட்டுக் கொள்ளலாம். எண்ணி எண்ணி மாளா!)

இளமை, தேவியிடம் பால் அருந்தியது, துடிப்பு, ஆற்றல், எதிலும் வெற்றி, சூர சம்ஹாரம் (சமண சம்ஹாரம் என அர்த்தம் கொள்க), பக்தர்களுக்கு அருள் பாலிப்பு, இப்படிப் பல ஒற்றுமைகளுள் தலையாய ஒன்று தமிழை உடலாகத் தரித்தது.

பல சந்த வகைகளையும், புதுப் பாணிகளையும், உவமான உவமேயங்களையும், பல்வேறு தோஷ நிவர்த்திக்கான பதிகங்களையும், இறைவனின் பெருமையைச் சொல்லும் பாடல்களையும் தம் பாக்களில் தந்தவர் ஞான சம்பந்தர். பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள் + பதிக பலனைச் சொல்லும் பாடல் ஒன்று, ஆக மொத்தம் பதினொன்று) என்பதைக் கணக்கிட்டால் வருவது ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் பாடல்கள். அடேயப்பா என்று சொல்ல வைக்கும் பெரிய தொகை. அந்தப் பாடல்களை மூன்றாம் வயது தொடங்கி பதினாறாம் வயதுக்குள் பாடி இருக்கிறார். அதாவது 4748 நாட்களுக்குள் (365 x 13 + லீப் வருட நாட்கள் 3 = 4748) அப்படியென்றால் ஒரு நாளைக்கு 37.06 பாடல்கள், அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு பாடல்; ஒரு நாழிகை = 20 நிமிடம் ) இப்படிப் பொருள் பொதிந்த இறைவன் துதிகளை இவ்வளவு சிறப்புடனும் வனப்புடனும் உலக சரித்திரத்தில் பாடியதாக கற்பனைபயாகக் கூட கதை ஒன்று இல்லை!

ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

 

அவரது அருட்செயல்களோ ஏராளம். அவற்றுள் முக்கியமான பத்தை மனதிற்குள் என்றும் நிறுத்தும் அளவு ஒரு சிறிய பாட்டில் அடக்கினார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்ய வந்த தேவனார் என்னும் பக்தர்.

ஓடம், சிவிகை, உலவாக் கிழி, அடைக்கப்                                              

பாடல், பனை, தாளம், பாலை நெய்தல், – ஏடு எதிர், வெப்பு,                                  

என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்                           

தென்புகலி வேந்தன் செயல்

 

 

என்ன அருமையான பாடல்! இன்று நமக்குக் கிடைத்துள்ள திருஞானசம்பந்தரின் பாடல்கள் சுமார் 4287இல் 1256 பாடல்களில் அவரது வரலாறு (அவர் மூலமாகவே) விளக்கப்படுவதால் அகச்சான்று நிலை பெறுகிறது. இது பொய், புனைகதை என்ற வாதம் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது! இது நாம் செய்த தவப்பயனே!

 

 

அருள் செயல்கள்

அருட்செயல்களின் பதிகங்களாவன:-

ஓடம் திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (‘கொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம்)

சிவிகைநெல்வாயில் அரத்துறைப் பதிகம் (‘எந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம்)

உலவாக் கிழிதிருவாவடுதுறைப் பதிகம் (‘இடரினும் தளரினும்என்று தொடங்கும் பதிகம்)

அடைக்கப் பாடல்மறைக்காட்டுச்சதுரம் மறைப் பதிகம்

பனைதிரு ஓத்தூர்ப் பதிகம் (‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகம்)

தாளம்திருக்கோலக்காப் பதிகம் (‘மடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகம்)

பாலை நெய்தல்திருநனிபள்ளிப் பதிகம் (‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகம்)

ஏடு எதிர்திருப்பாசுரம் (வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம்)

வெப்புதிருநீற்றுப் பதிகம் (மந்திரமாவது நீறு என்று தொடங்கும் பதிகம்)

என்புக்கு உயிர் கொடுத்தல்திரு மயிலாப்பூர்ப் பதிகம் (மட்டிட்ட புன்னை என்று தொடங்கும் பதிகம்)

ஆக பத்துப் பதிகங்கள் இந்தப் பாடல் கூறும் முக்கியப் பதிகங்கள்!

 

 

அருள் செயல்களின் வரலாறுகள்

 

இந்த அருள் செயல்களின் விவரங்கள் சுருக்கமாக இதோ:-

ஓடம்பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாடு சென்று பல தலங்களைத் தரிசித்த தமிழாகரர் காவிரியை அடைந்து ஓடமேறிகொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம் பாட ஓடம், படகோட்டி இன்றி தானாகவே திருக்கொள்ளம்புதூரை அடைந்தது!

 

சிவிகை: திருவடி நோக ஒவ்வொரு தலமாகத் தரிசித்து வந்த ஞானசம்பந்தர் மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார். அவரது துன்பம் கண்ட சிவபிரான் அரத்துறை என்ற தலத்தில் வாழும் அந்தணர் கனவில் தோன்றி, ‘ஞானசம்பந்தன் எம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்தில் முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியவற்றை வைத்துள்ளோம். அதைக் கொடுத்து அழைத்து வருக என ஆணையிட்டான். அதே போல சம்பந்தர் கனவிலும் தோன்றி, ‘யாம் தரும் பொருள்களை ஏற்று வருகஎனக் கட்டளையிட்டான்.

அரத்துறை வாழ் அந்தணர்கள் வியந்து எழுந்து அனைத்தையும் ஞானசம்பந்தருக்குத் தந்து சிவிகையில் அமர்ந்து வர வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் சிவிகையை மும்முறை வலம் வந்து ஐந்தெழுத்தை ஓதி அதில் ஆரோகணித்தார். அப்போதுஎந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம் பாடி அருளினார்.

 

 

உலவாக் கிழி:- திருப்பட்டீச்சுரத்திலிருந்து திருவாவடுதுறையை அடைந்த சம்பந்தர் தனது தந்தையாரான சிவபாத இருதயரைச் சந்தித்த போது அவர், தான் வேள்வி செய்வதற்குப் பொருள் வேண்டுமெனக் கேட்டார். தன்னிடம் பொருள் இல்லாததைக் கண்டு சம்பந்தர் வருந்தினார். உடனேஇடரினும் தளரினும்என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விண்ணப்பித்தார். உடன் சிவ கணங்களுள் ஒன்று பொற்கிழி ஒன்றை மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து, ‘இது எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி. இறைவன் உம்மிடம் அளிக்கப் பணித்துள்ளார்என்று கூறி மறைந்தது. அந்தப் பொன்னை சம்பந்தர் தந்தையிடம் கொடுக்க யாகம் நடந்தேறியது.

 

 

அடைக்கப் பாடல்:- அப்பரும் ஞானசம்பந்தரும் திருமறைக்காடு அடைந்த போது ஆலய வாயிலை அணுகினர். வேதங்களால் பூஜிக்கப்பட்ட கோவிலின் திருக் கதவுகள் திறக்கவே இல்லை. மக்களோ இன்னொரு வாயில் அமைத்து உள்ளே சென்று வழிபட்டு வருதலையும் அவர்கள் கண்டனர். அப்பர்பண்ணினேர் மொழியாள்என்ற பதிகத்தைப் பாடினார். பாடலின் சுவையால் மகிழ்ந்த சிவபெருமான் கதவுகள் திறக்கும்படி அருளினார். இருவரும் உள்ளே சென்று வணங்கினர். அப்பர் சம்பந்தரை நோக்கி, இனி இக்கதவுகள் திறக்கவும் அடைக்கவும் இருக்கும்படி இருத்தல் வேண்டும். நீங்கள் இப்போது இக்கதவுகள் மூடுவதற்கு பாடல் பாடி அருளுகஎன்றார். அது கேட்டு சம்பந்தரும், ‘சதுரம் மறைஎனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். கதவுகள் மூடின.

 

 

பனை:- ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக் கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என வேண்டினர். சம்பந்தர் உடனேபூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள் பெண்பனைகளாயின!

 

 

தாளம் :- சம்பந்தர் திருக்கோலக்கா இறைவனைத் துதிக்கும் போதுமடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகத்தைத் தம் கைகளால் தாளம் இட்டுப் பாடினார். அவர் கைகள் சிவந்தன. இதைக் கண்ட இறைவன் அவருக்கு திரு ஐந்தெழுத்து எழுதப்பட்ட பொன்னாலாகிய பொற்றாளத்தை அருளிக் கொடுத்தார். அத்தாளத்தைப் பெற்ற சம்பந்தர் பதிகத்தைப் பொற்றாளமிட்டுப் பாடினார்.

 

 

பாலை நெய்தல் :- சம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் அவதரித்த திருத்தலம் திரு நனிபள்ளி. அங்கு அவர் செல்லும் போது அவர் பாதம் நோவதைக் காணச் சகியாத அவரது தந்தையார் அவரைத் தம் தோள் மீது அமர்த்தி நடக்க ஆரம்பித்தார். நனி பள்ளி அடைந்த ஞானசம்பந்தர், ‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகத்தை அருளினார். அதுவரை வளம் குன்றி பாலையாக இருந்த நனிபள்ளி, சம்பந்தரின் வரவால் நெய்தலாக மாறிப் பின்னர் மருதமாயிற்று.

 

 

ஏடு எதிர் :- அனல் வாதத்தில் தோற்ற சமணர் சம்பந்தரை புனல் வாதத்திற்கு அழைத்தனர். தம் தம் கொள்கைகளை எழுதி ஆற்றில் விட எது ஆற்றினை எதிர்த்துச் செல்கிறதோ அந்தக் கொள்கை வென்றதாகக் கொள்ளப்படும் என்ற அவர்களது வாதத்தை ஏற்றுவாழ்க அந்தணர்என்ற பதிகத்தை எழுதி ஆற்றில் விடவே அது எதிர்த்துச் சென்றது. சமணர் தம் ஏடு ஆற்றோடு சென்றது. பின்னர்வன்னியும் மத்தமும்என்ற பதிகத்தை அருள அது வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோவிலின் அருகில் சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் திரு ஏடகம் என வழங்கப்படலாயிற்று.

வெப்பு :- பாண்டிய மன்னன் வெப்பு நோயால் துன்பப் பட சம்பந்தர், ‘மந்திரமாவது நீறுஎன்ற திருநீற்றுப் பதிகத்தை அருளினார். அவர், திருநீற்றைத் தடவிய அளவில் பாண்டிய மன்னனின் வெப்பு நோய் தணிந்தது.

 

என்புக்கு உயிர் கொடுத்தல் :- திரு மயிலையில் சிவ நேசச் செல்வரின் மகளான பூம்பாவை பாம்பு கடித்து இறக்கவே, அந்த பூம்பாவையின் எலும்பினை வைத்து. [மட்டிட்ட புன்னைஎன்ற பதிகம் பாடி அவளைச் சம்பந்தர் உயிர்ப்பித்தார்.

இவை தவிர இன்னும் பல அருட்செயல்கள் அவர் வாழ்வில் நடந்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளன.

தமிழ்நேசர்கள் அவற்றையெல்லாம் படிக்கப் படிக்கத் தமிழாகரனின் தமிழ் எப்படிப்பட்ட தெய்வத் தமிழ் என்பதை உணரலாம்.

 

தெய்வத் தமிழால் அனைத்தும் முடியும் என்பதைச் சொல்லத் தான் அவர் தன்னைத் தமிழ் ஆகரன் (தமிழை உடலாகக் கொண்டவன்) என்று கூறிக் கொண்டாரோ!

திருநெறிய தமிழ் வாழ்க! திருஞானசம்பந்தர் நாமம் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

 

*********